தேர்தல் ஆணைய சர்ச்சையும் பின்னணியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் நிலவுவதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
அதில், தேர்தல் ஆணையாளர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், தங்களின் கவனத்துக்கு வராமலேயே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறி, கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், எந்தவொரு நிறுவனத்திலும் கலந்தாலோசனையின் போது மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பான ஒன்றுதான். இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர், முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக அவை அமைகின்றன.
எனினும், ஒருமித்த அடிப்படையில் அல்லது பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில்தான் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மூன்று ஆணையர்கள் மட்டுமல்ல, ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்காகத் தங்களது ஆலோசனைகளை ஆணையத்துக்கு வழங்க முழு அதிகாரம் உள்ளது.
கடந்த 10 மாதங்களில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை நடத்துவது உள்ளிட்ட பல தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த ஓராண்டில் முழு ஆணையத்தின் ஒருமனதான முடிவுகளாகும்’ என்று அந்த அறிக்கையில் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து பாஜக எம்.பி. சம்பிட் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டில் தேர்தல்களை நடத்தும் மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாமலும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளாமலும், கலந்தாலோசிக்காமலும், வெறுமனே தங்களுக்குள் உடன்பட்டுக் கொண்டே இருந்தால் அதை சர்வாதிகாரம் என எதிர்க்கட்சிகள் சொல்லும்.
ஆனால் 3 தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே 14 முறை கடிதப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது 3 ஆணையர்களுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ கலந்தாலோசனையாகும். இதுபோன்ற கலந்தாலோசனைகள் உண்மையில் ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அறிகுறியாகும். 2014-ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்து வருகின்றன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாததால் அவற்றின் இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டு, ஜனநாயக அரங்கில் வீழ்ந்தன. அவதூறு பிரச்சாரத்தின் ஒரு பகுதி தேர்தல்களில் வெற்றி பெற இயலாத நிலையில், காங்கிரஸ் நமது அரசியல் சாசன அமைப்புகளை தாக்கத் தொடங்கி, அவற்றை அவதூறு செய்ய முயல்கிறது. தேர்தல் ஆணையம் மீதான விமர்சனமும் அந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான்” என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய விவகாரம் குறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “வாக்குத் திருட்டு என்பது மக்களுக்கு எதிரான குற்றம். பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் தேசத்துரோகம் செய்துள்ளன” என்று பதிவிட்டார். “உங்கள் நேரம் வரும்போது, தப்பிக்க முடியாது” என தேர்தல் அதிகாரிகளை எச்சரிக்கும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனே பதவி நீக்கம் செய்துவிட்டு, மேற்கு வங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “எஸ்ஐஆர் நடைமுறைகள் சட்டவிரோதமானவை. கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்துவிட்டு புதிய தேர்தல்களை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், ‘தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.