எப்படி ‘மிஸ்’ ஆச்சு? - திமுக ஆய்வுக் குழு பட்டியல் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்த திமுக தோல்வியடைந்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட 19 குழுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அதன்படி திமுக கள ஆய்வுக் குழுக்கள் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சென்னையில் மு.க.ஸ்டாலினிடம் கள ஆய்வு குழுக்கள் வழங்கின.

அந்த அறிக்கையில் திமுக தோல்விக்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கம், ஆவின் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் நடத்தாததால் திமுக மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

அறநிலையத் துறை திருக்கோயில்களில் அறங்காவலர் குழு நியமனப் பொறுப்புகளில், அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்தவர்களுக்கும், தனக்கு நெருக்கமான நபர்களுக்கு மட்டுமே சேகர்பாபு பொறுப்புகள் வழங்கியது கட்சிக்குள் மற்ற நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பொதுமக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல அவர்களின் உதவியாளர்களே முட்டுக்கட்டை போட்டுள்ளனர். பலமுறை காத்திருந்தும் அமைச்சர்களைச் சந்திக்க முடியாமல் மக்கள் திரும்பி செல்லும் சூழல் ஏற்பட்டதால், திமுக மீது மக்களுக்கு எதிர்ப்பு மனநிலை உருவாகியது.

தேர்தல் களத்தில் திமுக அரசு, திமுக கட்சி என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டது. இதனால் தேர்தலில் நிலையான வாக்காளர்களை திமுக உருவாக்க முடியாமல் போய்விட்டது. பொதுமக்கள் கேட்கும் அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கேட்கும் திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர மகளிர் உரிமைத் தொகை போதுமான எண்ணிக்கையில் கொடுக்காமல் போனதால், உரிமைத்தொகை கிடைக்காத பெண்களிடம் திமுக மீது அவநம்பிக்கை ஏற்பட்டதாகவும், பெண்களிடம் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை தலைமை உட்பட மாவட்ட நிர்வாகிகள் சரியாக கணிக்கத் தவறி விட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களின் சக்தியை திமுக முழுமையாக பயன்படுத்தவில்லை. கட்சி பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகளைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களை தேர்தல் பணிக்கும் பயன்படுத்தவில்லை என்பன உட்பட பல்வேறு குறைபாடுகள் கூறப்பட்டுள்ளன.

எப்படி ‘மிஸ்’ ஆச்சு? - திமுக ஆய்வுக் குழு பட்டியல் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
விஜய்யின் ஒரு மாத ஆட்சி எப்படி? - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in