தீயாய் வேலை செய்யும் திமுக... ‘ஆக்ஷன்’ மோடில் பாஜக!
திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவித்து மைக்ரோ லெவலில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. முதல்வர் ஒருபக்கம், மாவட்ட வாரியாக அரசு விழாக்களில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். இன்னொரு பக்கம், மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி கட்சியினரை களத்துக்கு தயார்படுத்தி வருகிறார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி.
அண்மையில் திருவண்ணாமலையில், வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி பலம் காட்டினார். இதேபோல், திமுக மகளிரணியும் மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டு, முதல் மாநாட்டை திருப்பூரில் நடத்த ஆயத்தமாகி வருகிறது. திமுக இப்படி தீயாய் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் முக்கிய தளபதிகளை முடக்கிப் போடுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கி இருக்கிறது பாஜக.
இதை வெளிப்படையாகவே போட்டு உடைத்திருக்கும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் லிஸ்ட் கையில் இருக்கு. யாரெல்லாம் உள்ள போறாங்க... யாரெல்லாம் வெளியே இருக்கப் போறாங்கன்னு சீக்கிரம் தெரியும். டெல்லியைப் போலவே தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்று பேசியிருப்பதைப் பார்த்தாலே திமுக-வை திணறடிக்கும் ‘சீரியஸ்’ திட்டங்கள் பாஜக கையில் இருப்பது தெரிகிறது.
ஏற்கெனவே செந்தில் பாலாஜியை ஓராண்டு காலம் சிறைக்குள் முடக்கி மிரட்டினார்கள். அடுத்ததாக அமைச்சர் நேரு குடும்பத்தை வளைக்கும் விதமாக புகார் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் எந்த நேரத்திலும் நேருவை நோக்கி விசாரணைத் தோட்டாக்கள் பாயலாம். ஏற்கெனவே, அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை திரட்டி வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீதும் எந்த நேரத்திலும் ஆக்ஷன் பாயலாம். இதேபோல் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கிலும் திகில் திருப்பங்கள் வரலாம்.
இவர்களைத் தவிர, சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கி இருக்கும் இன்னும் சில அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய தலைகளையும் பாஜக, தேர்தல் சமயத்தில் சுற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் என்கிறார்கள். இந்த நடவடிக்கைகளை எல்லாம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தி ஆளும் கட்சியை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்பதற்காகவே விசாரணை அமைப்புகளை இப்போதைக்கு மட்டுப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்படியெல்லாம்தான் போகும் என்பதை திமுக தலைமையும் தெளிவாகத் தெரிந்தே வைத்திருக்கிறது. அதனால் தான் “நேர் வழியில் நம்மை எதிர்க்க முடியாத எதிரிகள் குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு கடுகளவும் இடம் தரக்கூடாது. வெற்றியை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ, அசதியோ கூடாது. இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும்” என்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக-வை பாஜக முழு பலத்துடன் ஓடவிடுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.