தாராபுரம், மதுராந்தகத்தில் திமுகவுக்கு ‘ஆறுதல்’, அதிமுகவுக்கு ‘சறுக்கல்’
மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் முக்கியமான கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட திமுக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் 64,373 வாக்குகளை பெற்ற திமுகவுக்கு, தற்போது 57,370 வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் வாக்கு எண்ணிக்கை குறைந்தபோதும், அதன் வாக்கு சதவீதம் அதே நிலையில் நீடிக்கிறது.
மதுராந்தகத்தில் கடந்த முறை 59,838 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்த திமுக, தற்போது 54,008 வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. எனினும், அதன் வாக்கு சதவீதம் சுமார் ஒரு சதவீதம் குறைந்துள்ளது. திமுக தனக்கான வாக்கு வங்கியை தக்க வைத்திருப்பது இந்த முடிவுகள் மூலம் தெரிகிறது. எனினும், இதை மட்டுமே வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியான தவெகவின் எழுச்சியை வீழ்த்திவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த 32 சதவீத வாக்குகளைத் தாண்டி, முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்களை ஈர்த்தால் மட்டுமே இனி வரும் தேர்தல்களில் வெற்றியை வசப்படுத்த முடியும். காலத்துக்கேற்ப புதிய தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப, கட்சி மறுசீரமைப்புப் பணிகளை திமுக விரைந்து முன்னெடுக்குமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே, தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகி, தவெக வேட்பாளராக போட்டியிட்ட சத்யபாமாவின் செயல்பாட்டை அதிமுகவினர் ஏற்கமாட்டார்கள் என்பதால் இடைத்தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றிபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நம்பினார். ஆனால் தவெக வெற்றி பெற்றது.
இதேபோல் மதுராந்தகம் தொகுதியில், அதிமுகவிலிருந்து விலகி, தவெக வேட்பாளராக போட்டியிடும் மரகதத்தின் நடவடிக்கையை அதிமுகவினர் மன்னிக்க மாட்டார்கள். எனவே வெற்றி பெறுவோம் என பழனிசாமி நம்பிய நிலையில் இங்கும் அதிமுக தோற்றது. கடந்த தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் சிலர் பகிர்ந்த தகவல்களைப் பார்ப்போம்.
“இவ்விரு தொகுதிகளிலும் கிராமப்புறங்களில் தான் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைத்தன. அதிமுகவில் கடந்த தேர்தலில் பாமக, தமாக கட்சிகள் கூட்டணியில் இருந்தன. நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தனர். இந்தத் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, அத்தொகுதிகளில் அதிமுக சார்பில் வென்ற மரகதம், சத்யபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தபோது அதிமுகவினர் பலரும் தவெகவில் இணைந்துவிட்டனர்.
மதுராந்தகம் தனித் தொகுதியாக இருந்தாலும், வன்னியர்கள் வலுவாக இருக்கும் நிலையில், பாமக மறைமுகமாக தவெகவுக்கு ஆதரவளித்தது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் அதிமுக வன்னியர்களின் முகமாக விளங்கும் சி.வி.சண்முகம் இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வராததால், கடந்த தேர்தலைப் போல வன்னியர்கள் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.
அதேபோல, தாராபுரம் தொகுதியில் கொங்கு சமூகத்தினர் அதிகமாக உள்ள நிலையில், அதிமுகவில் கொங்கு சமூகத்தின் முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரத்துக்கு வரவில்லை. அதனால் அந்த சமூகத்தினரின் வாக்கும் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. இதனாலேயே இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறினர்.