திமுக, அதிமுக கூட்டணி ‘கணக்கு’ - எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்?

முதல்கட்டமாக, திமுக கூட்டணியில் மநீம-வுக்கு மூன்று, முஸ்லிம் லீக், மமக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோருக்கு தலா ஒரு தொகுதி என்ற கணக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் இம்முறை கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்தாலும் கடந்த முறை அளித்த 6 தொகுதிகள் என்ற நிலையிலேயே நிற்கிறதாம் திமுக. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மதிமுக-வுக்கும் மீண்டும் 6 தொகுதிகளை ஒதுக்க சம்மதித்திருக்கிறார்களாம். சொந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் இந்த எண்ணிக்கை குறையும் என்பதால் முடிவெடுக்க முடியாமல் நிற்கிறதாம் மதிமுக.

கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைப்பதற்காக விசிக-வும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், அந்தக் கட்சிக்கு கடந்த முறையைவிட கூடுதலாக இரண்டு தொகுதிகளை ஒதுக்குவதற்கே திமுக தரப்பில் இழுக்கிறார்களாம். தேமுதிக தங்கள் பக்கம் வந்தால் அந்தக் கட்சிக்கு 7 தொகுதிகளையும் அவர்கள் பிரதானமாக எதிர்பார்க்கும் ராஜ்ய சபா சீட்டையும் தருவது பற்றி யோசிக்கலாம் என்று தூதுவர்கள் மூலம் சொல்லி அனுப்பி இருக்கிறதாம் திமுக தலைமை. இத்தனை கட்சிகளிடமும் பூர்வாங்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்ட திமுக, ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸிடம் இன்னும் வாய்திறக்கவில்லை. என்றாலும் அந்தக் கட்சிக்கு அதிகபட்சமாக 28 முதல் 30 தொகுதிகள் வரை பேசப்படலாம் என்கிறார்கள்.

அதிமுக-வும் இதேபோல் தனது கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். பாஜக-வுக்கு 20 முதல் 25 வரை, பாமக-வுக்கு 17, அமமுக-வுக்கு 8, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஒன்று முதல் 3 இடங்கள் வரை ஒதுக்குவதாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இதில், சில கட்சிகளுக்கு பாஜக தனது கோட்டாவிலிருந்து சீட்களை ஒதுக்க வேண்டி இருப்பதால் அதிமுக-வுடன் பாஜக-வும் சேர்ந்தே கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்கிறார்கள். இரண்டு கட்சிகள் தரப்பிலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்துவிட்டால் அடுத்ததாக, ஒவ்வொரு கட்சியாக அழைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி.

திமுக, அதிமுக கூட்டணி ‘கணக்கு’ - எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்?
Thiruchitrambalam: உங்கள் ஷோபனாவை கண்டு கொண்டீர்களா? | திரை தேவதைகள் 05

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in