திமுக + அதிமுக ‘முயற்சி’... உண்மையை உடைத்தாரா எம்.ஏ.பேபி?
தனித்தே நின்று 108 இடங்களை வென்றும் ஆட்சிக் கட்டிலில் அமரமுடியாமல் விஜய் அல்லாடிக் கொண்டிருந்த வேளையில், அதிமுக ஆட்சியமைக்க திமுக நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தடதடக்க ஆரம்பித்தன.
திமுக-வை எதிர்த்தும் விமர்சித்தும் மட்டுமே ஆட்சியைப் பிடித்த இயக்கம் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக நிற்பதுதான் இரண்டு கட்சிகளுக்குமே நல்லது. அப்படி இருப்பதால் மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இதனால் இவர்களிடம் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் அதற்குப் பிறகு எழவே முடியவில்லை.
இந்த நிலையில்தான், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் தலைதூக்கியது. ஆனால், அந்தக் கட்சியாலும் இப்போது வரைக்கும் திராவிடக் கட்சிகள் தயவில்லாமல் முன்னுக்கு வரமுடியவில்லை. என்றபோதும், விஜய்யின் வரவால் இம்முறை திராவிடக் கட்சிகளின் தலைமை இல்லாத ஓர் அரசாங்கம் தமிழகத்தில் அமையும் சூழல் உருவானது. அந்த வகையில், காங்கிரஸ், பாஜகவால் சாதிக்க முடியாத இந்த அதிசயத்தை சாதித்துக் காட்டி இருக்கிறார் விஜய். இருந்தபோதும், அறுதிப் பெரும்பான்மைக்காக, இப்போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் தயவை நாட வேண்டிய சூழல் விஜய்க்கு ஏற்பட்டது.
இதனிடையேதான், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க ஆலோசனை நடப்பதாக புதன்கிழமை ஒரு செய்தி காட்டுத் தீயாய் கசிந்தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் கான்வாய் விலக்கப்பட்டதும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக உள்வட்ட நிர்வாகிகள் சிலர், “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்றதைவிட தனது தந்தை ஸ்டாலின் தோற்றதை உதயநிதி ஸ்டாலினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்னவிலை கொடுத்தாவது இதை சரிசெய்ய வேண்டும் என்பதில் தீவிரமாய் இருக்கிறார் உதயநிதி. அதிமுக உடன் திமுக கைகோர்க்கிறது என்ற செய்தியும் உதயநிதி தரப்பில் இருந்தே கசிந்திருக்கிறது. இது தொடர்பாக பழனிசாமியின் மகன் மிதுனுடன் உதயநிதி பேசியதாகவும் சொல்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக காலூன்றி இருக்கும் விஜய், ஆட்சியில் அமர்ந்தால் திராவிடக் கட்சிகளில் ஒன்று நிச்சயம் காணாமல் போய்விடும். ஏற்கெனவே கரைந்து கொண்டிருக்கும் அதிமுக அந்த இடத்துக்கு தள்ளப்பட நிறையவே வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்தே, அதிமுக தரப்பிலும் ‘திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி’ என்ற செய்திகளை யாரும் அழுத்தம் திருத்தமாகவும் அதிகாரபூர்வமாகவும் இரு தினங்களாக மறுக்கவில்லை.
திமுக - அதிமுக ஆட்சி குறித்த செய்திகளை டெல்லி பாஜக தலைமையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவுக் ‘கரம்’ நீட்டியிருப்பது. விஜய் செல்வாக்கில் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது பாஜக. அதன் காரணமாகவே, அறுதிப் பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் பட்டியலைக் கேட்டு விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இழுத்தடித்தாராம் ஆளுநர்.
விஜய் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக பழனிசாமியை வெளியில் இருந்து ஆதரிக்கும் முடிவுக்கு திமுக வந்திருப்பதாக சொல்பவர்கள், இது தொடர்பாக டெல்லியின் அனுமதியோடு அதிமுக சில மூவ்களை எடுத்து வருவதாகவும் கூறினர். அதன்காரணமாகவே, புதுச்சேரி சென்ற பழனிசாமி அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தினார். திமுக ஆதரவு குறித்து அப்போது பேசியிருக்கிறாராம்.
விஜய்க்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அமையாத காரணத்தால் நாங்கள் பழனிசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்பில் விளக்கம் கொடுக்கப்படலாம். தங்களின் இந்த முடிவால் விஜய்யை ஆட்சியமைக்க முடியாமல் தடுத்துவிட முடியும் என நம்புகிறார் உதயநிதி. அதேபோல், பழனிசாமியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதால் அதிமுக-வை பிளவில் இருந்து காப்பாற்ற முடியும் என நினைக்கிறார்” என்கிறார்கள் திமுக உள்வட்ட நிர்வாகிகள் சிலர்.
யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிமுக ஆட்சி திமுக ஆதரவில் அமையுமா... திமுக எதிர்ப்பிலேயே வளர்ந்த அதிமுக-வின் எம்எல்ஏ-க்கள் அத்தனை பேரும் ஒரேமுகமாய் இதை ஏற்பார்களா... அல்லது திமுக உறவை காரணம் காட்டி அதிமுக-வில் பிளவு ஏற்படுமா என்ற கேள்விகள் எல்லாம் எழுந்த வேலையில்தான் இந்தக் கூட்டு முயற்சியின் உண்மைத் தனமையை உடைத்துச் சொல்லியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எங்களது மாநில தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியபோது, திமுக ஆதரவுடன் ஒரு அரசை அமைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது, அதிமுக தலைமையிலான அரசை திமுக வெளியில் இருந்து ஆதரிக்க இருப்பதாக தெரிவித்தனர். மற்ற விவரங்கள் எதையும் எங்களிடம் கூறவில்லை.
ஆனால், திமுக என்ன செய்ய விரும்புகிறது என்பதை எங்களிடம் நியாயமான முறையில் கலந்தாலோசித்தனர். அதை நாங்களும் ஆதரிக்க வேண்டும், அவர்களது அணுகுமுறையை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று திமுக விரும்பியது. நாங்கள் திமுகவை எதிர்க்கப் போவதில்லை. ஆனால், பாஜக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்த அதிமுகவை ஆதரிக்கும் அரசியல் முடிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து விட்டது. திமுகவும் தோல்வியடைந்துவிட்டது. நாங்கள் திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தோம். அதனால் நாங்களும் தோற்றுவிட்டோம். அந்தவகையில், நாங்கள் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, தமிழக சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவாகிய தவெகவுக்கு எங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறோம்” என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி.
ஆனால், அவரே மறுதினம் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதாக முயற்சிகள் நடந்ததாக சொல்லப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க சில நகர்கவுகளை முன்னெடுத்தது உண்மை” என்று விளக்கம் அளித்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.