காப்பி, கதறல், கலாய்ப்பு... - திமுக vs அதிமுக ‘வாக்குறுதி’ யுத்தம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், 5 லட்சம் மகளிருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் ஸ்கூட்டர் என்பன உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக அமைச்சர்கள், திமுகவின் திட்டங்களை காபி, பேஸ்ட் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

“கடந்த தேர்தலில் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், தற்போது மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் தருவதாக அவர் அறிவித்துள்ளதில் இருந்தே, திமுக செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொதை திட்டம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்று இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும்.

இதுவே, திமுக ஆட்சியின் வெற்றிதான். திமுகவின் திட்டத்தை பழனிசாமி காப்பி, பேஸ்ட் செய்துள்ளதால் திமுகவுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது” என்று அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். “கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ‘டூப்’ போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது. இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்” என்று பழனிசாமியை கிண்டல் செய்திருக்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

இதற்கு பதிலடி கொடுத்து, எக்ஸ் தள பக்கத்தில் அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. அதில், ‘திமுக அரசு நான்கரை ஆண்டுகளாக, அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது ‘காப்பி அடிக்கிறாங்க மிஸ்’ என்று அதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

அதிமுகவில் செயல்படுத்தப்பட்ட அம்மா மருந்தகம் திட்டத்தை காப்பியடித்து முதல்வர் மருந்தகம், அம்மா மினி கிளினிக்குக்கு பதிலாக மக்களைத் தேடி மருத்துவம், தாலிக்கு தங்கம் திட்டத்தை உல்டா செய்து புதுமைப் பெண் திட்டம் என திமுக அரசு காப்பியடித்து இருப்பதை அடுக்கிக் கொண்டே போகலாம். மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே சொந்தக்காரங்க நாங்க தான். ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்துக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?

மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காகத்தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாகத்தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு 1500 ரூபாய் என அறிவித்தோம். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய முதல்வர் ஸ்டாலினின் அரசு வேறென்ன செய்தது?

திமுக அரசின் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பழனிசாமியின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, 28 மாதம் கழித்து தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது? அதையும் தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கவில்லை. தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவுபடுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா? பழனிசாமி, ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது திமுகவினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெரிச்சல்! நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே. இன்னும் 2 மாதம்தான்’ என்று அதிமுக சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, “இலவசங்களே கூடாது என்கிறார் பிரதமர் மோடி. இலவசங்களை ரத்து செய்யவேண்டும் என அழுத்தமாக சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. எனில், சமூக நலத் திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜகவுடன் அருகில் நின்று கொண்டு, பழனிசாமி முன்மொழியும் வாக்குறுதிகளை எப்படி நம்ப முடியும்? அதை ஏற்க இயலாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

காப்பி, கதறல், கலாய்ப்பு... - திமுக vs அதிமுக ‘வாக்குறுதி’ யுத்தம்
தலைவர் தம்பி தலைமையில் - ‘பொங்கல் வின்னர்’ எப்படி?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in