கே.சி.வேணுகோபாலை சந்திக்க மு.க.ஸ்டாலின் ‘மறுத்தது’ ஏன்?

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் கூறுகையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கே.சி.வேணுகோபால் வந்திருந்தார். திட்டமிட்டபடி தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் டெல்லி திரும்புவதாக இருந்தது.

இதற்கிடையில், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தது, திமுக மேலிடத்தைக் கடும் கோபமடையச் செய்திருந்தது. இந்தச் சூழலில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசி நிலைமையைச் சீர்செய்ய வேணுகோபால் முடிவு செய்தார். இதற்காகவே சென்னை விமான நிலையம் அருகிலுள்ள ஓட்டலில் தங்கிய அவர், புதன்கிழமை காலை முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டார். ஆனால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைக் காரணம் காட்டி திமுக தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் மதியமே அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்” என்றனர்.

தொடர்ந்து பேசிய அறிவாலயப் புள்ளிகள், “மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கூட்டணிக்கு விரோதமாகத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளைப் பேசி வந்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் காங்கிரஸ் தலைமைக்குக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை வந்த கே.சி. வேணுகோபாலோ, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதெல்லாம் அவரவர் சொந்தக் கருத்து’ எனப் பேட்டியளித்துவிட்டுச் செல்கிறார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதன் மூலம் சர்ச்சைக்குரிய அந்தப் பேச்சுகளுக்குப் பின்னால் ராகுல் காந்தி, கார்கே அல்லது வேணுகோபால் ஆகியோரின் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே, எங்கள் தலைவர் ஸ்டாலின் நேரடியாக சோனியா காந்தியிடமே இது குறித்துப் பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார். அதன்படியே பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால்தான் வேணுகோபாலைச் சந்திக்க முதல்வர் விரும்பவில்லை” என்றனர்.

கே.சி.வேணுகோபாலை சந்திக்க மு.க.ஸ்டாலின் ‘மறுத்தது’ ஏன்?
திமுக கூட்டணியில் தேமுதிக - பிரேமலதா ‘டிக்’ செய்தது ஏன்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in