திமுக கூட்டணியில் தேமுதிக - பிரேமலதா ‘டிக்’ செய்தது ஏன்?

வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.

முன்னதாக, கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டனர். விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் ஆகியோரையும் பிரேமலதா சந்தித்துப் பேசினார்.

மேலும், சிவராத்திரி விழாவுக்குப் பிறகும் கோவையில் பிரேமலதா தங்கியிருந்தார். அப்போது, வேலுமணியை சந்தித்து பேசியதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இணைவது உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், பிரேமலதா எதிர்பார்த்த டீல் அமையவில்லை என கூறப்படுகிறது.

“கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழாவிற்கு அழைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தோம். அனைவரையும் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்துப் பேசினேன்” என்று சிம்பிளாக சொல்லிக் கடந்தார் பிரேமலதா விஜயகாந்த்.

இந்த நிலையில்தான், சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்தச் சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்த பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவிவந்தது. அதன்படி, இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளோம்.

தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியடிய திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2016-லேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும். பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அது இப்போது கேப்டன் இல்லாதபோது தாமதமாக நடந்துள்ளது.

மற்றபடி இந்தத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் போன்றவை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு திமுகவுடன் ஆலோசனை செய்தபின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.

இந்தக் கூட்டணி தேமுதிகவினர், பொது மக்களும் வரவேற்கும் கூட்டணியாக உள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து எல்லாம் அண்ணன் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார்” என்றார் பிரேமலதா.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச் செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்தையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். வெல்வோம் ஒன்றாக” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் 7 தொகுதிகள் வரையிலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் தேமுதிக - பிரேமலதா ‘டிக்’ செய்தது ஏன்?
அன்று அதிமுக... இன்று திமுக! - இன்னொரு பிளவுக்குத் தயாராகிறதா தமிழக காங்கிரஸ்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in