கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள பக்கங்கள் ‘முடக்கம்’ - அரசு மீது அப்ஜித் சாடல்
மர்ம நபர்கள் ‘ஹேக்’ செய்ததால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (cockroach janata party) அனைத்து சமூக வலைதள கணக்குகளும், இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது. ‘எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது’ என்று அப்ஜித் தீப்கே சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தை தவிர்த்து இதர அனைத்து சமூக வலைதளங்களும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளன. எங்களது இணையதளத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர். அந்த இணையதளமும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் கரப்பான் பூச்சிகள். எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது. எங்கள் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சர்வாதிகார நடவடிக்கை ஆகும். இந்திய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. காக்ரோச் ஜனதா கட்சியின் எந்தவொரு சமூக வலைதள கணக்கும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றில் வெளியாகும் எந்தப் பதிவுகளையும் நம்ப வேண்டாம். கரப்பான்பூச்சிகள் சாகாது. நாங்கள் புதிய வடிவில் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘சிஜேபி’ பின்புலம் என்ன?
போலி சான்றிதழ் தொடர்பான ஒரு வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “வேலை இல்லாமல் எந்த தொழிலும் செய்ய தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைப் போல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு இணையத்தில் இளைஞர்கள் கடும் எதிர்வினையாற்றினர். “கரப்பான்பூச்சிகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதுபோலத்தான் நாங்கள்...” என்று அவர்கள் காத்திரம் காட்டினர். இதனிடையே, தனது கருத்து குறித்து விளக்கம் அளித்த நீதிபதி சூர்யகாந்த், “போலி சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன். ஒட்டுமொத்த இளைஞர்களை அல்ல” என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில்தான் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அப்ஜித் தீப்கே என்பவர் கடந்த 16-ம் தேதி இன்ஸ்டாகிராமில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பக்கத்தை அரசியல் நையாண்டி நோக்குடன் தொடங்கினார். எக்ஸ், ஃபேஸ்புக் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களிலும் இதே பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியில் இணைய வேலை வாய்ப்பற்றவராக இருக்க வேண்டும். சோம்பேறியாக இருக்க வேண்டும். ஆன்லைனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். கோபத்தை அழகாக வெளிப்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று அப்ஜித் கூறியிருந்தார். மேலும், ஒரு கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் தேர்தலுக்குப் பிறகு அணி மாறினால் அடுத்த 20 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது உட்பட அப்ஜித் 5 வாக்குறுதி அளித்திருந்தார்.
“தங்கள் குரல் கேட்கப்படவில்லை. பிரதிநிதித்துவமும் பெறவில்லை என்ற விரக்தியில் இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள்” என்ற அப்ஜித் தீப்கே, “இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் ஏறுமுகம் காட்டினாலும் கூட, வேலை நிமித்தமான பதற்றங்கள், சமத்துவமின்மை, விலைவாசி உயர்வு தரும் நெருக்கடிகள் இருக்கத்தானே செய்கின்றன. கல்வி வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான உத்தரவாதத்தைத் தருவதாக இல்லை. வாழ்க்கைத்தரம் மேல்நோக்கி நகரும் என்பதற்கு உறுதியைத் தருவதாக இல்லை.
இந்திய ஜென்ஸீ இளைஞர்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகளைக் கைவிடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் வேதனையை, மொழியை அறிந்த புதிய அரசியல் அமைப்புகளை விரும்புகின்றனர். சிஜேபி பக்கத்தில் வரும் கருத்துகள் அதையே பிரதிபலிக்கின்றன. அங்கே வரும் இளைஞர்கள், “எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது” என்று போலியாகச் சொல்ல விரும்பாதவர்கள் இந்த இளைஞர்கள்” என்றார் அப்ஜித் தீப்கே.
இணையவாசிகளின் கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் சட்டென பல மில்லியன்களில் ஃபாலோயர்களை எட்டியது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை முந்தியது. எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பக்கங்களை பின்தொடர்வோரின் எண்ணிக்கை லட்சங்களில் அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது திடீரென அந்தக் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கரப்பான்பூச்சிகள் ஒருபோதும் உயிரிழப்பது இல்லை என்ற வாசகத்துடன் காக்ரோச் இஸ் பேக் என்ற டேக் உடன் எக்ஸ் தளத்தில் புதிய பக்கம் தொடங்கப்பட்டது.
இந்தச் சூழலில்தான் அபிஜித் தீப்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆன்லைனில் புதிய கட்சியை தொடங்கிய பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். எங்களது கட்சி சார்பில் முதல் கோரிக்கையை முன்வைக்கிறோம். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். இதுதொடர்பான ஆன்லைன் மனுவில் பொதுமக்கள் கையெழுத்திட வேண்டுகிறேன். அரசு நிர்வாகத் தவறுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.
அதேவேளையில், மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் வசித்து வரும் அபிஜித் தீப்கேவின் பெற்றோர், “எனது மகன் அபிஜித் அரசியலில் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் ஆன்லைனில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தொடங்கிய நாள் முதல் எங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டோம். புதிய கட்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எங்கள் மகன் இந்தியா திரும்பினால் கைது செய்யப்படுவார் என்று அஞ்சுகிறோம். இந்தியாவில் இருந்தபோது ஆம் ஆத்மியில் சிறிது காலம் எங்களது மகன் பணியாற்றினார். அப்போதே நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறும்போது, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் திடீர் வளர்ச்சி வியப்பளிக்கிறது. அதன் சமூக வலைதள பக்கங்களை முடக்கக் கூடாது. இளைஞர்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவரும் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் களத்தில், இளைஞர்கள் தங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் புகலிடமாக இருக்கும் சிஜேபி, காணாமல் போகலாம். அது பிரபலமான அதே வேகத்தில் இல்லாமல் போகலாம். ஆனாலும், இந்திய அரசியலில் சிஜேபியும், கரப்பான்பூச்சி எனும் சூப்பர் ஸ்டாரும் ஏற்கெனவே ஒரு புதுமையைப் புகுத்திவிட்டன. காட்சிகள் மாறினாலும் இந்த அலை ஓயாது எனலாம். மீம் பார்ட்டியும், பூச்சி சின்னமும் இந்திய இளைஞர்களின் கோபத்தின் சாட்சியாக வரலாற்றில் நிற்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.