லிவ்-இன் நிபந்தனைகள் - அசாம் ‘யுசிசி’ சொல்வது என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களை கொண்டு வர பொது சிவில் சட்டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. உத்தராகண்ட, குஜராத் மாநிலங்களை அடுத்து அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா மே 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் ஒன்றாக சேர்ந்து வாழ்வதை பதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருமணம், விவாகரத்து போன்றவற்றை கட்டாயம் பதிவு செய்யும் நடைமுறை இதில் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை 60 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சமூக வழக்கங்களை மீறி தடைசெய்யப்பட்ட உறவுக்குள் திருமணம் செய்தால் 6 மாதம் வரை சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இந்த பொது சிவில் சட்ட விதிமுறைகள் அசாம் மாநில பழங்குடியினருக்கு பொருந்தாது.
இந்த மசோதா அசாம் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு மே 27-ம் தேதி நிறைவற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திரிணமுல் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பொது சிவில் சட்டம் குறித்து, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “சொத்துரிமையில் அனைவருக்கும் நியாயமான மற்றும் சம பங்களிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பொது சிவில் சட்டம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. வாரிசுரிமைக்கான சீரான விதிகள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு சொத்துக்கள் நியாயமான முறையில் மாற்றப்படுவது உறுதி செய்யப்படும்.
உயில் எழுதாமல் இறப்பவர்களின் சொத்துரிமையானது வாரிசுகளுக்கு இடையே சீரான, பாலின சமத்துவ முன்னுரிமை வரிசையைப் பின்பற்றும். இதில் இறந்தவரின் மனைவி, கணவர், குழந்தைகள் மற்றும் பெற்றோர் அடங்குவர். உயில் வழி சொத்துரிமையைப் பொறுத்தவரை, நல்ல மனநிலையில் உள்ள எந்தவொரு முதியவரும் சாட்சிகளின் முன்னிலையில் உயிலை எழுதி வைத்து நிறைவேற்ற சட்டப்பூர்வமாக உரிமை பெற்றவராவார்” என்று கூறினார்.
அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா குறித்து அவர் விவரித்ததில் சில அம்சங்கள் கவனம் பெற்றுள்ளன. “மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அல்லது அவரால் வீட்டை சரிவர பராமரிக்க இயலவில்லை என்ற காரணத்துக்காகவே பலநேரங்களில் ஆண்கள் மறுமணம் செய்கின்றனர். ஆனால், சதி இறந்தபோது சிவன் மறுமணம் செய்யவில்லை. பார்வதி மறுபிறவி எடுக்கும்வரை காத்திருந்தார். ஏனெனில் திருமணம் என்பது 7 ஜென்மம் தொடரும் இரு மனங்களுக்கு இடையேயான உறவு.
மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கணவன்தான் அவரைப் பாதுகாத்து கவனிக்க வேண்டும். எனவே மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக ஓர் ஆண் இன்னொரு திருமணம் செய்துகொள்ள எனது அரசு அனுமதிக்காது. உண்மையான திருமணம் என்பது ஆயுள் முழுவதும் நீடிக்கும் ஆன்ம ஒப்பந்தம். அது தற்காலிகமானது அல்ல.
ஓர் ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்தால் அது சட்டப்படிச் செல்லாது. மேலும் அந்த நபர் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற வேண்டியிருக்கும். அசாம் மாநிலத்தில் லிவ்-இன் உறவில் இருப்போர் அதைப் பதிவு செய்வது கட்டாயம். ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒருவருடன் தான் லிவ்-இன் உறவில் இருக்க முடியும். ஒருவரே அசாமில் ஒருவருடன், மும்பையில் இன்னொருவருடனும் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. லிவ்-இன் உறவில் பாலிகேமிக்கு இடமில்லை.
அதேபோல் லிவ்-இன் உறவில் இருக்க இருவருமே 21 வயது அல்லது அதற்கும் மேல் கொண்டவராக இருக்க வேண்டும். இதில் மதம் பிரச்சினையில்லை. ஆனால், திருமண ஆனவர்கள் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. ஓர் ஆண் மனைவி உயிருடன் இருக்கும்போதே லிவ்-இன் உறவில் இருக்க நேர்ந்து அந்த உறவு கசந்து முறிந்தால், லிவ்-இன் உறவில் இருந்த பெண் திருமண பந்தம் மூலம் வாழும் மனைவிபோலவே எல்லா உரிமைகளையும் சட்டப்பூர்வமாகப் பெறலாம்” என்று விவரித்தார் அசாம் முதல்வர்.
மேலும் அவர் “பொது சிவில் சட்டமானது சீர்த்திருத்தத்துக்கானது. பெண்கள் நலன் சார்ந்தது. அவர்களுக்கு நீதியும், சமத்துவமும் செய்வது. அதுவும் குறிப்பாக சிறுபான்மையின சமூகத்து பெண்களுக்கு நன்மை செய்யக் கூடியது. எனவே, தனிப்பட்ட சட்டங்கள் இனியும் பெண்கள் சம உரிமையை, அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பை தடுப்பதாக இருக்கக் கூடாது” என்றார்.
அதேநேரத்தில், அசாமில் அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ‘இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே பொது சிவில் சட்டத்தின் பிரதான நோக்கம். ஆனால், இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. மொழி, இன, கலாச்சார ரீதியாக பன்மைத்துவம் கொண்ட இந்திய ஜனநாயகத்தில் ஒற்றுமைக்கு ஒரே சிவில் சட்டம் மட்டுமே போதுமானதாகாது’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதேபோல் லிவ்-இன் உறவில் இருப்பவர்களும், “இது தனியுரிமையை சிதைக்கும் வேலை. சாதி, மதப் பிரச்சினைகளால் வழக்கமான நடைமுறையான திருமணம் மூலம் இணைந்து வாழ முடியாதவர்கள் லிவ்-இன் முறையில் தாங்கள் விரும்பிய நபருடன் வாழ முடியும். ஆனால் அந்தத் தனியுரிமைக்குள் அத்துமீறி அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது, அதை மீறினால் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகுப்பது, ஆவணங்கள் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் முதலானவற்றைக் கோருவது எல்லாம் இந்த முறையையே ஒழிக்கும் முயற்சிதான்,” என்கின்றனர்.