தமிழக பாஜகவை கரைக்கிறாரா அண்ணாமலை? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்ட நிலையில், புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலையை வரவேற்க, விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், தொண்டர்கள் திரண்டனர். அண்ணாமலைக்கு பூங்கொத்து வழங்கியும், வாழ்த்து முழக்கம் எழுப்பியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையே, தான் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் இணையுமாறு மக்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். இதற்காக, ‘இது நம்ம இயக்கம்’என்ற பெயரில் we the leaders டாட் ஓஆர்ஜி தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் அறிவித்த 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் அவரது இயக்கத்தில் சேர பதிவு செய்துள்ளனர்.

“இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும். நாம் அனைவரும் முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். சாமானிய மனிதருக்கான ‘காமன் மேன்’ அரசியலை முன்னிறுத்த வேண்டும். அனைவரையும் அரசியலுக்கு கொண்டு வரவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் பயிற்சி அளிக்கும் வகையில் கோவையில் அப்துல் கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு நிறைய வேட்பாளர்களை இங்கிருந்து நாம் அனுப்புவோம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக நேரலையில் அவர் வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முன்னதாக, பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகுவதாக தகவல்வெளிவரத் தொடங்கிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வந்தனர்.

புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகுவதாக அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கோவையில் அண்ணாமலைக்கு தொடர்ந்து போஸ்டர் அடித்து, தனிக்கட்சி தொடங்குவதை எதிர்பார்த்திருந்த அவரது தீவிர ஆதரவாளரான பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறும்போது, “அண்ணாமலை தொடங்கிய ‘வீ த லீடர்’ அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளோம். இது பாஜகவின் ‘பி’டீம் கிடையாது. வரும் தேர்தலில் போட்டி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அது இடைத்தேர்தலாகவும் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலாகவும் இருக்கும். விஜய் - அண்ணாமலை ஆகிய இருவரும்தான் இனி தமிழக அரசியலில் இருப்பார்கள்” என்றார்.

மற்றொரு தீவிர ஆதரவாளரான கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகர் கட்சியில் இருந்து வெளியேறினார். அதேபோல் தெற்கு மாவட்டத்தில் உள்ள 22 மண்டல் தலைவர்களில் 14 பேர் விலகிய நிலையில் அவர்களுடன், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் விலகினர்.

முன்னாள் மாவட்ட தலைவரும், எம்பி தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவருமான கே.வசந்தராஜன் வெளியிட்டுள்ள கடிதத்தில், “கடந்த 1998-ம் ஆண்டு முதல் கிளைத் தலைவராக ஆரம்பித்து எம்.பி. வேட்பாளர் வரை என்போன்ற சாமானியரை உயர்த்தியது பாஜக. கடந்த 28 ஆண்டுகளாக பயணித்த நிலையில், தற்போதைய தமிழக பாஜக, கட்சிக்கு பாடுபட்டவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது எனது ஆவல்.

இந்த நிலையில், உயிருக்கும் மேலாக நேசித்த பாஜகவில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன் கொண்ட தேசிய சிந்தனை கொண்ட, ஊழலற்ற, நேர்மையான அரசியல் பாதையில் அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மதுரையில் பாஜகவின் 3 மாவட்டங்களில் தற்போது பொறுப்புகளில் உள்ள ஏராளமான அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் தங்களது கட்சிப் பதவியை ராஜினமா செய்து விட்டு, அவரது புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

இது குறித்து அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறுகையில், ‘இனி தமிழக அரசியல் விஜய், உதயநிதி, அண்ணாமலை என்றுதான் இருக்கும். பாஜக மற்றும் பிற கட்சிகளில் இருப்பவர்களும், எந்தக் கட்சியிலும் இல்லாத அண்ணாமலை ஆதரவாளர்களும் அவரது இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர்” என்றனர்.

அதேவேளையில், தமிழக பாஜக தரப்பிலோ, “அண்ணாமலை வருகைக்குப் பிறகு, அவரைப் பார்த்து பாஜகவில் சேர்ந்தவர்கள் மட்டுமே அவர் பின்னால் செல்கின்றனர். காலம் காலமாக பாஜகவில் இருப்பவர்களுக்கு கட்சிதான் முக்கியம். பாஜக எப்போதும் தலைவர்களை நம்பிருக்கும் கட்சியல்ல. எனவே, கட்சிக்காக இருப்பவர்கள் பாஜகவில்தான் இருப்பார்கள்” என்றனர்.

அதேபோல், “ஓர் இயக்கத்தையோ, கட்சியையோ யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக சித்தாந்த அடிப்படையிலான கட்சி” என்று சொல்லியிருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, ‘அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவுவேன்’ என்கிற ரீதியில் அண்ணாமலை பேசியிருந்தார். ஆனால், அவர் இப்போது தமிழக பாஜகவின் தலைமையமான கமலாலயத்தில் ஒவ்வொரு செங்கலையும் உருவி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்த நிலையில், தமிழகத்தில் பாஜக மறைமுகப் பாதையில் தடம் பதிக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் அமித் ஷா ஆசியுடன் தனிக் கட்சிப் பயணத்தை அண்ணாமலை தொடங்கியிருக்கிறார் என்ற விமர்சனப் பார்வைகளும் எழுந்து வருகின்றன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. “பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி. ஆர்எஸ்எஸ் ஏற்கெனவே 2,500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2,501 அவ்வளவுதான்.

பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித் ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை. ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் இரண்டரை லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்று பெ.சண்முகம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில்தான், “பாஜகவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவில் இருந்து விலகியவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவை கரைக்கிறாரா அண்ணாமலை? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தவெக ‘தாவல்’களை தடுக்குமா அதிமுக ‘முதியோர்’ கழகம்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in