மேலூர் தொகுதியை கேட்கும் அமமுக... அதிர்ச்சியில் அதிமுகவினர்!
அமமுக தொடங்கப்பட்ட மதுரை மேலூர் தொகுதியை அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கால் நூற்றாண்டாக வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டையாக இருக்கும் இந்தத் தொகுதியை அமமுக கேட்பதால் மதுரை மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக - பாஜக கூட்டணி கட்சியினர் தங்கள் விருப்பமான தொகுதிகளின் பட்டியலை கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுக மேலிடத்திடம் வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை மதுரை மாவட்டத்தில் அதிமுக 8 தொகுதிகளில் போட்டியிட்டு மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறையும் 5 தொகுதிகளையும் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் போட்டியிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று அதன் கோட்டையாகத் திகழ்கிறது. இவற்றில் உச்சமாக மேலூர் தொகுதியில் அதிமுக 2001-ம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டாக வெற்றி பெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் 6 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தொடக்க காலத்தில் காங்கிரஸ், திமுக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. அதன்பிறகு அதிமுக வசம் இந்த தொகுதி முழுமையாக வந்துவிட்டது. இந்த முறையும் அதிமுக இந்தத் தொகுதியில் களம் இறங்க தொகுதிக்குட்பட்ட புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, மேலூர் பகுதி நிர்வாகிகளுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார்.
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் திடீரென அமமுக இணைந்த நிலையில் டிடிவி தினகரன், மேலூர் தொகுதியை விரும்பிக் கேட்பதாகக் கூறப்படுகிறது. அமமுக, மேலூரில் தொடங்கப்பட்டது என்பதால் அந்த சென்டிமெண்ட்டில் அங்கிருந்து தனது கட்சி எம்எல்ஏ சட்டப்பேரவைக்குச் செல்ல டிடிவி தினகரன் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இன்னும் கூட்டணியில் தொகுதிகளை முடிவு செய்யும் பேச்சுவார்த்தையே தொடங்காத நிலையில் அமமுகவின் விருப்பத்தை அறிந்த மதுரை மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமமுகவினர் கூறுகையில், “கடந்த தேர்தலில் மேலூர், உசிலம்பட்டி தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். மேலும், மதுரையில் ஒரு தொகுதியிலாவது போட்டியிடத் திட்டமிட்டு உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றைக் கேட்கிறோம். கிடைக்கும் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் மதுரை கிழக்குத் தொகுதியைக் கேட்போம். தற்போது டிடிவி தினகரனும், பழனிசாமியும் ராசியாகிவிட்டதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தேர்தல் பணியாற்றத் தொடங்கி விட்டனர். அதனால், தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்குள் பிரச்சினை வராது” என்றனர்.