அமமுகவின் ‘அதிரடி’ ப்ளான்... பரபரக்கும் உசிலம்பட்டி தொகுதி!

அகில இந்திய ஃபார்வடு பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்துக்கு மிகவும் பரிச்சயமான தொகுதிதான் உசிலம்பட்டி. அதனால்தான், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இங்கே களமிறங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறது அந்தக் கட்சி. கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த ஃபார்வடு பிளாக், உசிலம்பட்டியில் நின்றும் தோற்றுப் போனது. இதற்குக் காரணமே திமுகவினரின் ஒத்துழையாமைதான் என்று சொல்லி, அந்தக் கூட்டணியை விட்டே வெளியேறிய அந்தக் கட்சி இப்போது அதிமுகவுடன் கைகோத்திருக்கிறது. எனினும், இம்முறையும் தினகரன் இங்கு வரப்போகிறார் என்று சொல்லி மறுபடியும் சிங்கத்தை அமமுக மிரட்டுகிறது.

சென்ற முறை ஃபார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், அதிமுக சார்பில் ஐயப்பன், அமமுக சார்பில் மகேந்திரன் ஆகியோர் உசிலம்பட்டியில் போட்டியிட்டனர். முக்குலத்தோரின் இந்த மும்முனைப் போட்டியில் ஐயப்பன் வெற்றி பெற்றார். எனினும், தேர்தலுக்குப் பிறகு, “அடுத்த முறை உசிலம்பட்டி உங்களுக்குத்தான்” என்று உத்தரவாதமளித்து மகேந்திரனை அதிமுகவுக்கு இழுத்து வந்துவிட்டார் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளரான ஆர்.பி.உதயகுமார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் உதயகுமார் இம்முறை தனக்கு எப்படியும் உசிலம்பட்டியை வாங்கித் தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மகேந்திரன் தேர்தல் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டார். இதனால், “போன முறை நம்மை எதிர்த்து நின்றார். இந்த முறை இவரை ஜெயிக்க வைக்க வேலை செய்யணுமா... காலங்காலமாக கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு வேலையே இல்லையா?” என்று அதிமுகவுக்குள் முணுமுணுப்பு கிளம்பியுள்ளது.

மகேந்திரன் இங்கே கடந்த முறை சுமார் 55,000 வாக்குகளை பெற்றார். அப்போதே, தினகரன் கோயில்பட்டிக்குப் போகாமல் உசிலம்பட்டியில் நின்றிருந்தால் எளிதாக ஜெயித்திருக்கலாம் என்ற பேச்சுக் கிளம்பியது. இதை நினைவில் வைத்து இந்த முறை தினகரனை அமமுகவினர் உசிலம்பட்டிக்கு வரச்சொல்லி இழுப்பதாக தகவல்.

ஒருவேளை, தினகரன் இங்கு வந்தால் ஃபார்வடு பிளாக் விருப்பப்படி உசிலம்பட்டியை அவர்களுக்கே விட்டுக் கொடுக்கும் முடிவில் இருக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். தினகரனை கண்டு சிங்கம் பார்ட்டிகள் பின்வாங்கினால் கடந்த முறை அமமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மகேந்திரனையே தினகரனுக்கு எதிராக ‘கொம்பு சீவி’ களமிறக்கவும் அதிமுக தலைமை தயாராக இருக்கிறது.

அமமுகவின் ‘அதிரடி’ ப்ளான்... பரபரக்கும் உசிலம்பட்டி தொகுதி!
திமுக+ vs அதிமுக - பாஜக கூட்டணி... ‘கரன்சி’ திட்டம் என்ன?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in