27 தொகுதிகள்... தமிழக பாஜக வியூகமும் பின்புலமும்!
மாவட்டத்துக்கு ஒரு தொகுதி கேட்ட பாஜகவுக்கு 27 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்ற ஒரு பார்வை இருந்தாலும், கடந்த தேர்தலில் 20 தொகுதிகள் மட்டுமே பெற்ற பாஜக இம்முறை 27 தொகுதிகளைப் பெற்றுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிக சீட்டுகள் கேட்டு அதிமுகவுக்கு, பாஜக நெருக்கடி கொடுக்கிறது என பேச்சுகள் எழுந்தாலும், தமிழகத்தில் திமுக ஆட்சியை நீக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக தொடக்கம் முதலே எல்லா விஷயத்திலும் பாஜக அனுசரித்தே சென்றது.
அதனால்தான் தொடக்கத்தில் கூடுதல் தொகுதிகளை கேட்டாலும், பின்னர் படிப்படியாக இறங்கிவந்து 27-க்கு பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர். மேலும், தன்னால் கூட்டணிக்குள் கொண்டுவரப்பட்ட தினகரன் போன்றவர்களுக்கும் தொகுதிகளை பெற்றுத் தரவும் முனைப்பு காட்டியது. இன்னொரு பக்கம், பாஜக தொடக்கத்தில் ‘பேக்கேஜ் திட்டம்’ குறித்து பேசியது. அதாவது அதிமுகவுக்கு போக, மொத்தமாக மீதமுள்ள தொகுதிகளைப் பெற்றுக்கொள்வது.
அதன்பின்னர் பாஜக, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளைப் பகிர்ந்து கொடுக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இது இரட்டை அதிகார மையமாக மாறும் என்பதுடன், தனது முக்கியத்துவமும் குறைந்துபோகும் எனவும் நினைத்தது அதிமுக. அதனால், பாஜகவின் ‘பேக்கேஜ்’ திட்டத்தை நிராகரித்த அதிமுக, தனது தலைமையிலேயே தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. பாஜக இப்போது பெற்றுள்ள 27 தொகுதிகளில், தங்களுக்கு மிகவும் வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெற உத்தரவாதம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், சுமார் 20 நட்சத்திர வேட்பாளர்கள் பாஜக தரப்பில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, எப்படியாவது 15 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்றும் தமிழக பாஜகவுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளது டெல்லி தலைமை. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வெற்றிபெற, பல சக்கர வியூகங்களையும் வகுப்பது பாஜகவின் வழக்கம். தமிழகத்தில் வெற்றிபெற பாஜக கையிலெடுக்கப் போகும் வியூகம் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.