The GirlFriend: ராஷ்மிகா மந்தனாவின் ‘பெஸ்ட்’ - ஓடிடி திரைப் பாரவை

இப்போதெல்லாம் சில திரைப்படங்கள் திரையரங்குக்குப் பிறகு, ஓடிடியில் வெளியான பிறகுதான் பெரும் கவனத்தைப் பெற்று, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே உரையாடல்களையும் தூண்டுகின்றன. அப்படியான ஒரு படம்தான், ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ எனும் தெலுங்குப் படம்.

தாயை இழந்து தந்தையிடம் வளரும் ராஷ்மிகா, முதுகலைப் படிப்புக்காக நகரத்துக்கு வருகிறார். அங்கு முதுகலை படிக்கும் தீக்சித் ஷெட்டி மீது அவருக்கு காதல் வருகிறது. இயல்பிலேயே ஆணாதிக்க மனப்பான்மையுடன் வலம் வரும் தீக்சித் ஷெட்டி, ராஷ்மிகாவின் முன்னேற்றத்தை தடுத்து, தனக்கான பணிப்பெண்ணாக மாற்றத் தொடங்குகிறார். அதீத எதிர்மறை மனப்பான்மையில் சிக்கும் ராஷ்மிகா, அவருடன் பிரேக் அப் செய்கிறார்.

அதன்பிறகு ராஷ்மிகாவை விடாமல் துன்புறுத்தத் தொடங்க, பயத்தின் உச்சிக்கு செல்லும் ராஷ்மிக, அதிலிருந்து மீள்கிறாரா இல்லையா என்பதையே திரைக்கதை வடிவில் பாடம் எடுத்திருக்கிறார்கள்.

ராஷ்மிகா வெளியூர் படிக்க வருவது, தனது ஆசையை, கனவைத் தேடி படிப்படியாக உழைப்பது, பயத்தை வெளிப்படுத்துவது, பிரேக் ஆன பின்பு தனது காதலனால் பயமுறுத்தப்பட்டு நடுங்குவது, அதிலிருந்து மீள்வது என உண்மையிலேயே தனது நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ராஷ்மிகாவுக்கு இது நிச்சயம் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதை நன்றாக மெருகேற்றி நேர்த்தியுடன் கையாண்டுள்ளார்.

ஆணாதிக்கம் செய்கிறோம் என்பதை உணர்ந்து, தனக்கு வேலை செய்ய, கேள்விக் கேட்காத, பயந்த நிலையில் இருக்கும் பெண்ணை படிப்படியாக பணிப்பெண்ணாக்கும் சூழலை, தனது கதாபாத்திரம் மூலம் கச்சிதமாக வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் தீக்சித் ஷெட்டி.

தன் அம்மா எதுவும் பேசாமல், தான் சொல்வதை செய்வது, தான் கழற்றி எறிந்த ஷூவை எடுத்து வைப்பது, பிடித்த உணவை செய்து தருவது போலவே, தன் காதலியும் தனது தேவை உணர்ந்து பணிவிடை செய்பவராக நடத்த முனையும் நபர்களின் சாயலை தன்னுடைய உடல்மொழிகளிலேயே கொண்டு வந்துவிடுகிறார் தீக்சிஷ் ஷெட்டி.

தன்னை விட தன் காதலியோ, அம்மாவோ உயரக் கூடாது என்பதை விரும்பும் ஆணாதிக்க மனநிலையை அவர் காட்டிய விதம், நிச்சயம் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீரியஸான சப்ஜெக்ட் தான் என்றாலும் கூட, ரசிகர்களை தொய்வின்றி எங்கேஜ் செய்யவும் ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ தவறவில்லை. ஆணாதிக்கத்தால் பெண்கள் நெருக்கடிக்கு உள்ளாவது, கல்விதான் வாழ்வை மாற்றத்தக்கது, எதையும் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும், எதற்கும் பயந்து பின்தங்கிவிடக் கூடாது என்பதை எல்லாம் வசனங்களாலும், காட்சிகளாலும் காட்டி தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குநர் ராகுல் ரவீந்திரன்.

தமிழிலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது, ராஷ்மிகா மந்தனாவின் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸால் தூக்கி நிறுத்தப்படும் இந்தத் திரைப்படம். - செ.ஞானபிரகாஷ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in