தங்கம் விலை இன்னும் குறையுமா? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
கடந்த 11 மாதங்களுக்கு பிறகு, தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. நவமபர் 17-ல் பவுனுக்கு ரூ.560 குறைந்து, ரூபாய் 99 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளான நவம்பர் 18-ல், 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூபாய் 255 குறைந்து ரூபாய் 12,215 ஆகவும், ஒரு பவுன் விலை ரூபாய் 2,040 குறைந்து ரூபாய் 97,720 ஆகவும் விற்பனை ஆனது. கடந்த 9 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூபாய் 8,000-க்கும் மேலாக சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது. அதேவேளையில், தொடர்ந்து சரிந்து வரும் வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி விலை 185 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 1,85,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
உலக அளவில் எல்லா தரப்பு மக்களால் விரும்பும் ஆபரணமான தங்கம் உள்ளது. இது, மக்களின் தனிப்பட்ட செல்வநிலை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக உயர்ந்து வந்தது. பொதுவாக தங்கம் விலை, சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச்சில் ஒரு பவுன் ரூபாய் 50 ஆயிரத்தையும், அதே ஆண்டு மே மாதத்தில் ரூபாய் 55 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரியில் ரூபாய் 60 ஆயிரத்தையும், அக்டோபரில் ரூபாய் 97 ஆயிரத்தையும், டிசம்பர் 15-ல் ரூபாய் ஒரு லட்சத்தையும் தாண்டியது.
நடப்பாண்டில் ஜனவரி 29-ல் தங்கம் ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 தொட்டு, புதிய விலை உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. இதற்கிடையில், கடந்த நவமப்ர் 10-ம் தேதி முதல், தங்கத்தின் விலை குறைந்து வந்தது. நவம்பர் 9-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ஆக இருந்தது. இதன்பிறகு படிப்படியாக குறைந்து, நவம்பர் 17-ம் தேதி ரூ.1 லட்சத்துக்கு கீழ் இறங்கியது.
அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளதால், பிற நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தங்கம் வாங்குவது அதிக செலவாக மாறி, அதன் தேவை குறைந்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. உச்ச விலையில் தங்கத்தை வைத்திருந்த முதலீட்டாளர்கள் லாபத்துக்காக விற்பனை செய்வதும் விலை சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த போவதாக நிலவும் அதிக எதிர்பார்ப்பு, அமெரிக்க டாலர் வலிமையாகி வருவது. அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவது ஆகியவை தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கியக் காரணம். வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா என்பது சந்தேகமே. ஆனாலும், பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம்” என்றார். இருப்பினும் தனிநபர்கள் தங்கள் முதலீடுகளை தேர்ந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் மேற்கொள்வதே நலம் பயக்கும்.