தங்கம் விலை குறைவது எப்போது சாத்தியம்?

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவில் தங்க நகை வாங்கி பயன்படுத்தும் மக்கள் மிக அதிகம். தங்கமும், வெள்ளியும் இன்றைக்கு பல குடும்பங்களுக்கு அசையும் சொத்தாக, வாழ்வின் ஒரு அங்கமாக இருப்பதுதான் உண்மை. இந்த நிலையில் தங்கம், வெள்ளியின் விலை ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயையும், ஒரு கிராம் விலை 15 ஆயிரம் ரூபாயையும் தாண்டிவிட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 4 லட்சம் ரூபாயையும், 1 கிராமின் விலை 400 ரூபாயையும் தொட்டுவிட்டது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் நகை விலை 2 லட்சம் ரூபாய் வரையிலும், ஒரு கிலோ வெள்ளியின் விலையும் 5 லட்சம் ரூபாய் வரையிலும் உயரும் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடும் நிலை உருவாகி வருகிறது.

தங்க நகை வாங்குபவர்கள் விலையேற்றத்தால் எந்தளவு தலைசுற்றலுக்கு ஆளாகிறோர்களோ, அதே நிலைமை இன்றைக்கு இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் வி.முத்துவெங்கட்ராம் கூறும்போது, “சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5 ஆயிரம் டாலரை நெருங்கிவிட்டது. இதனுடன் 6 சதவீத இறக்குமதி வரி, 3 சதவீத ஜிஎஸ்டி வரி ஆகியவை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அகில இந்திய தங்கம், நவரத்ன கற்கள் வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் அகர்வால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சமீபத்தில் சந்தித்தார். அப்போது, பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரியை 6-லிருந்து 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேபோல் 3 சதவீத ஜிஎஸ்டியை ஒன்றரை சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இதைச் செய்தால் ஒரு பவுனுக்கு 6,500 ரூபாய் வரை குறையும்.

நடுத்தர மக்கள், ஏழை எளிய குடும்பங்கள், அடித்தட்டு மக்களின் கைகளை விட்டு கொஞ்சம், கொஞ்சமாக தங்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது கள யதார்த்தம். எனவே, அவருடைய கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கோவை தங்க நகை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் வி.முத்துவெங்கட்ராம் தெரிவித்தார்.

கோவை நகை வியாபாரிகள் கூறும்போது, “கடையில் உள்ள பொருளை விற்றால்தான் லாபம். ஆனால் விற்காமல் கடையில் ஸ்டாக் வைத்திருக்கும் நகைக்கும் சேர்த்து, வரி செலுத்தும் வகையில் நகைத் தொழில் மாறி உள்ளது. ஆண்டின் மொத்த நகை இருப்பை கணக்கிட்டு, முப்பத்தி ஒன்றரை சதவீதம் வருமான வரி செலுத்த சொல்வது ஏற்புடையதல்ல. இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு பவுனுக்கு 29 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தும் சூழல் உள்ளது. ஒரு நகைக் கடையில் 10 கிலோ நகை இருந்தால் 20 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வியாபாரிகளை பாதிக்கும் விஷயம். இதற்கும் தீர்வு காண வேண்டும்'” என்றனர் நகை வியாபாரிகள்.

தங்கம் விலை குறைவது எப்போது சாத்தியம்?
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in