தமிழகத்தில் போதை மீட்பு மையங்களின் நிலை என்ன?

திருச்சியை அடுத்த அதவத்தூரில் உள்ள தனியார் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகுமார் என்பவர், அங்கிருந்த ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் வழிமுறைகள் ஏன் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்னும் கேள்வியும் எழுகிறது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்த விஜயகுமார், பல ஆண்டுகளாகக் குடிக்கு அடிமையாகி இருந்ததால் அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். விஜயகுமார் தீவிரக் குடிநோயாளி ஆனதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரைக் கடந்த ஜனவரி 8 அன்று அதவத்தூரில் உள்ள தனியார் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

இரண்டே நாள்களில், விஜயகுமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவரது உறவினருக்குத் தகவல் சொல்லப்பட்டது. மருத்துவமனையில் விஜயகுமார் இறந்துவிட, அவர் கம்பாலும் குழாயாலும் தாக்கப்பட்டது உடற்கூறாய்வில் தெரியவந்திருக்கிறது. குடிநோயாளிகளின் மறுவாழ்வுக்காகத் தமிழக அரசு சார்பில் ஏழு மையங்களும், நூற்றுக்கணக்கான தனியார் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 135-க்கும் மேற்பட்ட தனியார் மையங்கள் உள்ளன. அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்படும் மையங்களும் உண்டு.

பெரும்பாலும் வறிய, கீழ்த்தட்டு மக்களே குடி மற்றும் இதர போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், நெறிமுறைகள் அற்ற மீட்பு மையங்களை நம்பி இவர்கள் ஏமாறுவது வேதனைக்குரியது. போதை மீட்பு மையங்களை நச்சு நீக்கும் மையங்கள் எனப்படும் போதை மீட்பு மையங்கள், மறுவாழ்வு மையங்கள் என இரண்டாக அரசு வகைப்படுத்தியுள்ளது. இந்த இரண்டும் ஒருங்கிணைந்த மையங்களும் உண்டு. தகுதிவாய்ந்த மனநல ஆலோசகரைச் சந்தித்து, அவரது பரிந்துரையின்பேரில்தான் ஒருவர் போதை மீட்பு மையத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு மருந்து மாத்திரைகளின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதால், அந்த மையங்களில் அவசரச் சிகிச்சை உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சிகிச்சைக்குப் பிறகும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு அவசியம். இந்த மையங்களில் தகுதிவாய்ந்த மருத்துவர்களும் பயிற்சி பெற்ற நிபுணர்களும் மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால், இந்த நடைமுறைகள் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை என்பதைத்தான் இதுபோன்ற அவல மரணங்கள் உணர்த்துகின்றன.

போதையில் இருந்து மீள்வதற்கான செயல்பாடுகளில் பலரும் உடல் - மன நலப் பாதிப்புகளுக்கு ஆளாவது இயல்பு. அதுபோன்ற சூழலில் சிகிச்சை முறையோடு மனநலச் சிகிச்சையும் ஆற்றுப்படுத்துதலும் அவசியம். குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மையங்களில் இவை முறைப்படி கடைப்பிடிக்கப்படுவதில்லை. மூர்க்கத்துடன் நடந்துகொள்கிறவர்களைத் தனிமைப்படுத்துவதும் கொடூரமாகத் தாக்குவதும் தொடர்ந்து நடக்கிறது.

மக்களைப் போதையில் இருந்து மீட்பது குறித்துப் பேசும் அதேநேரம், அதற்கான மூலக் காரணத்தை ஆராய்வதும் அவசியம். தங்குதடையின்றிக் கிடைக்கும் மதுவும் போதைப் பொருள்களும் சமூகத்தின் பெரும்பாலான மக்களை மீள முடியாத புதைகுழிக்குள் தள்ளிவிடுகின்றன. இவற்றால் குடும்பங்களும் சமூகமும் சீரழிகின்றன. இந்த அவலத்துக்கு முடிவுகட்டும் வகையில் கொள்கை ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதுதான் அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.

தமிழகத்தில் போதை மீட்பு மையங்களின் நிலை என்ன?
Single Salma: தன்னை அறியும் சல்மா உடைத்த ‘சமூகச் சடங்கு’ | திரை தேவதைகள் 01

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in