பாலியல் குற்றங்களை தடுக்க ‘பாடத் திட்ட’ யோசனை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
‘பாலியல் குற்றங்களைத் தடுக்க கல்வியில் என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில், இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பா.கா.தென்கனல் இசைமொழி எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை கவனம் ஈர்த்துள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
பாலியல் குற்றங்களைத் தற்போதைய சட்டத்தின் தோல்வியாகவும், உளவியல், உரிமையியல், அறிவியல் போதாமையால் விளைந்த ஒட்டுமொத்தச் சமூகத்தின் தோல்வியாகவும் பார்க்க வேண்டும். கடந்த காலத்தைக் காட்டிலும், அறிவியல் விழிப்புணர்வு பெற்ற நாகரிகமான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே அந்தந்த வயதுக்கு ஏற்ற அறிவைப் புகட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
குழந்தைகள் மாணவர்களாகப் பரிணமிக்கும்போது, அவர்களுக்கான உரிமை போன்றவற்றை பேசத் தொடங்கியிருக்கிறோம். அண்மைக் காலத்தில், பாலியல் சீர்கேடுகளுக்கு ஏற்பப் பாதுகாப்பான தொடுதல் - பாதுகாப்பற்ற தொடுதல்.... அதாவது Good touch - Badtouch என்பவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம்.
குழந்தைகளின் உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்கள் தோன்றும்போதே, அதற்கு ஏற்ற அறிவையும், அணுகுமுறையையும் முறையாகத் தர வேண்டியது சமூகத்தின் கடமை. ஏற்கெனவே அறிவியல் பாடத்தில் பாலியல் சார்ந்த பாடத்திட்டம் இருப்பதாகச் சிலர் சொல்லக்கூடும். அது வேறு. அதை அனைத்து வகுப்பிலும் முறையாக எடுப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாடத்திட்டங்களில் இவற்றை ஓரளவு கவனத்தோடு வைத்திருந்தாலும், அது முழுமையானது அல்ல என்றே கருதுகிறோம்.
அந்தந்த வயதுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு - அந்தந்த வயதில் தோன்றும் உடலியல் சார்ந்த, உளவியல் சார்ந்த மாற்றங்களைத் தெளிவாக விளக்க வேண்டும். அதற்கான முறையான தனிப் பாடத்திட்டம் தேவை. அப்படியான ஓர் ஏற்பாடு இல்லாததால், வீட்டிலும் பெற்றோர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாததாலும், இது குறித்த உரையாடல்களுக்கு அவர்கள் தயங்குவதாலும், அதற்கான சமூக மனநிலை இல்லாததாலும், மாணவர்களும் இளைஞர்களும் தங்களுக்கு தோன்றும் ஐயங்களுக்கு விடை தேட அவர்களாகவே முற்படுகிறார்கள்.
அவர்களுக்கு ஊடகங்கள் மூலமாகக் கிடைக்கும் தவறான / ஆபாசமான பதில்கள், அவர்களின் மனதைப் பாதிக்கின்றன. தவறான கருத்துக்களை, தவறான / அரைகுறை அறிவு கொண்ட நபர்களிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்புகளே இன்றைக்கு அதிகம். அது அவர்களைச் சீர்குலைத்துவிடுகிறது. வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலமாக வயதுக்கும் வகுப்புக்கும் ஏற்ற வகைகளில் பாடத்திட்டங்களை உருவாக்க பாடத்திட்டக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
மகப்பேறு மருத்துவர், உளவியலாளர், பாலியல் பயிற்றுநர், சட்ட வல்லுநர், ஆசிரியர், பேராசிரியர், கற்றறிந்த பெற்றோர்கள், குழந்தை உரிமை / பெண் உரிமை / மனிதச் உரிமை செயல்பாட்டாளர்கள் ஆகியோர் குழுவில் இடம்பெற வேண்டும். உடலியல் சமூகவியல், உளவியல், சட்டம் சார்ந்து முறையாகப் பயிற்சி அளித்து, நன்கு பயிற்சி பெற்ற அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களே பயிற்றுநராக இருக்க வேண்டும்.
அதற்கு வாய்ப்பு இல்லாத இடங்களில் முறையாகப் பயிற்சி பெற்ற – அரசின் சான்றிதழ் பெற்ற பயிற்றுநர்களை நியமிக்கலாம். அதற்குரிய வரம்புக்குள் நாகரிகமாகவும், பக்குவமான வகையிலும் பாடங்களை பயிற்றுநர்கள் நடத்த வேண்டும். இந்தக் கல்வியில் உடல், உளவியல், சமூகம், உறவுகள், சட்டம் ஆகிய அனைத்தும் கலந்திருக்க வேண்டும். குழந்தை உரிமை, பெண் உரிமை, மனித உரிமை போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதாகப் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
இதன் மூலம் பதின்பருவச் சிக்கல்கள் குறையும். மாணவர்கள் மன உறுதியோடு கல்வியில் கவனம் செலுத்த முடியும். இத்தகைய வகுப்புகளை மாதம் ஒரு முறை நடத்தலாம். ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும், பிறகு சேர்ந்தும் வகுப்புகள் நடத்தப்படலாம். அவர்களுக்கு இடையிலும் ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்வது ஆக்கபூர்வமான மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
இந்தக் கல்விக்கு ‘பாலியல் கல்வி’ என்று நேரடியாகப் பெயர் வைக்க வேண்டியதில்லை. பெண் ஆண் உடலியல் - உணர்வியல் - உரிமையியல் கல்வி, சமூகக் கல்வி என்று பன்முகத்தன்மை கொண்ட ஒரு பெயரை வைக்கலாம்.
அதேநேரம் சரியான கருத்துக்கள் மாணவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் இதுபோன்ற அரசின் பல திட்டங்கள், சடங்குரீதியாகவே அமைந்தன. அப்படி இல்லாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தக்கூடிய, கண்காணிக்கப்படக்கூடிய வகையில் இந்தப் பயிற்சி அமைய வேண்டும்.
இந்தப் பாடத்திட்டப் பயிற்சிக்கு மதிப்பெண் தேவையில்லை. கிரேடு இடப்பட வேண்டும். இந்தப் பாடத்திட்டம் கல்லூரிவரை நீட்டிக்கப்பட வேண்டும். வயதுக்கு ஏற்பப் பாடத்திட்டத்தின் உள்ளடக்கமும், அதிகரிக்கப்பட வேண்டும். பாடத்திட்டங்களை சிறிய கையேடுகளாக அரசே வெளியிட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து தளங்களிலும் இது பரவலாக்கப்பட வேண்டும். சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையிலும் அமையலாம். இதன் மூலம் மேம்பட்ட விவாதங்கள் நடைபெறட்டும்.
அறிவை இருட்டுக்குள் வைப்பதன் மூலம் விபத்துகள் ஏற்படலாம். அதை முறையான வகையில் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்போது குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் மற்றவர்களை மதிக்கவும் கற்றுக்கொள்வார்கள். சமூகத்தின் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள்.
பாலியல் குற்றமற்ற சமூகத்தை உருவாக்க; ஒரு நல்ல, பாதுகாப்பான, முதிர்ச்சியான சமூகத்தை வடிவமைக்க - பெற்றோராக, ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, சமூகச் செயல்பாட்டாளர்களாக, அரசாங்கமாக இணைந்து உழைப்போம் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பா.கா.தென்கனல் இசைமொழி.