‘சஞ்சார் சாத்தி’ ஆப் கட்டாயம்: மத்திய அரசு அதிரடியும் காரணமும்
சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மக்களை உளவு பார்க்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, விளக்கம் அளித்த மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “சஞ்சார் சாத்தி செயலியை ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிதாக வரவுள்ள ஸ்மார்ட்போன்களில் அந்த செயலி டீஃபால்டாக இருக்கும். வேண்டும் என்போர் அதனை அப்படியே வைத்துக்கொள்ளலாம். வேண்டாம் என நினைப்பவர்கள் அதனை டெலீட் செய்யலாம். இது பயனர்களின் முடிவுக்கு உட்பட்டது.
இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அரசின் கடமை. அதை தங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதாக இல்லையா என்பது பயனர்களின் முடிவைப் பொறுத்தது. விற்கப்படும் போன்கள் முறைப்படியானதா என்பதை சரிபார்க்கவும், போன் தொலைந்து போனால், அதனை கண்காணிக்கவும் இந்த செயலியை அரசு ஒரு வழிமுறையாக முன்மொழிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தங்கள் பயனர்களின் பிரைவசி உள்ளிட்ட காரணிகளை முன்வைத்து, சஞ்சார் சாத்தி செயலி விவகாரத்தில் தயக்கம் காட்டும் ஆப்பிள் நிறுவனம், இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது.