ஈரான் போர் தாக்கம்... இந்தியாவுக்கு ‘பாதிப்பு’ என்ன?
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதால் அதற்கு எதிர்வினையாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயுத் தேவைகளுக்கு வளைகுடா நாடுகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை இதன் உடனடித் தாக்கம் சமையல் எரிவாயு விலையில் எதிரொலித்திருக்கிறது. வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலையில் 60 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது; வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ளதால், நாடு முழுவதுமே உணவகங்கள் - ஓட்டல்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்கிவைத்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் எஸ்மா சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருப்பது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
துபாய், அபுதாபி போன்ற முக்கிய வர்த்தக மையங்களில் சரக்குகள் தேங்கியிருப்பதால், ஏற்றுமதியிலும் இந்தியா சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி வர்த்தகம் சீர்குலைந்திருப்பதால் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி துறைமுகங்களிலும் நடுக்கடலிலும் தேங்கியுள்ளது. மறுபுறம் இந்தியாவில் பாசுமதியின் விலை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
நாமக்கல்லில் 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் பண்ணைகளிலும் குடோன்களிலும் தேக்கமடைந்துள்ளன. முட்டை ஏற்றுமதி தடைபட்டதால் நாமக்கல்லில் நாள்தோறும் 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர்ச் சந்தையில் முட்டை வரத்து அதிகரித்திருப்பதால் முட்டை விலை குறைந்துவருகிறது. இதுபோக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியிலும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், இந்தியப் பெருங்கடலில் ஈரானியப் போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அடுத்து கப்பல் போக்குவரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வர்த்தகக் கப்பல்கள் செங்கடலுக்குப் பதிலாக நன்னம்பிக்கை முனை வழியாகச் சுற்றிப் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் சரக்குக் கட்டணம், எரிபொருள், காப்பீட்டுச் செலவு ஆகியவை மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றன. ஈரானைச் சுற்றியுள்ள வான் பரப்பைத் தவிர்க்க ஏர் இந்தியா, இண்டிகோ முதலான பயணிகள் போக்குவரத்து விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் பயண நேரமும் எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளன.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டியிருப்பினும் இப்போதுவரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லை. எனினும், மொத்த எண்ணெய்த் தேவையில் ஏறத்தாழ 85 சதவீதத்துக்கு இறக்குமதியைச் சார்ந்தே இருக்கும் இந்தியா விரைவில் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 92 ரூபாய் என சரிந்திருப்பதும் தாக்கங்களை மோசமாக்கும். போரில் நேரடியாக ஈடுபடும் நாடுகள் மட்டுமல்லாமல் பிற நாடுகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது உலகம் அறியாதது அல்ல. நிலைமை மோசமடைவதைத் தடுக்க, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிர முயற்சிகளை அனைத்து அம்சங்கள் சார்ந்தும் எடுத்தாக வேண்டும் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.
மத்திய கிழக்கில் நடைபெறும் இந்தப் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 75 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 92 ஆயிரம் கோடி ரூபாய் வரை பாதிப்பை சந்திக்கக்கூடும் என்று ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் ஏற்கெனவே ஆர்டர்கள், கப்பல் கட்டணம் மற்றும் சரக்கு நகர்வுகளை பாதித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த இடையூறுகள் தொடர்ந்தால், மார்ச் மாத ஏற்றுமதியிலும், ஒட்டு மொத்த 2026 நிதியாண்டின் ஏற்றுமதி புள்ளி விவரங்களிலும் இதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரியும் என்று தொழில் துறை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.