ஊருக்குள் புலி நுழைவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை
சில சந்தர்ப்பங்களில், புலிகளால் கால்நடைகள் வேட்டையாடப்பட்ட பிறகு உள்ளூர் மக்கள், விஷம் வைத்துப் புலிகளைக் கொல்வதும், உள்ளூர்க் கும்பல்களால் புலிகள் தாக்குதலுக்கு உள்ளாவதும் நடைபெறுகிறது. இது இந்தியாவின் இயற்கை வளமான புலிகளின் பாதுகாப்புக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடிப்படையில் புலிகள் காடுகளுக்குள் அதற்கான எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழும் ஓர் உயிரினம். ஓர் ஆண் புலி மற்றோர் ஆண் புலியைத் தன் எல்லைக்குள் அனுமதிக்காது. புலிகள் காரணமின்றித் தங்கள் காடுகளை விட்டு வெளியேறுவது இல்லை. ஒரு புலி அதன் எல்லைக்கு வெளியே வருவது என்பது, அதன் வாழ்விடத்திற்குள் ஏதோ மாறிவருவதன் அறிகுறியே. அதிகரித்துவரும் புலிகளின் எண்ணிக்கை, இளம் புலிகளுக்குப் புதிய வாழ்விட எல்லைப் பிரச்சினையை உருவாக்குகிறது. உணவு, பாதுகாப்பான இடத்தைக் கண்டறிய, மற்ற புலிகளின் எல்லைகளைப் புதியவை பகிர்ந்து கொள்ள முற்படும்போது, அங்குள்ள வலிமையான ஆண்புலிகளுக்கு இடையே மோதல் ஏற்படும். இதில் காயம்பட்டவை வெளியேற்றப்படும் போது, அவை கிராம விளிம்புகளில் அலைந்து திரிந்து, உயிர்வாழ ஓர் இடத்தைத் தேடுகின்றன.
அழிக்கப்பட்டுவரும் காடுகள், குறைந்துவரும் மான், காட்டு மாடு போன்ற இரையாகும் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை, மனித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போன்றவை புலிகளின் எல்லைகளை விரிவுபடுத்த நெருக்கடி ஏற்படுத்துகின்றன. இதனால் அவை காட்டுக்கு அருகில் இருக்கும் சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புகளைக் கடக்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பெரும்பாலான புலிகள் மக்களைத் தவிர்க்கின்றன. ஆனால், அவற்றின் இயற்கையான தடங்கள் தடுக்கப்படும்போது, இறுதியில் மனித நிலப்பரப்புகளுக்குள் அவை நுழைகின்றன.
வயதான மற்ற புலிகளின் தாக்குதல்களால் காயமடைந்த பலவீனமான புலிகளால் பெரும்பாலும் காட்டு இரையை வேட்டையாட முடியாது. மான் அல்லது காட்டுப்பன்றியைத் துரத்த முடியாதபோது, காடுகளுக்கு அருகே அமைந்துள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளை எளிதான வேட்டைக்காக அவை குறிவைக்கின்றன. இதுபோன்ற எதிர்கொள்ளலின்போது, மக்கள் மீது தற்செயலான தாக்குதல்களும் நிகழ்கின்றன.
ஒரு புலி குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே மனிதரைக் கொல்லும் புலியாக மாறுகிறது. சில நேரம் திடீரென்று ஏற்படும் நெருக்கமான புலி - மனித சந்திப்புகள், கால்நடை மேய்ப்பவர்கள், மரம் வெட்டுபவர்கள் அல்லது மறைந்திருக்கும் புலியைச் சந்திக்கும் விவசாயிகள் - போன்ற நிகழ்வுகள் தற்காப்புத் தாக்குதலைப் புலிகளிடம் தூண்டிவிடுகின்றன.
ஒரு புலி உயிர்வாழ்வதற்காக எதிர்வினை ஆற்றுகிறது என்பதையே இங்குப் புரிந்துகொள்ள வேண்டும். அங்கு மனித உயிரிழப்பு ஏற்படும்போது, அவை பிரச்சினைக்குரிய ஆள்கொல்லிப் புலியாகக் கருதப்படுகின்றன. ஆள்கொல்லிப் புலிகள் மனிதர்களை வேட்டையாடியவுடன் பெரும்பாலும் உண்பதில்லை. கொல்லப்பட்ட மனிதர்கள் அரிதாக ஒரு சில புலிகளுக்கு அவை பெரும்பசியில் இருக்கும்போது மட்டுமே உணவாகிறார்கள்.
புலிகள் இயல்பிலேயே ஆக்ரோஷமானவை என்பதால் இந்த மோதல்கள் ஏற்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக அவற்றின் வாழிடங்கள் கடும் நெருக்கடிக்கு உள்படுத்தப்படுவதால்தான் இந்த நிகழ்வுகள், அதுவும் அரிதாகவே நிகழ்கின்றன. புலிகளின் வாழிடப் பகுதியை விரிவுபடுத்திப் பாதுகாத்தல், மனிதத் தொந்தரவுகளைக் குறைத்தல், ஆரோக்கியமான இரை எண்ணிக்கையை உறுதிசெய்தல் ஆகியவை இத்தகைய துயரமான சூழ்நிலைகளைத் தடுப்பதற்கு முக்கியத் தேவை. - செந்தில்குமரன், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்