One Piece: பைரேட்களின் வியத்தகு சாசகங்கள்! - வெப் சீரிஸ் எப்படி?
19-ஆம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டிலிருந்து உருவாகி உலகம் முழுவதும் பெரும் புகழ்பெற்றவை மங்கா கிராஃபிக் நாவல்கள். மங்கா தொடரில் கிராபிக் நாவலாகவும் பின்னர் அனிமே தொடராகவும் ஆயிரம் எபிசோட்களை கடந்த ‘ஒன் பீஸ்’ என்ற படைப்பு தற்போது வெப் தொடராக நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.
கடற்கொள்ளையர்களின் தலைவராக கோல்டு ரோஜர் என்பவரை ஒருவரை அரசாங்கம் தூக்கில் போடுகிறது. சாகும்முன் மக்களை பார்த்து தான் இதுவரை கொள்ளையடித்த பொக்கிஷங்கள் இருக்கும் இடம் பற்றி சொல்லிவிட்டு சாகிறார் கோல்டு ரோஜர். இதனால் அந்த ஊரில் இருந்த மக்கள் அனைவருமே கடல்கொள்ளையராக மாறி கடலை நோக்கி பயணப்படுவதுடன் கதை தொடங்குகிறது.
இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, மங்கி டி லூஃபி என்ற சிறுவன் சிறுவயது முதலே கடற்கொள்ளையர்களின் அரசனாக வேண்டும் என்று வெறியுடன் வாழ்கிறான். அவன் எண்ணம் செயல் அனைத்தும் அதை நோக்கியதாகவே இருக்கிறது. சிறு வயதில் அவன் சாப்பிடும் ‘டெவில் ஃப்ரூட்’ என்ற பழத்தால் அவனுடைய உடல் எலாஸ்டிக் தன்மை கொண்டதாக மாறுகிறது. அவனது உடலை எவ்வளவு நீளத்துக்கு வேண்டுமானாலும் நீட்ட முடியும்.
ஆழ்கடலில் இருக்கும் ‘ஒன் பீஸ்’ என்ற ரகசிய பொருளை கண்டடைந்து கடற்கொள்ளையர்களின் அரசனாகும் நோக்கில் பயணம் மேற்கொள்ளும் லூஃபி, வழியில் கடற்கொள்ளையர்களை வேட்டையாடும் வாள் வீரன் ரொரோனா ஜோரோ, நாமி என்ற இளம்பெண், யூசுப் என்ற உண்டிவில் வீரன், சான்ஜி என்ற சமையல் கலைஞன் ஆகிய வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட சிலரை தன்னுடைய கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு ‘ஸ்ட்ரா பைரேட்ஸ்’ என்ற ஒரு குழுவையும் உருவாக்குகிறான்.
இந்தப் பயணத்தினூடே சில எதிரிகளையும் எதிர்கொள்கிறான். லூஃபியின் நோக்கம் நிறைவேறியதா, ஸ்ட்ரா பைரேட்ஸ் குழுவின் பயணம் வெற்றி பெற்றதா என்பதே ‘ஒன் பீஸ்’. புகழ்பெற்ற ஒரு நாவலையோ அல்லது வேறு ஒரு வடிவத்தில் இருக்கும் படைப்பையோ லைவ் ஆக்ஷன் படைப்பாக திரையில் கொண்டு வருவதில் இரண்டு சவால்கள் உள்ளன. அசல் படைப்பின் நீண்டகால ரசிகர்களை அது திருப்திபடுத்தாமல் போகலாம். அல்லது, அதில் புதிய தலைமுறையினரை கவரும்படியான அம்சங்கள் இல்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படலாம்.
ஆனால் இந்த இரண்டு சவால்களையும் வென்று, அசலுக்கு பாதிப்பில்லாத வகையில் தரமான படைப்பாக திகழ்கிறது ‘ஒன் பீஸ்’ வெப் சீரிஸ். ‘ஒன் பீஸ்’ தொடர் நடக்கும் காலகட்டமே வித்தியாசமானது. நவீனமும், பழமையும் கலந்து ஒரு கற்பனை உலகமாக அது நமக்குக் காட்டப்படுகிறது. எந்தக் காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதை யூகிக்க முடியாத ஒரு ‘யுடோப்பியா’ கதைக்களம்.
முதல் சீசனில், கதை முழுக்க வரும் சின்னச் சின்ன ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மூலம் அந்தந்த கதாபாத்திரங்களுடன் நாம் ஒன்ற முடிகிறது. குறிப்பாக ஸோரோ மற்றும் நாமியின் பின்னணி மிகவும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளன. முதலில் லூஃபியின் குழுவின் இணைய மறுக்கும் ஸோரோ மற்றும் நாமி இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களையே அறியாமல் லூஃபியின் மீது அன்பு செலுத்தும் காட்சிகளும், ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு புதிய எதிரியை கொண்டு வந்த விதமும் சிறப்பு.
கெக்கோ என்ற தீவில் இருக்கும் சிரப் கிராமத்தில் பட்லர் வேடத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் கடற்கொள்ளையனின் கதை ஒரு த்ரில்லர் படத்துக்கு ஒப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது. முகத் தோற்றம், பேச்சு, செயல் என இளவயது சிம்புவை ஞாபகப்படுத்தும் மங்கி டி.லூபி ஆக இனாகி காட்பாய். துறுதுறுப்பு, கண்களை உருட்டி உருட்டி பேசும் குறும்பு என தொடர் முழுக்க தன்னுடைய நடிப்பால் ஈர்க்கிறார். அனிமே ரசிகர்களே மங்கி. டி லூஃபிக்கு இதை விட சரியான ஆள் கிடைக்கமாட்டார் என்று பாராட்டும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதல் இரண்டு எபிசோட்களில் கதைக்குள் செல்ல நேரமெடுத்தாலும், ஆழமான பின்னணிகளின் மூலம் அடுத்தடுத்த எபிசோட்கள் சூடுபிடிக்கத் தொடங்கி விடுகின்றன. தொடரின் பலமே கதை நெடுக வரும் கலகலப்பான, கலர்ஃபுல்லான காட்சியமைப்புகள்தான். எந்த இடத்திலும் தீவிரத்தன்மை வந்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் திரைக்கதையை அமைத்துள்ளனர்.
நத்தை டெலிபோன்கள், சூப்பர்பவர் தரும் டெவில் பழங்கள், சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மீன் மனிதர்கள் என தொடரில் சுவாரஸ்யமான ஃபேண்டஸி அம்சங்கள் அநேகம் உள்ளன. கிராண்ட் லைன் நோக்கிய பயணத்தில் லூஃபி மற்றும் அவரது ஸ்ட்ரா ஹேட் குழுவினர் சந்திக்கும் சவால்கள், புதிய நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகியவையே இரண்டாவது சீசனின் கதைக்களம். முதல் சீசனில் குழு ஒன்று சேர்வதுதான் தொடரின் பிரதான நோக்கமாக இருந்த நிலையில், இந்த இரண்டாவது சீசனில் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பும், கிராண்ட் லைன் நோக்கிய அவர்களது சாகசப் பயணமும் கலகலப்பாக விளக்கப்பட்டுள்ளது.
முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே கதை தொடங்குகிறது. லூஃபி தனது ஆதர்ச கடற்கொள்ளையரான கோல்ட் டி. ரோஜர் தூக்கிலிடப்பட்ட இடத்திற்குச் செல்வதும், அங்கிருந்து மரைன் அதிகாரி கேப்டன் ஸ்மோக்கரின் பிடியிலிருந்து தப்பிப்பதும் என ஆரம்பத்திலேயே ஒரு விறுவிறுப்பை தொடங்குகிறது தொடர். அனிமே தொடரில் பல நூறு எபிசோடுகள் கொண்ட இந்தக் கதையை, லைவ் ஆக்ஷன் வடிவத்திற்குத் தேவையான மாற்றங்களுடன் சிதைக்காமல் வழங்கியிருப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.
குறிப்பாக, அலாபாஸ்டா நாட்டின் இளவரசி விவி-யின் அறிமுகமும், அந்த நாட்டில் நிலவும் அரசியல் சிக்கல்களும் தொடரின் சுவாரஸ்யத்துக்கு வலு சேர்க்கிறது. வழக்கம்போல லூஃபியாக துள்ளலான நடிப்பை வழங்கி இருக்கிறார் இனாக்கி கோடாய். முதல் சீசனைப் போலவே லூஃபியின் எதற்கும் அஞ்சாத துணிச்சல், நண்பர்களுக்காக எதையும் செய்யும் பிடிவாதம் ஆகியவற்றுக்காக வைக்கப்பட்ட காட்சிகள் சிறப்பு.
அதேபோல், ஸோரோவின் வாள் வித்தை, குறிப்பாக அவர் மூன்று வாள்களை வாங்கும் காட்சி எடுக்கப்பட்ட விதம் சிறப்பு. இதேபோல ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இந்தச் சீசனில் இன்னும் கூடுதலான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்தச் சீசனின் முக்கிய கதாபாத்திரமாக வரும் டோனி டோனி சாப்பர் எனும் ஒரு மான்குட்டி கதாபாத்திரம். சிஜிஐ மூலம் உருவான அதில், மனித உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தொடர் முழுக்க வரும் பல வேடிக்கையான தருணங்கள்தான் பெரும் பலம். கப்பலை விழுங்கும் திமிங்கலம், பிரம்மாண்ட கோல்டு ஃபிஷ், டைனோசர்கள், ராட்சஷ மனிதர்கள் வாழும் தீவு என் ஒவ்வொரு எபிசோடிலும் ஏராளமான ஆச்சர்யங்கள். ஒட்டுமொத்தமாக சீசனுக்கே ஒரு கதைக்களம் என்றாலும், முதல் சீசனைப் போலவே ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு குட்டி ப்ளாட் வைத்திருப்பது புத்திசாலித்தனமான ஐடியா. சாஞ்சி மற்றும் ஸோரோவுக்கு இடையிலான ஈகோ மோதல்கள், யூசாப்பின் தற்பெருமை பேசும் குணம் என தொடர் முழுவதும் கலகலப்புக்கு பஞ்சமில்லை.
அனிமேவில் இருந்த நீண்ட பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, கதையின் முக்கியத் தருணங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். எனினும் அசலின் தரத்தை எங்கும் சிதைக்காதது ஆச்சர்யம்.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் மெய்சிலிர்க்க வைக்கின்றன. கிராண்ட் லைனின் விசித்திரமான தீவுகள், ராட்சத மீன்கள் மற்றும் கப்பலின் வடிவமைப்பு என மிகத் துல்லியமாக் செதுக்கியுள்ளனர். லிட்டில் கார்டன் தீவின் பிரம்மாண்டமான காடுகளும், அலாபாஸ்டாவின் பரந்து விரிந்த பாலைவனமும் நம்மை ஒரு புதிய உலகுக்கு அழைத்துச் செல்கின்றன.
பின்னணி இசையாக அனிமேவில் வரும் புகழ்பெற்ற இசைக் கோர்ப்புகளை ஆங்காங்கே ஒலிக்கச் செய்து உற்சாகப்படுத்துகிறது. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்ட விதம் பிரம்மாண்டம். அனிமே கதைகளைத் திரையில் கொண்டு வருவது கடினம், அதையும் தாண்டி எந்தவித நெருடலும் இன்றி அசலை சிதைக்காமல் ஒரு நேர்த்தியான தொடராக கொண்டுவந்த படக்குழுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை இப்போதே எகிற வைத்துவிட்டது ‘ஸ்ட்ரா ஹேட்’ குழுவினரின் இந்த சாகசப் பயணம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.