‘களம்காவல்’ விமர்சனம் - சீட் நுனி சைக்கோ த்ரில்லர் திரை அனுபவம் எப்படி?
கர்நாடக மாநிலத்தை உலுக்கிய சீரியல் கொலையாளி சயனைடு மோகனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 20 பெண்களை கொலை செய்த அவனின் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார் என்ற எதிர்பார்ப்பே இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை பெரிதும் அதிகப்படுத்தியது. ஸ்டான்லி தாஸ் கதாபாத்திரத்தில் மம்மூட்டியும், போலீஸ் அதிகாரி ஜெயகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விநாயகனும் நடித்துள்ளனர்.
மிரள வைக்கும் அறிமுகத்துடன் தொடங்கும் படம், சைக்கோ கொலையாளியான ஸ்டான்லியை தேடும் போலீஸ் அதிகாரி ஜெயகிருஷ்ணன் பக்கம் திரும்புகிறது. இந்த இருவருக்கும் இடையிலான கேட் அண்ட் மவுஸ் கேம் தான் திரைக்கதை. கொலையாளி யார் என்று ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுகிறது. ஆனாலும் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் நபரின் மனநிலையும், அவரை வலைவீசி தேடும் காவல் அதிகாரியின் நிதானமான விசாரணை முறையும் பற்றிய உளவியல் சார்ந்த போராட்டமாக விரிகிறது.
சீரியல் கில்லர் வெர்சஸ் அவரை துரத்தும் போலீஸ் அதிகாரி என்ற கதைக்களத்தில் ஏராளமான வெப் தொடர்களும், திரைப்படங்களும் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. ஆனால், முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதையை எழுதி ஓர் அட்டகாசமான த்ரில்லர் விருந்தை பார்வையாளர்களுக்கு வழங்கி இருக்கிறார் இயக்குநர் ஜிதின் கே.ஜோஸ்.
மம்மூட்டி போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்துக் கொண்டு, ஒரு கமர்ஷியல் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், கதைக்குத் தேவையான எதார்த்தமான அணுகுமுறையை கையாண்டிருப்பது வரவேற்கத்தக்கது. கொலைகாரனை ஒரு ஹிரோவாக சித்தரிக்காமல், அவனுடைய செயலை நியாயப்படுத்தும் ‘நெஞ்சை நக்கும்’ பின்புலம் என ஜல்லியடிக்காமல், அவன் ஒரு குற்றவாளி என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
படத்தின் மிக முக்கியமான பலமே அதன் இரண்டு முன்னணி நடிகர்கள்தான். வில்லன் மம்மூட்டியின் நடிப்பு இந்தப் படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஸ்டான்லி தாஸ் என்ற சீரியல் கொலையாளி கதாபாத்திரத்தில், எந்தவித அதீத நடிப்பையும் வெளிப்படுத்தாமல், தன் முக பாவனைகளிலேயே பயமுறுத்துகிறார். வீட்டில் ஒரு சராசரி மனிதர் போலக் காட்சியளித்துவிட்டு, அடுத்த நிமிடமே இரக்கமற்ற கொலையாளியாக மாறும் காட்சிகளில் நிஜமாகவே மிரட்டி இருக்கிறார்.
படத்தின் ஹீரோ விநாயகன். அமைதியாக, கட்டுப்பாடான உடல்மொழியுடன், ஒரு குறிக்கோளுடன் இயங்கும் போலீஸ் அதிகாரியாக மிளிர்கிறார். வழக்கமான கதாநாயக போலீஸ் அதிகாரிக்கான அலட்டல், நீண்ட வசனங்கள் என ஏதும் இல்லாமல், மிகவும் யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். ரஜிஷா விஜயன் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு.
ஃபைசல் அலியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான இருள் தன்மையுடன் கூடிய நிதானமான சூழலை உருவாக்குகிறது. காட்சிகளுக்கு இடையே வரும் நீண்ட மவுனங்களும், குறைந்த ஒலியுடன் கூடிய பின்னணி இசையும், த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கின்றன. படத்தில் 80-களின் இளையராஜா, எம்எஸ்வி டைப் பாடல்களை உருவாக்கி பயன்படுத்தி இருந்தது நல்ல ஐடியா.
என்னதான் முதல் காட்சியிலேயே கொலையாளியை வெளிப்படுத்தி விட்டாலும் க்ளைமாக்ஸில் அவர் பிடிபடும் விதத்தை படமாக்கிய விதம் சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது. மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை உத்தி. மிகச் சில இடங்களில் தொய்வு இருந்தாலும், மலையாள சினிமாவின் முக்கியமான த்ரில்லர் படங்களில் ஒன்றாக இதனை நிச்சயம் சொல்லலாம். மம்மூட்டி மற்றும் விநாயகனின் அபார நடிப்பும், காட்சியமைப்புகளும் குறைகளை மறக்கடிக்கின்றன. அழுத்தமான, உளவியல் சார்ந்த திரைப்படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.