‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் - தணிக்கையில் பிரச்சினை என்ன?
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், என்னதான் பிரச்சினை என்பதை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
தவெக தலைவர் நடிகர் விஜய்-யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ல் உலகம் முழுவதும் திரையிட திட்டமிடப்பட்டிருந்து.
இந்த நிலையில்தான், படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் தாமதம் செய்து வருவதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, படத்துக்கு எதிராக தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரை தாக்கல் செய்தார்.
படத் தயாரிப்பு குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், “படத்தைப் பார்த்து தணிக்கை சான்றிதழ் அளிக்கும் தணிக்கை குழு உறுப்பினரே, எப்படி படத்துக்கு எதிராக புகார் அளிக்க முடியும்? இதில் உள்நோக்கம் உள்ளது” என்றனர்.
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், “படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பும்படி மத்திய அரசு கூறவில்லை. தணிக்கைக்குழு தான் பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு அனுப்ப தணிக்கை வாரியத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு பரிந்துரை செய்த பிறகு, அந்தப் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தது ஏன்? தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல” என்றார்.
படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில், ஒருவர் மட்டும் புகார் அளித்துள்ளார் அவர்களின் நோக்கம் திட்டமிட்டபடி படத்தை வெளியிடக்கூடாது என்பதுதான்” என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கில் ஜனவரி 9-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த 'ஜனநாயகன்' குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.