காந்தி டாக்ஸ்: பேசப்படுமா விஜய் சேதுபதியின் மவுனப் படம்?
மும்பை நகரத்தின் பரபரப்பான பகுதில் வறுமையின் நிழலில் உழன்று கொண்டிருப்பவர் மஹாதேவ் ஆக வரும் விஜய் சேதுபதி. உடல்நிலை சரியில்லாத அம்மாவை கவனித்துக் கொள்ளும் அவர் ஒரு நிலையான வேலை தேடி அலைகிறார். எதிர்வீட்டில் இருக்கும் அவரது காதலி காயத்ரியாக வரும் அதிதி ராவ் ஹைதாரிக்கு வீட்டில் தீவிரமான மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னொருபுறம் பெரும் செல்வந்தராக இருந்து நொடித்துப் போய் வாழ்வின் விளிம்பில் நிற்கிறார் போஸ்மேன் ஆக வரும் அரவிந்த்சாமி.
ஒரு விபத்தில் தனது குடும்பத்தை இழந்து, பிறகு சொத்துகளையும் இழந்து அவர் நிர்க்கதியாக நிற்கிறார். இந்த இருவரும் ஒரு புள்ளியில் இணையும்போது, இருவரது வாழ்விலும் சில குறிப்பிடத்தக்க திருப்பம் நிகழ்கிறது. அதன் பிறகு நடப்பவையே ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் திரைக்கதை.
மும்பை போன்ற இரைச்சலான ஒரு பெருநகரத்தை மையமாகக் கொண்டு ஒரு மவுனப் படத்தை எடுக்க நினைத்த இயக்குநரின் எண்ணம் பாராட்டத்தக்கது. படத்தின் தலைப்பு தொடங்கி ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் மையக்கரு என்ன என்பதை வசனங்களின்றி மிக எளிமையாக பார்வையாளர்களுக்கு புரியவைத்து விடுகிறார். தொடக்கத்தில் வரும் நீதிமன்றக் காட்சி நல்ல ஐடியா. ஆனால், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகத்துக்குப் பிறகு பெரிய சுவாரஸ்யமோ புத்திசாலித்தனங்களோ இன்றி திரைக்கதை நகரத் தொடங்கி விடுகிறது.
இயக்குநர் எடுத்திருப்பது மவுனப் படம். அப்படியென்றால் படத்தின் கதாபாத்திரங்கள் பேசுவதற்கான தேவைகள் படத்தில் இருக்கக் கூடாது. அப்படியான காட்சிகளை வைத்தால் மட்டுமே பார்வையாளர்களால் இது ஒரு மவுனப் படம் என்ற எண்ணமின்றி படத்துடன் ஒன்ற முடியும். ஆனால் அப்படியான காட்சிகள் படத்தில் மிக சொற்பமாகவே வருகின்றன.
படம் முழுக்க பேசுவதற்கு தேவையுள்ளதாக வைக்கப்பட்ட காட்சிகளில் கதாபாத்திரங்கள் வாய் பேசமுடியாதவர்கள் போல சைகை செய்வது உறுத்தல். அவர்கள் எதற்காக பேசாமல் இருக்க வேண்டும்? இதற்கான உதாரணத்தை பல ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ‘பேசும் பட’த்தில் இருந்தே தரலாம். அந்தப் படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவற்றில் கதாபாத்திரத்தில் பேசுவதற்கான தேவை பெரிதாக இருக்காது. அதுதான் ஒரு மவுனப் படத்துக்கான அடையாளம். ஆனால் இப்படத்தில் பல இடங்களில் கதாபாத்திரங்கள் சைகைகளிலும், வாட்ஸப் உரையாடல் வழியாகவும் பேசிக் கொள்கின்றன.
இன்னொருபுறம் மிக பலவீனமான திரைக்கதை அமைப்பு. கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வ பிணைப்புகளோ, மையக் கதாபாத்திரங்களின் ஏமாற்றம், வலி ஆகியவையோ பார்ப்பவர்களுக்கு எந்த தாக்கத்தையும் தரவில்லை. இதனால் வசனங்கள் இல்லாத காட்சிகளில் கொட்டாவி வருவதை தவிர்க்க இயலவில்லை.
விஜய் சேதுபதி வழக்கம்போல நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். வசனம் இன்றி கண்களாலேயே பல இடங்களில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் அபாரம். மற்றொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமியும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில். படத்தின் மற்றொரு ஆச்சர்யம் அதிதி ராவ் ஹைதாரி. விஜய் சேதுபதிக்கு உத்வேகம் தருவதை தவிர பெரிய வேலை இல்லை என்றாலும் நடிப்பில் தன் முழு உழைப்பை தந்து கவனம் ஈர்க்கிறார். மராத்தி நடிகர் சித்தார்த் ஜாதவ் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.
வசனங்கள் இல்லாத படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பல இடங்களில் உயிர் கொடுக்கிறது. குறிப்பாக விஜய் சேதுபதி, அதிதி வரும் இடங்களில் பின்னணியில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை. எனினும் பல இடங்களில் ஹாரிபாட்டர் பாணியில் பின்னணி இசை ஒலிப்பதாக தோன்றுகிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. மும்பையின் பரபரப்பை கரண் ராவத்தின் கேமரா கச்சிதமாக காட்சிப்படுத்தியுள்ளது.
இரண்டாம் பாதியில் வரும் ஒரு கொள்ளை தொடர்பான காட்சி எந்தவித விறுவிறுப்பும் இன்றி செல்கிறது. ஏறக்குறைய 20 நிமிடத்துக்கும் மேலாக ஓடினாலும் படத்தின் முக்கிய திருப்பமாக இருந்திருக்க வேண்டிய அந்தப் பகுதி கடும் அயற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் க்ளைமாக்ஸில் வரும் நெகிழ்வான தருணங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. மொத்தத்தில், வசனங்கள் இன்றி காட்சிகளின் வழியாக உணர்வுகளைக் கடத்தும் ஒரு கலை வடிவமாக வந்திருக்க வேண்டிய இந்த மவுனப் படம், அதன் நோக்கத்தில் வெற்றி பெறாமல் தடுமாறி இருக்கிறது.