“முகமது சிராஜ் அதிர்ஷ்டம் இல்லாதவர்!” - ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆதங்கம்

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

Updated on
2 min read

2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகே முகமது சிராஜ் இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. அதாவது 16 மாதங்களாக அவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. இந்த முறை இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 அணியிலும் சிராஜ் இடம்பெறவில்லை.

இதனையடுத்து முகமது சிராஜுக்கு அதிர்ஷ்டமில்லை என்று தென் ஆப்பிரிக்க லெஜண்ட் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-2 என சமநிலையுடன் முடித்ததில் முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்திருந்தார். இருப்பினும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவரது பங்கேற்பு தற்போது ஒருநாள் அணிக்குள் மட்டுமே சுருக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், ஒன்பது ஆண்டுகளான தனது சர்வதேச வாழ்க்கையில் சிராஜ் வெறும் 16 டி20 போட்டிகளையே விளையாடி, 14 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் தொடர்ந்த நிலையில், சிராஜ் தனது இடத்தை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவிடம் இழந்தார். ராணா பேட்டிங்கிலும் ஆடக்கூடியவர் என்பதே காரணம்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ், “சிராஜ் ஒருநாள் அணியில் உள்ளார். டி20 அணியில் இடம் பெறாதது துரதிர்ஷ்டம் தான். ஆனால் அது அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் உள்ளனர்.

ஹர்ஷித் ராணா பேட்டிங்கிலும் பங்களிக்க முடியும். அதனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சிராஜ் முழுமையான பந்து வீச்சாளர் மட்டுமே. மேலும், இந்திய அணி வேகப்பந்துவீச்சை விட ஸ்பின் பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்துகிறது. வேகப்பந்து வீச்சின் மூலம் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் கிடைத்தால், அதை கூடுதல் பலனாகவே பார்க்கிறார்கள். இருந்தாலும் 2027 உலகக் கோப்பைக்கான ஒருநாள் திட்டங்களில் சிராஜ் இருக்கிறார்.

புதிய பந்தில் வீசி ஹர்ஷித்துக்கு அதிக அனுபவம் இல்லை. ஆனால் பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோருடன் சேர்ந்து சில ஓவர்களை வீச முடிந்தால் போதும். மீதமுள்ள ஓவர்களை ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா நிரப்ப முடியும். ஸ்பின் பந்துவீச்சிலும் அவர்கள் எல்லா அம்சங்களையும் நிறைவு செய்துள்ளனர். அதுவே போட்டிகளை வெல்லும் வழியாக இருக்கும்.

ஒருநாள் பும்ரா தாக்கம் இல்லாமல் இருந்தால், குல்தீப் யாதவ் வந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அல்லது அதற்கு மாறாகவும் நடக்கும். நடுப்பகுதியில் ஹர்திக் வந்து போட்டியின் வேகத்தை மாற்றுகிறார். இப்படியான அணிகள்தான் சாம்பியன் அணிகள். இந்தியா அந்த எல்லா அடிப்படைகளையும் சிறப்பாக கொண்டுள்ளது” என்றார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

<div class="paragraphs"><p>முகமது சிராஜ்</p></div>
அதிக போட்டிகள் விளையாடாத ஜேசன் ஸ்மித் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in