

ஜேசன் ஸ்மித்
டி20 அனுபவ வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸிற்குப் பதிலாக தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பைக்கு ஜேசன் ஸ்மித் என்பவரைத் தேர்வு செய்தது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், இவர் 5 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பதே.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தன் கடைசி 7 டி20 சர்வதேசப் போட்டிகளில் 40 ரன்களை எட்டவில்லை என்பதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று தென் ஆப்பிரிக்கா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
31 வயதான ஜேசன் ஸ்மித் ஒரு ஆல்ரவுண்டர். கொஞ்சம் சீம் பவுலிங் செய்யக் கூடியவர், அதாவது தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடிய யுடிலிட்டி கிரிக்கெட்டர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை வெஸ்டர்ன் கேப் பகுதியில் ஆடி வந்தவர் ஜேசன் ஸ்மித் தற்போது டர்பனில் ஆடுகிறார்.
அவரைத் தேர்வு செய்யக் காரணம் அவரது பன்முகத் திறன் என்கின்றனர் தென் ஆப்பிரிக்கா தேர்வாளர்கள். ஸ்மித்தே தன்னைப் பற்றிக் கூறும்போது, “நான் மூன்றாம் வரிசையிலிருந்து ஏழாம் வரிசை வரை எங்கும் பேட் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். எனவே எந்த சூழ்நிலையையும், எந்த நிலையும் வந்தாலும் அதற்கு ஏற்ப மாறி விளையாடுவது முக்கியம்.”
ஸ்மித் தற்போது SA20 தொடரில் MI கேப் டவுன் அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்மித் கடந்த 11 ஆண்டுகளில் 97 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சராசரி: 29.06 ஸ்ட்ரைக் ரேட்: 127.92. இது உலகக் கோப்பை அணித்தேர்வுக்கு போதாதுதான்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் ஜேசன் ஸ்மித் தன் ஆட்டப்பாணியையே முற்றிலுமாக மாற்றியுள்ளார். அவரது பவர் ஹிட்டிங் திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 140-ஐத் தாண்டி உள்ளது. சமீபத்திய CSA T20 சேலஞ்ச் தொடரில், அவரது ஸ்ட்ரைக் ரேட் 196.05 வரை உயர்ந்தது.
அந்த தொடரில், டால்பின்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மித்,19 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அணியை நாக்அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். இந்த அதிரடி இன்னிங்ஸ்தான், டி20 உலகக் கோப்பை அணியில் ஸ்மித்தை சேர்க்கக் காரணமாயிருந்தது என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.