

அலி கான்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் ஆரிஜின் வேகப்பந்து வீச்சாளர் அலி கான் (Ali Khan) தனக்கு இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வீரர் அலி கான், தற்போது கொழும்புவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் "இந்திய விசா மறுக்கப்பட்டது" (India visa denied) என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இது குறித்து கூடுதல் விளக்கங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை.
அலி கான் மட்டுமின்றி, அமெரிக்க அணியில் பாகிஸ்தான் பின்னணி கொண்ட சில வீரர்களும் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதில் இசான் ஆதில் பாகிஸ்தான் அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். மற்றொரு வீரர் முகமது மோசின். தற்போது இவர் கொழும்பு முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்திகளின் படி இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் மற்றும் ரெஹான் அகமது ஆகியோரும் தங்களது விசாக்களுக்காகக் காத்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது விசா நடைமுறைகள் சற்று சிக்கலாகியுள்ளன.
இது குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்தப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க இந்திய அரசுடன் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இத்தாலி போன்ற அணிகளிலும் பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள் பலர் இருப்பதால், அவர்களுக்கும் இதே சிக்கல் ஏற்படலாம் என்று தெரிகிறது.
2026 டி20 உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில்தான் நடைபெற உள்ளது. அமெரிக்க அணி தனது குரூப் சுற்றில் மூன்று போட்டிகளை இந்தியாவில் விளையாடுகிறது.
பிப்ரவரி 7ம் தேதி மும்பையில் இந்திய அணியையும் பிப்ரவரி 10ம் தேதி கொழும்புவில் பாகிஸ்தான் அணியையும் சென்னை சேப்பாக்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி நெதர்லாந்தையும் நமீபியாவை பிப்ரவரி 15ம் தேதியும் சந்திக்கிறது அமெரிக்க அணி.