

பாகிஸ்தானின் நட்சத்திர விக்கெட் கீப்பர்- பேட்டர் முகமது ரிஸ்வான்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு ஆடிவரும் பாகிஸ்தானின் நட்சத்திர விக்கெட் கீப்பர்- பேட்டர் முகமது ரிஸ்வான் பாதி இன்னிங்சில் திருப்பி அழைக்கப்பட்டது சர்ச்சிகளைக் கிளப்பியுள்ளது.
சிட்னி தண்டர் அணிக்கு எதிராக ரிஸ்வான் ஆடும்போது 23 பந்துகளில் 26 ரன்கள் என்று மந்தமாக ஆடி வந்தார். இதனையடுத்து ரெனெகேட்ஸ் கேப்டன் வில் சதர்லேண்ட் அவரை ‘ஆடியது போதும், திரும்பி வா’ என்று ரிட்டையர்ட் அவுட் செய்து விட்டார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அவமானமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் ஸ்டார் பிளேயருக்கே இந்த கதியா, உடனே அவர் பிக்பாஷ் லீகை விட்டு வெளியேற வேண்டும். இது நிச்சயம் அவரை இழிவுபடுத்தும் செயல் என்று பாகிஸ்தானில் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
ஜிடிவி ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் இது தொடர்பாக கருத்துக் கூறிய முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல், ரிஸ்வானுக்கு நடந்தது அவமானம் என்று ஒப்புக் கொண்டாலும் ரிஸ்வானும் தன் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
இது பாகிஸ்தான் வீரருக்கு நடப்பது முதல் முறையல்ல. ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டக் காலத்தில் யூனிஸ் கான் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, “நான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் நான் பெஞ்சில் அமர முடியாது. என்னை மரியாதையுடன் திருப்பி அனுப்பி வையுங்கள்” என்று கூறியது பிரபலம்.
கம்ரன் அக்மல் மேலும் இது தொடர்பாகக் கூறும்போது, இது அணிகளின் உத்தி ரீதியான முடிவாக சிலகாலமாக நடந்து வருகிறது என்றார். 2025 ஐபிஎல் சீசனில் மும்பை இண்டியன்ஸ் அணி ஸ்டார் இந்திய வீரராரன் திலக் வர்மாவை பாதியில் திரும்பி அழைக்கவில்லையா? ஆட்டச்சூழல் இதனைக் கோரினால் அதைச்செய்வதில் தவறில்லை, ஆகவே ரிஸ்வான் தன் எதிர்காலப்பாதையை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றார் அக்மல்.
பாகிஸ்தான் ரசிகர்களும் இது தொடர்பாக எதிர்ப்புகளுடன் கலவையாக வினையாற்றி வருகின்றனர்.