

கமல் அண்ணாவின் ‘உத்தமவில்லன்’ படத்தில் கே.பாலசந்தர் சாருடன் நடித்ததை முன்பு குறிப்பிட்டிருந்தேன். அப்போது, “ஐயா, உங்க சிஷ்யன் ஒழுங்கா நடிக்கிறேனா?
உங்க பேரை காப்பாத்துறேனா?” என்று கேட்டதையும் அதற்கு அவர் “போடா படவா...” என்று சிரித்துக் கொண்டே என் முதுகில் தட்டியதையும் கூறியிருந்தேன்.
அவருக்கும் எனக்குமான பந்தம் எங்கிருந்து தொடங்கியது என்று நினைவில்லை. அவர் இயக்கிய ‘நிழல் நிஜமாகிறது’, ‘அரங்கேற்றம்’ மாதிரியான திரைப்படங்கள் வெளியான காலங்களில் எனக்கு 15, 16 வயதிருக்கும். அந்தப் படங்களைப் பார்த்து மிரண்டு போய், எப்படியாவது கே.பாலசந்தர் சாரின் ஒரு படத்திலாவது நடித்துவிட்டால் போதும், பெரிய நடிகனாகி விடலாம் என்ற கனவுடன் அலைந்து கொண்டிருந்தேன்.
அப்போது நான் அதிகமான தலைமுடியுடன் இருப்பேன். என் ஏரியாவில் என்னை ‘பரட்டை’ என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். அப்போது ‘16 வயதினிலே’ படத்தில் ரஜினி அண்ணா பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் என்னையும் அவருடன் ஒப்பிட்டு அப்படி அழைப்பார்கள். நானும் அவர் போல ஸ்டைலாக தலைமுடியை கோதிவிட்டபடி நடப்பேன்.
அந்த காலகட்டத்தில் கே.பி.சாரிடம் எப்படியாவது நடிக்க வாய்ப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், யார் மூலமாக கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. பின்னர் நான்டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனதும், கணேஷ் குமார் என்ற படத்தொகுப்பாளர் எனக்கு பழக்கமானார். நானும் அவரும் ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள்.
அவர் கே.பி.சாரின் கலாகேந்திரா நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு எடிட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார். அவரிடம் நான், “கே.பாலசந்தர் சாரை பார்க்க வேண்டும்” என்று சொன் னேன். அவர், “ஆஃபீஸுக்கு வந்து பாரு” என்று சொல்லிவிட்டார். அப்போது என்னிடம் சைக்கிள் கூட கிடையாது.
இதனால் நேராக கலாகேந்திரா ஆபிஸுக்கு நடந்தே போய் வெளியே ஓரமாக, பவ்யமாக நின்றேன். பளிச்சென்று வெள்ளை சட்டை, வெள்ளை பேன்ட்டில் கே.பி சார் வருவார். அவரை பார்த்ததும் சான்ஸ் கேட்க போனவன், பயந்து போய் ஓடி வந்து விடுவேன். பல நாட்கள் இப்படியே நடந்திருக்கின்றன.
“வாய்ப்புக் கேட்கத்தானே வந்தே, கேட்காமலேயே ஓடினா எப்படி?” என்று படத்தொகுப்பாளர் கணேஷ் குமார் கேட்பார். “எங்கய்யா கேட்க முடியுது. அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு” என்பேன். பிறகு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆனதும் பல படங்களுக்குப் பேசிக்கொண்டிருந்தேன்.
சின்ன சின்ன வாய்ஸ் கொடுப்பேன். அப்போது கே.பி.சாரின் கவிதாலயா தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் சார் இயக்கி, ரஜினி அண்ணா நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் காலஞ்சென்ற கராத்தே ஹுசைனிக்கு டப்பிங் குரல் கொடுத்தேன். பிறகு கார்த்திக் நடித்த ‘வண்ணக்கனவுகள்’ படத்தில் ஆனந்துக்கு பேசினேன்.
அதைக் கேட்டுவிட்டு, “இது யார் பேசியது, அந்த வாய்ஸை நோட் பண்ணிக்கோ, பேசியது யார்னு தெரிஞ்சு வச்சுக்கோ?” என்று கே.பி.சார் சொல்லியிருக்கிறார். பின்னர் அவர்களின் ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘வானமே எல்லை’ என பல படங்களில் பேசியிருக்கிறேன். அப்போது வரை கே.பி.சாரை பார்த்தால் பயம்தான் வரும்.
ஒரு முறை, பெரியார் சாலையில் இருந்த விஜய் கிருஷ்ணா தியேட்டரில் குரூப் வாய்ஸுக்காக நின்று கொண்டிருந்தோம். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்த சேலம் கணேசன் என்ற நடிகர், டப்பிங்கிலும் வாய்ஸ் கொடுப்பார். அவருடைய கற்பனை, நம் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டது.
நாங்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென்று கே.பாலசந்தர் சார் உள்ளே வந்துவிட்டார். சேலம் கணேசண்ணன் மதுப்பழக்கம் கொண்டவர். குளிர்சாதன அறைக்குள் மதுநாற்றம் குமட்டிக்கொண்டு வந்தது. “யாருய்யா குடிச்சுட்டு வந்தது?” சத்தமாக, கோபமாக கேட்டார் கே.பி.சார். எங்களுக்கு பயம். சேலம் கணேசன் எங்களைத் தள்ளிவிட்டு அவர் முன்னால் வந்து, “நான்தான் குடிச்சுட்டு வந்தேன்” என்றார். எங்களுக்கு உதறல்.
“என்ன தைரியம் இருந்தா, என் முன்னாலயே வந்து நான்தான்னு சொல்லுவ?” என்று கோபமாகக் கேட்டார். “சார்... ப்ளீஸ். மீனும் நானும் ஒண்ணு.. தண்ணியில இருந்து எடுத்தா ரெண்டு பேரும் செத்துருவோம்” என்று சேலம் கணேசன் சொன்னதும், கோபத்தில் இருந்தவர் குபீரென சிரித்து விட்டார். நல்லா பேசறய்யா? என்று அவரை பாராட்டினார். அப்போது எனக்கு அவரிடம் வாய்ப்பு கேட்க ஆசை. ஆனால் பயம் காரணமாகக் கேட்கவில்லை.
‘வானமே எல்லை’ படத்தில் நடிகர் தும்பு கைலாஷுக்கு நான் குரல் கொடுத்தேன். அவருக்கு ஒரு டிராலி ஷாட்டில் நீண்ட வசனம் வரும். அதை நான் பேசியிருந்தேன். அப்போது என்ஜினீயர் அறைக்குள் வரச் சொன்னார் கே.பி.சார். “யாருய்யா நீ, உன் பேரென்ன?” என்று கேட்டார்.
“ஐயா, என் பேரு பாஸ்கர்’ என்றேன். “வண்ணக்கனவுகள்ல நீதானே பேசினே, நல்லா பேசுறய்யா. இந்தப் படத்துல, தும்புக்கு அருமையா பேசிருக்கே” என்று பாராட்டினார். அதிலிருந்து அவர்கள் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பேசினேன்.
பிறகு அவர்களின் மின்பிம்பங்கள் தயாரித்த டெலி பிலிம்ஸ், சின்னத்திரை தொடர்களிலும் நான் பேசினேன். ஒரு வீடு இரு வாசல்’ தொடரில் கணேஷ் என்பவருக்கு நான் பேசினேன். அப்போதும் என் பேச்சை பாராட்டினார். இருந்தாலும் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்க பயம்.
(திங்கள்தோறும் பேசுவோம்)