என்னை தவிக்க விட்​டுச்​ சென்ற நிழல்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 26

என்னை தவிக்க விட்​டுச்​ சென்ற நிழல்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 26
Updated on
3 min read

சென்னை நசரத்​பேட்​டை​யில் வீடு கட்​டும் போது அங்கு எனக்கு ஒரு சிறு பிரச்​சினை ஏற்​பட்​டது. அப்​போது எனக்கு அங்கு அறி​முக​மானவன் அந்​தப் பகுதி வார்டு மெம்​ப​ராக இருந்த திமுக-வைச் சேர்ந்த ஏழு​மலை. அன்​றி​லிருந்து என்னை அடிக்​கடி ‘நை​னா’என்று அழைக்க ஆரம்​பித்​தான்.

நான் எங்கு போனாலும் என்னை நிழலாகத் தொடர்ந்​தான். ராமானுஜரின் தீவிர பக்​தன். இரு​வரும் பல கோயில்​களுக்கு ஒன்​றாக சென்​றிருக்​கிறோம். எனக்​குத் தெரிந்த பெண் ஒரு​வருக்கு விழுப்​புரம் அருகே உள்ள கிராமம் ஒன்​றில் அதி​காலை​யில் திரு​மணம். அங்கு போக வேண்​டும்.

அதி​காலை 1 மணிக்கு கிளம்ப வேண்​டும் என்று சொன்​னேன். வந்​தான். இப்​படி எங்கு வேண்​டு​மா​னாலும் ஒன்​றாக செல்​வோம். “நான் இங்​கயே பிறந்து வளர்ந்​தவன், ஆனா மெட்​ராஸ் பாஷையை உன்னை போலப் பேச முடியல, நைனா” என்று சொல்​வான்.

என்​னரு​கில் யாராவது இருக்​கும்​போது, சினிமா நிறு​வனங்​களில் இருந்து போனில் நடிக்க அழைத்​தால், சம்​பளம் பேச மாட்​டேன். ஆனால், ஏழு​மலை என் அரு​கில் இருந்​தால் பேசுவேன். எதிர்​முனை​யில் பேசுகிறவர், “இவ்​வளவு ரூபா தர்​றேன்” என்று சொல்​லும்​போது, இவன் சரி என்று கையை காண்​பித்​தால், ஓகே என்று சொல்​லி​விடு​வேன்.

வேண்​டாம் என்று தலையை ஆட்​டி​னால், ‘அந்த சம்​பளத்​துக்கு பண்ண முடி​யாது” என்று மறுத்​து​விடு​வேன். அவனுக்கு என் மீது அவ்​வளவு உரிமை! அவனுக்கு நடிக்க வேண்​டும் என்று ஆசை இருந்​தது. இயக்​குநர் ஜனநாதனிடம் உதவி இயக்​குந​ராக பணி​யாற்​றிய முரளி வின்​சென்ட் அவர்​கள் இயக்​கிய படத்​தில் சின்ன கதா​பாத்​திரத்​தில் நடிக்க வைத்​தேன்.

என்​னுடன் வரு​வது போன்ற கதா​பாத்​திரம். என் நடிப்பை பார்த்​து​விட்​டு, “என்ன நைனா, இப்​படி நடிக்​கிறியே நைனா” என்று வியந்து பேசு​வான். நான் “எவரெஸ்ட் கலைஞர் ஏழு​மலை” என்று அவனைக் கிண்​டல் செய்​வேன். திமுக மீது பற்​றுக்​கொண்​ட​வன் என்​ப​தால் முதல்​வர் ஸ்டா​லின் அண்​ணனை பார்க்​கச்​செல்​லும் போது அவனை​யும் அழைத்​துச் செல்​வேன்.

அமைச்​சர் சேகர்​பாபு ஏதாவது விழாக்​கள் நடத்​தி​னாலும் செல்​லும்​போது அழைத்​துச்​செல்​வேன். விழாக்​களில் கொடுக்​கக்​கூடிய சால்​வை, பூச்​செண்டு போன்​றவற்றை வாங்கி வைத்​துக் கொள்​வான். நான் எங்கு போனாலும் மேடை​யில் அவனுக்​கும் ஒரு சேர் போட்டு உட்​காரச்​சொல்​வேன்.

கோயிலுக்கு போகும்​போது மரி​யாதை நிமித்​த​மாக எனக்கு மாலை போட்​டால் அவனுக்​கும் போடச் சொல்​வேன். வேறு ஒரு குடும்​பத்​தில் பிறந்​திருந்​தா​லும் எனக்​காக கடவுளால் அனுப்​பப்​பட்ட மகன் அவன். என்னை யாரும் தொடர்பு கொள்ள முடிய​வில்லை என்​றால் அவனிடம் பேசி, “பாஸ்​கர் சாரை பார்க்​கணும், டைம் வாங்கி கொடுங்​களேன்” என்​பார்​கள்.

அந்​தளவுக்கு என்​னிடம் நெருக்​க​மாக இருந்​தான். எந்த கெட்​டப்​பழக்​க​மும் இல்​லாதவன் ஏழு​மலை. நான் தேசிய விருது வாங்​கியதும் ஊர் முழு​வதும் போஸ்​டர் அடித்து ஒட்​டி​விட்​டான். “எதுக்​குப்பா இதெல்​லாம் என்று கேட்​டேன். “சும்​மாரு நைனா” என்று சொல்​லி​விட்​டான்.

அந்​தளவுக்கு என் மீது அதிக அன்​பும், அக்​கறை​யும் கொண்​ட​வ​னாக இருந்​தான். நானும் அவன் மீது பாசம் கொண்​ட​வ​னாக இருந்​தேன். அவன் எனக்கு ஒரு தோழன், இதைச்​செய்​யாதே என்று சொல்​கிற மந்​திரி, இதை இப்​படிப் பண்ணு என்று சொல்​லிக்​கொடுப்​ப​தில் ஓர் ஆசிரியர், எல்​லோருக்​கும் அன்​ன​தானம் வழங்​கு​வ​தில் ஆண்​ட​வன்; நான் சொல்​கிற வேலைகளைச் செய்​வ​தில் அவன் சேவகன் என இருந்​தான்.

<div class="paragraphs"><p>ஏழுமலை</p></div>

ஏழுமலை

நல்​ல​கண்ணு ஐயா பற்​றிய ஆவணப்​படம் ஒன்​றில் நான் நடித்​தேன். “என்னை கைத்​தாங்​கலாக பிடித்து அழைத்​துக் கொண்டு வரு​வது போல் ஒரு கதா​பாத்​திரம் வைங்க. ஏழு​மலை அதில் நடிக்​கட்​டும்” என்று சிபாரிசு செய்​தேன். இயக்​குநர் சரி என்று சொல்​லி​விட்​டார்.

2026 மார்ச் 7-ம் தேதி படப்​பிடிப்​பு. இரவில் என் காரில் ஏறிய ஏழு​மலை​யின் முகம் சோர்​வாக இருந்​தது. என்​னாச்​சுப்பா என்று கேட்​டேன். “காலைலேர்ந்து என்ன சாப்​பிட்​டாலும் வாந்தி எடுக்​குது” என்​றான். அவன் மனை​வி​யும் “உடம்பு சரி​யில்​லைன்னா ஏன் வெளிய போறீங்​க?” என்று கேட்​டிருக்​கிறார்.

“பாஸ்​கர் நைனா கூட நடிக்​கப்​போறேன்” என்று சொல்லி விட்டு வந்​தான்! பிறகு மெடிக்​கல் ஷாப்​பில் ஒரு மாத்​திரை வாங்கி போட்​டுக்​கொண்​டான். பெசன்ட் நகர் சென்​றோம். வழக்​க​மான சுறுசுறுப்பு அவனிடம் இல்லை என்​ப​தைக் கவனித்​தேன். வாந்தி காரண​மாக அப்​படி இருக்​கிறது என நினைத்​தேன்.

பீச்​சில் படப்​பிடிப்​பு. ஏழு​மலையை அழைத்​தேன். “எனக்​குத் தூக்​கம் வருது, நீ போயிட்டு வா நைனா” என்று சொல்​லி​விட்​டான். பிறகு அவனுக்கு வாமிட் வந்​தது. மூக்​கிலும் வந்​தது. தண்​ணீர் கொடுத்து முகத்​தைக் கழு​வச்​சொல்லி விட்டு ஷாட்​டுக்கு சென்​றேன்.

இரவு 1 மணிக்​குத்​தான் படப்​பிடிப்பு தொடங்​கியது. விடியற்​காலை 3.30க்கு ஷூட்​டிங்கை முடித்​து​விட்டு ஏழு​மலையை தேடி​னால் காண​வில்​லை. பிறகு அப்​பகு​தி​யைச் சேர்ந்த எனக்​குப்​பழக்​க​மான ஜெகன் என்ற தம்​பி​யிடம் சொல்லி தேடச்​சொன்​னேன். சிறிது தூரத்​தில் போய் படுத்​திருந்​தான் ஏழு​மலை.

பிறகு அவனை உசுப்பி காரில் ஏற்​றிக்​கொண்டு வீட்​டுக்கு திரும்​பினேன். “நாளைக்கு ஆஸ்​பத்​திரி​யில அட்​மிட் ஆயிடட்​டா?” என்று கேட்​டான். “முடியலைன்னா அட்​மிட் ஆயிடு என்​றேன்! பிறகு முகலி​வாக்​கம் அருகே வரும் போது அங்கு ஒரு மருத்​து​வ​மனை பெயரை சொல்​லி” இங்க எனக்கு ஒரு அட்​மிஷன் போட்​டுடுறியா நைனா” என்று கேட்​டான்.

“நம்ம ஏரி​யாலேர்ந்து இது ரொம்ப தூரம். வீட்​டுக்கு போயிடலாம். காலைல பக்​கத்​துல ஏதாவது ஆஸ்​பத்​திரி​யில அட்​மிட் ஆயிரு” என்று சொல்​லி​விட்டு அவன் மனை​விக்கு போன் செய்​து, “இவன் தலை சுத்​துதுங்​கறான். கீழ விழுந்​திட போறான். கூட்​டிட்​டுப் போறதுக்கு வீட்​டுக்கு வெளி​யில வந்து நில்லு ” என்று சொன்​னேன்.

அதே போல அவரும் வந்​தார். “சரி, நைனா பார்ப்​போம்” என்று சொல்​லி​விட்டு வீட்​டுக்​குள் போனான். நான் விடியற்​காலை 4.45-மணிக்கு அவன் வீட்டு வாசலில் இறக்கி விட்டு என் வீட்​டுக்கு வந்து 5.30 மணிக்கு படுத்​தேன்! காலை​யில் 7 மணிக்கு போன் அடித்​தது. எனக்கு கனவில் அடிப்​பது போல் இருந்​தது.

தூக்​கக்​கலக்​கத்​தில் இருந்​தேன். போனில் ஏழு​மலை மனைவி அழைத்​தார். “அங்​கிள், அவரை ஆஸ்​பத்​திரி​யில சேர்த்​திருக்​கோம். பிட்ஸ் வந்​துருச்​சு” என்​றார். “வாமிட், நெஞ்​செரிச்​சல்​னு​தானே சொன்​னான்” என்று கேட்​டேன். “ஐசி​யூ-​வில் சேர்க்​கச் சொல்​கிறார்​கள்” என்​றார்.

“சரி, உடனே வரு​கிறேன்” என்று சொல்லி கிளம்​பிக் கொண்​டிருந்​தேன். அடுத்த 10 நிமிடத்​தில் மீண்​டும் போன். “அங்​கிள் அவர் இறந்​துட்​டார்” என்று அழுகுரலோடு அவன் மனைவி சொன்ன போது என் தலை​யில் இடி விழுந்​தது போல் நிலை குலைந்​தேன்.

இப்​போதும் என் நெஞ்சை அறுக்​கிற விஷ​யம், அவன் முகலி​வாக்​கம் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கச் சொன்​னதும் சேர்த்​திருந்​தால் பிழைத்​திருப்​பானோ?என்​பது​தான். இவ்​வளவு சீரிய​சான விஷய​மாக அதை நான் நினைக்​காதது என் தவறு​தானோ? என்று என்னை நானே நொந்து கொண்​டிருக்​கிறேன்.

அவனும், “என்​னால முடியலை நைனா, இங்​கயே சேர்த்​திரு” என்று சொல்​லி​யிருக்​கலாமே என்​றெல்​லாம் மன வேதனை​யில் துடிக்​கிறேன். சுடு​காட்​டில் என் மன வேதனையை சொல்லி நான் கதறிய போது அங்கு ஏழு​மலைக்கு என்​னைப்​போல் மிக நெருக்​க​மானவர்​கள் ‘நீங்​கள் அங்கு சேர்த்து அவன் இறந்​திருந்​தால் இங்கு சேர்த்​திருக்​கலாம், அங்கு சேர்த்​திருக்​கலாம்” என்று உங்​கள் மீது பழி சொல்​லி​யிருப்​பார்​கள்.

அவன் நம்மை விட்டு செல்ல வேண்​டும் என்​பது இறைவன் சித்​தம். அழாதீங்​கண்​ணா” என்று என்னை தேற்​றி​னார்​கள். படிக்​காத மேதை பாடல்​தான் என் நினை​வுக்கு வந்​தது. ஏழு​மலை எனக்கு நண்​ப​னாய், மந்​திரி​யாய், ஆசிரிய​னாய், பண்​பிலே தெய்​வ​மாய், பார்​வை​யிலே சேவக​னாய் என்​னோடு இருந்த என் நிழல்.

என் நிழல் என்னை தவிக்க விட்டு பிரிந்​து​விட்​டது. இப்​போதும் இரவெல்​லாம் என் வீட்டு வாசலில் உட்​கார்ந்​திருக்​கிறேன். புல்​லட்​டில் வந்து ‘நை​னா...’ என்று அவன் அழைப்​பது போலவே தோன்​றுகிறது.

இனி எப்​போது, எந்த ஜென்​மத்​தில் பார்ப்​பேன் நான் பெறாத மகன் ஏழு​மலை​யை? அடுத்த பிறப்​பில் அவன் எனக்கு மகனாக பிறக்க வேண்​டும். ‘நை​னா’ என்று அழைக்க வேண்​டும் என்று ஆண்​ட​வனை கண்​ணீரோடு வேண்​டுகிறேன். வேண்​டிக்​கொண்டே இருப்​பேன். போய் வா மகனே!

(திங்கள்தோறும் பேசுவோம்)

என்னை தவிக்க விட்​டுச்​ சென்ற நிழல்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 26
‘என்னில் பாதி இந்த தம்பி..!’ - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 25

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in