திரைப்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் தலைக்காட்டி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகிபாபுவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 22). காமெடி தாண்டி ஆழமான கதாபாத்திரங்கள் குறித்த ஒரு தொகுப்பு.
காக்கா முட்டை: யோகிபாபு என்ற ஒரு நகைச்சுவை நடிகரை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய படம் இது. சில காட்சிகளே வந்தாலும் யோகிபாபு பேசும் ‘எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல’ என்ற வசனம் வரவேற்பை பெற்றது.
ஆண்டவன் கட்டளை: ’காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இப்படம் ஒரு சிறந்த நடிகராக யோகிபாபுவின் மற்றொரு பக்கத்தை காட்டியது.
பரியேறும் பெருமாள்: மாரி செல்வராஜின் முதல் படமான இதில் கல்லூரி மாணவனாக அவ்வப்போது ஹீரோவுக்கு அறிவுரை சொல்லும் பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மண்டேலா: இப்படத்துக்கு முன்பே சில படங்களில் ஹீரோவாக யோகிபாபு நடித்திருந்தாலும், இந்த படம் யோகிபாபுவின் நடிப்பைப் பற்றி பரவலாக பேசவைத்தது.
கோமாளி: படம் முழுக்க ஹீரோ ஜெயம் ரவி உடன் பயணிக்கும் கதாபாத்திரம். இதில் நகைச்சுவையை தாண்டி குணச்சித்தரத்திலும் அசத்தியிருப்பார் யோகிபாபு.
கர்ணன்: தனுஷ் நாயகனாக நடித்த இப்படத்தில் வடமலையான் என்ற கதாபாத்திரம் யோகிபாபுவுக்கு. ஆரம்பத்தில் தனுஷுடன் முட்டிக் கொள்ளும்போதும், பின்பு தவறை உணர்ந்து மனம் வருந்தும்போதும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
கோலமாவு கோகிலா: நெல்சனின் முதல் படமான இதில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் பெட்டிக் கடை இளைஞர் கதாபாத்திரம். படம் முழுக்க யோகிபாபு அடிக்கும் ஒன்லைனர்களும், கவுன்ட்டர்களும் ரசிக்க வைக்கும்.
பொம்மை நாயகி: முதல்முறையாக முழு சீரியஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் யோகி பாபு. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தையை தேடி அலையும் தந்தையின் தவிப்பை கண்முன் நிறுத்தியிருப்பார்.
டாக்டர்: சிவகார்த்திகேயன் - யோகிபாபு காம்போவில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தில் ஆர்ப்பாட்டமில்லாமல் யோகிபாபு அடித்த கவுன்ட்டர்கள் வரவேற்பை பெற்றது.
லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த இந்த படத்தில் ஹீரோவின் அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கதாபாத்திரம். படம் முழுக்க தனது செல்போனை தன் வருங்கால மனைவியிடம் மறைத்து க்ளைமாக்ஸில் அதற்கான காரணத்தை சொல்லும் இடத்தில் கலங்க வைப்பார்.