

தெஹ்ரான்: சீனாவின் டேங்க் மேன் போன்று ஈரான் ராணுவத்தை தனி ஒருவனாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கடந்த 1989-ம் ஆண்டில் மாணவர்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். கடந்த 1989 ஜூனில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் குவிந்த மாணவர்களை சீன ராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. இதில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த 1989 ஜூன் 5-ம் தேதி தியானன்மென் சதுக்கத்தில் பீரங்கிகள் அணிவகுத்து சென்றன. அப்போது ஒரு நபர் பீரங்கிகளுக்கு முன்பாக துணிச்சலாக முன்னேறினார். அந்த நபரை ராணுவ வீரர்கள் அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர்.
உயிரை விழுங்கும் ராணுவ பீரங்கிகளுக்கு எதிரில் நெஞ்சில் உரத்தோடு எதிர்ப்பினை பதிவு செய்த முகமற்ற அந்த நபரின் புகைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அவர் டேங்க் மேன் என்று அழைக்கப்படுகிறார்.
ஈரானில் ஜென் இசட் போராட்டம்: இதேபோன்று ஈரான் ராணுவத்தை தனி ஒருவனாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. ஈரானில் அயத்துல்லா ரூஹோல்லா கொமேனிக்கு பிறகு பிறகு 1989-ல் அயத்துல்லா அலி காமேனி அந்நாட்டின் மதத் தலைவராக பதவியேற்றார். தற்போது அவரே ஈரானின் உச்ச தலைவராக நீடிக்கிறார்.
அமெரிக்கா உடனான மோதல் காரணமாக ஈரான் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ஈரானில் அத்தியாவசிய பொருட்களின் விலை 72 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. மருந்துகளின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. சுமார் 24 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவித்து வருகின்றனர். மக்கள் மீதான வரிச்சுமை 62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஈரான் சிக்கித் தவித்து வருகிறது.
இந்த சூழலில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. ஜென் இசட் இளைஞர்கள் (1997 முதல் 2012-க்குள் பிறந்தவர்கள்) தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக கோஷமிட்டனர்.
கடந்த 29-ம் தேதி தெஹ்ரானில் நடைபெற்ற போராட்டத்தில் ஜென் இசட் இளைஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. கடந்த 30-ம் தேதி ஈரானின் 10 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். கடந்த 31-ம் தேதி ஈரானின் 21 மாகாணங்களுக்கு போராட்டம் பரவியது. அப்போது போலீஸார் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த 1-ம் தேதி புத்தாண்டின்போது தெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஏழாவது நாளாக நேற்று தெஹ்ரான் உட்பட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானில் அமைதி வழியில் போராடும் மக்களை அந்த நாட்டு அரசே கொலை செய்கிறது. ஈரான் மக்களை மீட்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. நாங்கள் ராணுவ ரீதியாக களத்தில் இறங்குவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஈரான் ராணுவம் நேரடியாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தலைநகர் தெஹ்ரானில் ராணுவம், போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜென் இசட் இளைஞர் ஒருவர் சாலையின் நடுவே தனி ஒருவனாக அமர்ந்திருந்தார். ராணுவ வீரர்கள் எச்சரிக்கை விடுத்தும் அவர் விலகிச் செல்லவில்லை. இந்த வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவர் ஈரானின் டேங்க் மேன் என்று சமூகவலைவாசிகள் வர்ணித்து வருகின்றனர்.