

அமெரிக்க தேர்தல் வாக்குப் பதிவு | கோப்புப்படம்
“‘முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது?!’ என்று என்னிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் கடைசியாக நடந்த பொதுத் தேர்தலில் 6.46 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். அதில் 1%-க்கும் குறைவானவர்கள் மட்டும்தான் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது அங்கு தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் இருந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்கு கட்டாய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
அதற்கு நாம் உடனடியாக ‘சேவ் அமெரிக்கா’ சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப் விரும்பும் மாற்றம் என்ன?
‘அமெரிக்க வாக்காளர் தகுதி பாதுகாப்பு’ (SAVE) சட்டத்தை காங்கிரஸில் நிறைவேற்ற ட்ரம்ப் முயற்சி செய்துவரும் வேளையில், அவருடைய இந்திய ஒப்பீட்டுக் கருத்துகள் வந்து கவனம் பெற்றுள்ளன. இந்தச் சட்டத்தின் மூலம் மாகாண தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு மற்றும் அடையாள விதிமுறைகளை மாற்றுவதை ட்ரம்ப் விரும்புகிறார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் இனி மாகாண தேர்தல்களில் வாக்களிக்கும்போது மக்கள் தங்களின் அமெரிக்க குடியுரிமையை உறுதி செய்யும் ஆவணத்தைக் காட்ட வேண்டியிருக்கும். மேலும், புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தையும் காட்ட வேண்டியிருக்கும்.
நேரடியாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி வாக்களிக்காமல் தபால் ஓட்டு மூலம் வாக்களிப்போரும், அதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதும், வாக்களிக்கும்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
தபால் வாக்குகளை அனுமதிப்பதிலும் கடுமையான கெடுபிடிகளை விதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மாடல் ஏன்?
இந்தியாவின் தேர்தல் முறையில் வாக்குச்சாவடிகளில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வாக்காளர்களுக்கு பல அங்கீகரிக்கப்பட்ட வழிகள் உள்ளன. இந்தியாவின் பெரிய வாக்காளர் எண்ணிக்கையையும், தபால் வாக்கு பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, அமெரிக்கா கடுமையான அடையாள அட்டை விதிமுறைகளை கொண்டு வந்தாலும், பெரிய அளவில் தேர்தலை நடத்த முடியும் என்று ட்ரம்ப் நம்புகிறார். அதனால்தான் ட்ரூத் சோஷியலில் இந்திய மாடலை விதந்தோதி அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இருந்தாலும், இந்தியாவின் தேர்தல் சட்டத் திட்டங்கள் வேறு, அமெரிக்காவில் சட்டத் திட்டங்கள் வேறு. வாக்காளர் பதிவு முறை, தபால் வாக்குச் சட்டங்கள் எல்லாமே முற்றிலும் மாறுப்பட்டவையாக உள்ளன. இங்குதான் சேவ் அமெரிக்கா சட்டத்தைச் சுற்றி சில முரண்கள் முன்வைக்கப்படுகின்றன.
சேவ் அமெரிக்கா சட்டமும், சர்ச்சைகளும்!
ட்ரம்ப் விரும்பும் இந்த சட்ட மசோதா மீது ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுடன் வாக்காளர்கள் உரிமைகளை நிலைநாட்டும் குழுக்களும் எதிர்ப்பை பதிவு செய்கின்றன. வாக்களிக்க அடையாள ஆவணத்தின் தேவையை கடுமையாக்கினால், சிலருக்கு வாக்களிக்க தகுதியிருந்தும் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்கின்றனர் அவர்கள்.
ஆனால், ட்ரம்ப்பையும் அவரது நிர்வாகத்தையும் ஆதரிப்போரோ, “குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமும், புகைப்பட அடையாள ஆவணமும் தேர்தல்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும். வாக்களிக்க தகுதியில்லாதவர்கள் வாக்களிப்பதையும் வெகுவாகத் தடுக்கும்” என்று வரவேற்கின்றனர்.
இப்போதைய நிலவரப்படி ட்ரம்ப் கொண்டுவர விரும்பும் இந்தச் சட்டத்தின் மீது ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் கொள்கை அளவில் பிரிந்து கிடக்கின்றனர். செனட் சபையும் இதன்மீது எந்தவொரு முடிவும் எடுக்காமல் 5 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் தீவிரம்
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு விதிமுறைகளை ட்ரம்ப் தனது அரசியல் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாகப் பார்க்கிறார். அமெரிக்க ஃபெடரல் தேர்தல்களில் அந்நாட்டுக் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிப்பதை தடுக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்று அவர் திரும்பத் திரும்ப வாதிட்டு வருகிறார். மேலும், நாடு முழுவதற்குமான பொதுவான தேவைகளை காங்கிரஸ் நிறுவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் குடியரசுக் கட்சியினர், குடிமகன் என்பதற்கான ஆதாரத்தையும் புகைப்பட அடையாள அட்டையையும் கேட்பது ஓர் எளிமையான பாதுகாப்பு நடவடிக்கை என்று வாதிடுகின்றனர். வாக்காளர் பதிவு பட்டியல்களைச் சரிபார்கவும், தகுதியற்றவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யவும் மாகாணங்கள் வலுவான வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியினரும் வாக்குரிமை குழுக்களும், இந்தத் தேவைகள் தகுதியுள்ள வாக்காளர்களை விகிதாசாரமற்ற அளவில் பாதிக்கும் என்று வாதிடுகின்றனர்.
ஏனென்றால், பலரிடம் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்ற ஆவணங்கள் உடனடியாக இருக்காது. மேலும், வாக்காளர் தரவுத் தளங்களில் ஏற்படும் பிழைகளால், தகுதியுள்ள குடிமக்கள் தவறாகக் குறிக்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவோ வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க மாகாணங்களில் தற்போது வாக்காளர் அடையாளம் குறித்து வெவ்வேறு விதிமுறைகள் உள்ளதால் இந்தப் பிரச்சினை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சில மாகாணங்கள் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும் என்று கோருகின்றன. சில மாகாணங்கள் வெவ்வேறு வகையான அடையாள ஆவணங்களை அனுமதிக்கின்றன அல்லது குறைவான தேவைகளைக் கொண்டுள்ளன. கூட்டாட்சி பதவிகளுக்கான தேர்தல்களுக்கு கூட்டாட்சி அளவிலான தேவைகளை ‘SAVE America Act’ நிறுவும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
பிப்ரவரி மாதம் சபையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றது. ஆனால் அதன் பிறகு, 2027 நிதியாண்டுக்கான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்துடன் இந்த சட்டம் இணைக்கப்பட்டுள்ளது. சபையில் உள்ள குடியரசுக் கட்சியினர் ட்ரம்பின் தேர்தல் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக வாக்களிப்பு விதிகளை பாதுகாப்பு மசோதாவுடன் சேர்த்தனர்.
ஆனால், செனட்டில் இது மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. ஏனென்றால், இது அமலுக்கு வர செனட்டில் ஏற்படக் கூடிய ‘விவாதம் மூலம் சட்டத்தை தாமதப்படுத்தும் முயற்சியை’ தடுக்க 60 வாக்குகள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த 60 வாக்குகள் குடியரசுக் கட்சியினரிடம் இல்லை.
இந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்ல ஜனநாயக கட்சியினரின் ஆதரவு தேவை. ஜனநாயக் கட்சியினர் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர். அதே நேரத்தில், குடியரசுக் கட்சி செனட்டர்களை இதை முன்னெடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ட்ரம்ப்.
இப்படியான இக்கட்டான சூழலில் தான் ‘சேவ் ஆக்ட்’ மாட்டிக் கொண்டுள்ளது. இதுபோன்ற பல சட்ட மசோதாக்கள் அமெரிக்காவில் கிடப்பில் இருந்தாலும், சேவ் ஆக்ட் கவனம் பெற முழுக்க முழுக்க இந்திய ரெஃபரன்ஸ் மட்டுமே காரணம்.
இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீப் ஜெஸ்ய்வால் ட்ரம்ப் கருத்து பற்றி, "இந்தக் கருத்துகள் குறித்து எனக்கு குறிப்பிட்ட கருத்துகள் எதுவும் இல்லை. எனினும், இந்தியாவின் தேர்தல் அமைப்பின் நம்பகத்தன்மையும், வலிமையும் உலகளவில் நன்கு நிலைநிறுத்தப்பட்ட உண்மை என்பதை நான் கூற முடியும்" என்று கூறியுள்ளார்.