

ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள சியூட்டாதான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியாகும்.
முஸ்லிம் நாடான மொராக்கோவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணமாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக மொராக்கோ நாட்டு மக்கள் அத்துமீறி ஸ்பெயினுக்குள் நுழைந்து வருகின்றனர். ஆனால், மொராக்கோ மக்களை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்பெயின் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று முன்தினம் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர்.
போலீஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் கடல்வழியாக நுழைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், போலீஸாரையும் அதிக அளவில் குவித்திருந்தது. ஸ்பெயின் எல்லைக்குள் வரும் மொராக்கோ மக்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து போலீஸார் விரட்ட முயன்றனர்.
இருந்தபோதும் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சியூட்டா எல்லையைக் கடந்து ஸ்பெயினுக்குள் சென்றுவிட்டதாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசல், கடல் நீரில் மூழ்கியது போன்ற காரணங்களால் மொராக்கோவைச் சேர்ந்த 41 பேர் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை போலீஸார் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிரகண்காணிப்பை ஏற்படுத்திஉள்ளது. எல்லைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சியூட்டா பகுதியை நோக்கி வரும் மக்களைத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொராக்கோவில் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை ஆகியவையே இதற்கான முதன்மை காரணங்களாக கருதப்படுகின்றன. அந்நாட்டில் இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழலிலும், நாட்டின் பொருளாதாரத் தேக்கநிலையிலும் விரக்தியடையும் இளைஞர்கள், சிறந்த வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைத் தேடி ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கத் துணிகின்றனர்.
அது மட்டுமல்லாது, இதன் பின்னணியில் ஒருங்கிணைந்த மனித கடத்தல் வலைப்பின்னல்களின் செயல்பாடுகளும் இருப்பதாகத் தெரிகிறது. கடத்தல் கும்பல்கள். இந்த காலகட்டத்தில் ஸ்பெயினுக்குள் எளிதாக நுழைய முடியும் என்ற வதந்தியைப் ஸ்பானிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எல்லை கட்டுப்பாடுகள் பலவீனமடைந்துவிட்டதாகவும், புலம்பெயர்வோர் உடனடியாக திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் வதந்திகளை பரப்புவதற்கு இந்த குற்ற வலைப்பின்னல்கள் சமூக ஊடகங்களையும், மெசெஞ்ஜர் தளங்களையும் பயன்படுத்தியதாக ஸ்பெயின் காவல் துறை குற்றஞ்சாட்டுகிறது.
கடத்தல் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பும் போலி வதந்திகளும், ஸ்பெயினின் அகதிகள் கொள்கை குறித்த தவறான புரிதல்களும் இத்தகைய ஆபத்தான பயணங்களுக்கு மக்களைத் தூண்டுகின்றன. ஸ்பெயினுக்குள் ஏதேனும் ஒரு வழியில் நுழைந்துவிட்டால் சட்டப்பூர்வ குடியுரிமை அல்லது வேலை வாய்ப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கையே, கடல் அலைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளின் கெடுபிடிகளையும் மீறி மக்களை உயிரைப் பணயம் வைக்கச் செய்கிறது என்று போலீஸார் கூறுகின்றனர்.
வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள சியூட்டா மற்றும் மெலிலா ஆகிய ஸ்பெயின் நகரங்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆப்பிரிக்கக் கண்டம் பகிர்ந்து கொள்ளும் நில எல்லைகளாகும். இதனால், கடலில் நீண்ட தூரம் பயணிப்பதைத் தவிர்த்து, நீந்தியோ அல்லது எல்லைச் சுவர்களைக் கடந்தோ எளிதில் ஐரோப்பிய மண்ணை அடைந்து விடலாம் என்பதால் இப்பகுதியை முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதற்கிடையில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், வெள்ளிக்கிழமை சியூட்டா பகுதிக்குச் சென்றார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இந்த அத்துமீறல் ஸ்பெயின் இறையாண்மைக்கு எதிரானது. சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்களில் இதுவரை 25 ஆயிரம் பேர் மீண்டும் மொராக்கோ அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒருபுறம் சட்டவிரோத ஊடுருவல்கள் தொடர மறுபுறம் ஐரோப்பிய நாடுகள் பலவும் ஸ்பெயினுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டென் லெயன், “இது துளியும் ஏற்புடையதல்ல. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இப்படியான ஊடுருவல்களை அனுமதிக்க முடியாது. அபாயகரமான இந்த ஊடுருவல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடத்தல் கும்பல்களின் சதிவலையும் முறியடிக்கப்பட வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் விரைவில் நாடு கடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.