

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடுத்து அரை மாத காலம் கடந்துவிட்டது. ஈரானுக்கு ஆதரவு என்ற பெயரில் லெபனானும், அமெரிக்காவுக்கு ஆதரவு என்ற பெயரில் வளைகுடா நாடுகளும் அன்றாடம் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் (GCC) கூட்டமைப்பின் அமைதியானது வியக்கவைக்கிறது.
இந்தப் புவி அரசியல் ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் உலகளவில் எரிவாயு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்க, ஈரான் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை அதற்குத் திரும்பத் தரும் வகையில் அமெரிக்கா ஈரானின் ‘கார்க் தீவு’ ( Kharg Island) மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் ஈரானுக்கு நிச்சயமாக நெருக்கடிதான் என்கின்றனர் போர்ச்சூழல் பற்றி கணித்து எழுதும் சர்வதேச அளவிலான நிபுணர்கள். ஈரானின் ‘மணி மகுடம்’ (Crown Jewel) என்று தான் இந்த கார்க் தீவு அழைக்கப்படுகின்றன. பாரசீக வளைகுடாவின் முத்து (Pearl of Persian Gulf) என்றும் அறியப்படும் கார்க் தீவு ஏன் ஈரானுக்கு முக்கியம், அப்படி அங்கு என்னதான் இருக்கிறது என்று ஒரு விரைவுப் பார்வையை செலுத்துவோம்.
கார்க் தீவு அமைவிடம் எங்கே?
ஹார்முஸ் ஜலசந்தியின் வடமேற்கே 483 கி.மீ தொலைவில், ஈரான் கடற்கரையிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கார்க் தீவு. இங்கிருந்துதான் ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது.
போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகள் எல்லாம் எண்ணெய் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்ட நிலையில், ஈரான் மட்டும் தடையின்றி கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து புதன்கிழமைவரை நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை ஈரான் ஏற்றுமதி செய்துள்ளது.
ஈரானுக்கு பொருளாதார ரீதியாக கார்க் தீவு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
எப்படி செயல்படுகிறது கார்க் தீவு எண்ணெய் வணிகம்?
கார்க் தீவின் எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியத்துவம் என்பது இன்றைக்கு உதித்த புதிய பேசுபொருள் அல்ல. 1984-ம் ஆண்டே அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ-வின் (CIA) ஆவணங்களிலேயே கார்க் தீவுகளைப் பற்றி, ஈரானின் பொருளாதாரத்துக்கும், அதன் போர் முன்னெடுப்புகளுக்கும் மிக முக்கியமான புள்ளி என்று குறிப்பிடப்பட்டிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.
ஈரான் எண்ணெய் வளம் மிக்க நாடு என்பது உலகமறிந்தது. அதன் எண்ணெய், எரிவாயு வயல்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடக்க, கார்க் தீவில்தான் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வசதி உள்ளது. இந்தத் தீவில் உள்ளது பைப்லைன்கள் ஈரானின் மிகப் பிரம்மாண்டமான எண்ணெய், எரிவாயு வயல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கார்க் தீவில் உள்ள எண்ணெய் கிடங்கு முனையத்துக்கு அபூசர், ஃபரோஸான் மறு டூரூட் கடற்கரை மையங்களில் இருந்து எண்ணெய், எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள பைப்லைன்கள் மூலமாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெய், எரிவாயு கொண்டு செல்லப்படும். அங்கேயே சுத்திகரிப்பும் நடக்கும். இல்லை அங்கிருந்து கச்சா எண்ணெய், வாயுவாக சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இந்தக் கட்டமைப்புகளைத் தாண்டி, கார்க் தீவில் மூன்று முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை மூன்றும் ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இதில் ஒன்று ஃபலாட் ஈரான் எண்ணெய் நிறுவனம். இது மட்டும் அன்றாடம் 50 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய்யை அன்றாடம் உற்பத்தி செய்கிறது.
இதுமட்டுமல்லாது கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தலைமையகமும் இந்தத் தீவுதான். இங்கே எண்ணெய்யை பெருமளவில் தேக்கி வைக்கவும், எல்என்ஜி உற்பத்தி, ஏற்றுமதி செய்வதற்குமான கிடங்கும் இருக்கிறது.
கார்க் தீவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கின் கொள்திறனை ஈரான் 2 மில்லியன் பேரல்கள் என்றளவுக்கு உயர்த்தியுள்ளது என்கிறது அண்மைய புள்ளிவிவரங்கள்.
ஈரான் மீதான தாக்கம் என்ன?
உத்தி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஈரானின் மணி மகுடமாக திகழும் கார்க் தீவுகளில் உள்ள ஆள் அரமற்ற இடங்களை மட்டும்தான் இப்போதைக்கு அமெரிக்கா குறிவைத்துத் தாக்கியுள்ளது.
ஒருவேளை அங்குள்ள வசிப்பிடங்களை, எண்ணெய் கிடங்குகளை அமெரிக்கா குறிவைத்து தாக்கினாலோ, கைப்பற்றினாலோ எண்ணெய் விலை உலகளவில் தலை கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு எகிறும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், கார்க் தீவில் ஈரானின் 90% எண்ணெய் வர்த்தகத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீவு கைப்பற்றப்பட்டாலோ, அழிக்கப்பட்டாலோ, அது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குறிப்பிடத்தக்க திறனைக் குறைக்கக்கூடும். ஈரான் அதை நம்பியே இருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.
என்ன சொல்கிறது அமெரிக்காவும், ஈரானும்!
கார்க் தீவில் தாக்குதல் குறித்து ட்ரம்ப், “அமெரிக்க மத்திய கமாண்ட் (Centcom) மத்திய கிழக்கு வரலாற்றில் இல்லாதபடியாக மிகவும் சக்திவாய்ந்த குண்டு மழையை ஈரானின் மணி மகுடமான கார்க் தீவில் பொழிந்துள்ளது. நாகரிகம் கருதி ஈரானின் எண்ணெய் உற்பத்தி கட்டமைப்புகளை அமெரிக்கா விட்டுவைத்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்ல மீண்டும் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து ஈரான், “கார்க் தீவின் எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, சேமிப்பு மையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலில் பொதுமக்களோ, எண்ணெய் நிறுவன ஊழியர்களோ, ராணுவ வீரர்களோ கொல்லப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் எண்ணெய் வளங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டால் அங்கு அமெரிக்காவுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்களின் எண்ணெய் வயல்கள், கிடங்குகள் அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தப் போரில் யாருக்கு வெற்றி என்பதைவிட உலகத்துக்கு எப்போது நிம்மதி கிட்டும் என்பதை எண்ணெய் பொருளாதாரம் நிர்ணயிக்கும் என்பதால் கார்க் தீவு மீது மேலும் குறிவைப்பதன் மூலம் ஈரான் தனது அடுத்த அட்டாக் நகர்வுகளை திட்டமிட்டுவதில் அமெரிக்கா ஒரு வேகத்தடை போடும் என்றே கணிக்கப்படுகிறது.