‘என்விடியா’ ஜென்சனின் ரகசிய உறவு ‘அமெரிக்க பாதுகாப்பு’ பிரச்சினையாக மாறியது ஏன்?

‘என்விடியா’ ஜென்சனின் ரகசிய உறவு ‘அமெரிக்க பாதுகாப்பு’ பிரச்சினையாக மாறியது ஏன்?
Updated on: 
5 min read

ஒரு ரகசிய உறவு, தொழில்நுட்ப உலகின் மிகப் பெரிய தலையை, அதாவது டெக் உலகின் ‘டெய்லர் ஸ்விஃப்ட்’ என்று அழைக்கப்பட்டவரை வீதிக்கு இழுத்துவிட்டதோடு நில்லாமல், அந்த விவகாரத்தை அமெரிக்காவின் பாதுகாப்பு பிரச்சினையாகவும் மாற்றியிருப்பது தான் இப்போதைக்கு உலகளாவிய பேசுபொருள்.

ஒரு தனிநபரின் பிரச்சினை எப்படி அமெரிக்க பாதுகாப்புப் பிரச்சினையானது என்பது குறித்து சற்று விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

ஏஐ யுகத்தில், அத்துறையில் கோலோச்சுவது யார் என்ற போட்டிக்குப் பஞ்சமில்லை. அதற்கு தீனிபோடும் மொபைல் / ஆட்டோமேட்டிவ் கம்ப்யூட்டிங் சிப்களை தயாரிக்கும் முன்னணி ஜாம்பவான் நிறுவனம் தான் ‘என்விடியா’. அதன் சிஇஒ ஜென்சன் ஹுவாங். சிப் உலகின் மையப் புள்ளியுமான அவருக்கு ‘டேடி ஹுவாங்’ (Daddy Huang) என்றொரு பெயரும் உண்டு.

யார் இந்த ஜென்சன் ஹுவாங்!

1963-ல் தைவானில் பிறந்தார் ஜென்சன் ஹுவாங். அவருக்கு 9 வயது இருக்கும்போதே அவருடைய பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம்பெயர அங்கேயே ஒரேகான் பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் அதே துறையில் முதுகலை பட்டமும் பெற்றதோடு ஏஎம்டி (AMD) என்ற சிப் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

அவருடைய மனைவி லோரி. ஒரேகானில் உடன் பயின்ற கல்லூரித் தோழி. 1985-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேடிசன், ஸ்பென்சர் என்று இரு குழந்தைகளும் உண்டு. ஜென்சன் எப்போதும் லெதர் ஜாக்கெட்டுடன் தான் இருப்பார். அது அவரது ‘சிக்னேச்சர் ஸ்டைல்’. அந்த அடையாளத்தைக் கொடுத்தது தனது மனைவி லோரியும், மகன் மேடிசன் என்று அடிக்கடி பெருமையாகக் கூறிக் கொள்வார். அந்த அளவுக்கு தன்னை ஒரு ‘ஃபேமிலி மேன்’ பிராண்டிங்கில் தன்னைப் பக்காவாகப் பொருத்திக் கொண்டவர் ஜென்சன்.

ஜென்சன் ஹுவாங் 1993-ம் ஆண்டு தன்னுடன் பணிபுரிந்த மின் பொறியாளர்களான கிறிஸ் மலச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகியோருடன் இணைந்து என்விடியா நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் முதலில், கணினி விளையாட்டுகளுக்கான கம்ப்யூட்டிங்கில் பெயர் பெற்றிருந்தது. பின்னர் அது தனது கவனத்தை ஏஐ துறைக்கு மாற்றியது. 2012-ம் ஆண்டு என்விடியாவின் மெஷின் லேர்னிங் நியூரல் நெட் ஆராய்ச்சியாளர்கள் அந்த சிப்-களை ஏஐ நோக்கத்துக்காக பயன்படுத்தத் தொடங்கினர்.

கணினியின் எதிர்காலமாகவும் ஏஐ இருக்கப் போகிறது என்பதை உணர்ந்த ஜென்சன், ஏஐ ஹார்டுவேர் சந்தையை உருவாக்குவதற்காக மிகப் பெரிய அளவில் வளங்களை கொட்டத் தொடங்கினார். உண்மையில், அப்போது அவர் உருவாக்கிக் கொண்டிருந்த ஹார்டுவேர்களுக்கு மார்க்கெட் கூட இல்லை. அவரின் முதல் வாடிக்கையாளர் அப்போது 30 பேர் மட்டுமே கொண்ட ஓபன் ஏஐ தான். தனது சிப்-களை ஓபன் ஏஐ-க்கு நன்கொடையாக அளித்தார் ஜென்சன். ஆனால், இப்போது என்விடியா சுமார் 4.5 டிரில்லியன் டாலர் மதிப்புடையது.

அதேபோல், தற்போதைய நிலவரப்படி, ஜென்சனின் சொத்து மதிப்பும் 115 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிடுகிறது ப்ளூம்பெர்க் பில்லினர் இன்டெக்ஸ். இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கு ஏஐ ஹார்டுவேரை உருவாக்கியவரும் ஜென்சனே.

ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய பெருமை கொண்ட 63 வயதான ஜென்சன் இப்போது சீன உளவாளி என்று சந்தேகப்படும் ஒரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்ததை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒப்புதலும், பகிரங்க மன்னிப்பும்

இது தொடர்பாக ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், “என் குடும்பத்தினரிடமும், உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் என் மனைவிக்கு துரோகம் இழைத்துவிட்டேன். என் செயல்கள் அவரையும் எங்கள் குழந்தைகளையும் காயப்படுத்திவிட்டது. நான் செய்ததற்கு எந்தவித சாக்குப்போக்கும் சொல்ல இயலாது. நான் மிகவும் வருந்துகிறேன்.

என் மனைவிக்கும் குடும்பத்துக்கும் ‘நான் உங்களை நேசிக்கிறேன்’ என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு மன்னிப்பால் நான் செய்ததை சரிசெய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் நம் குடும்பம் குணமடையும் என்றும், காலப்போக்கில் உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும் என்றும் நம்புகிறேன்.

பல ஆண்டுகளாக என்னுடன் பணிபுரிந்த என்விடியா சக ஊழியர்கள், எங்கள் வாரியம், கூட்டாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்குதாரர்கள் உட்பட அனைவருக்கும்: நீங்கள் என்னிடமிருந்து இதைவிட சிறந்ததை எதிர்பார்க்க தகுதியானவர்கள்.” என்று ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஆலிஸ் ஹுவாங் பற்றியும் தெரிந்து கொண்டால்தான் பிரச்சினையின் முழு வடிவமும் புரியும்.

யார் இந்த ஆலிஸ் ஹுவாங்?

ஆலிஸ் ஹுவாங் ஒரு சீன குடிமகள். ஜென்சனுக்கும் இவருக்கும் ஒரே குடும்பப் பெயர் இருந்தாலும், இருவருக்கும் எந்தவித குடும்ப உறவும் இல்லை.

இணையங்களில் கிடைக்கும் தகவலின்படி, ஆலிஸ் ஹுவாங் இதற்கு முன்பு ஹெச்எஸ்பிசி வங்கியிலும், சீன ஊடகங்களான சிசிடிவி மற்றும் ஹுவான் டிவி-யில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

<div class="paragraphs"><p>ஆலிஸ் ஹுவாங் உடன் ஜென்சன் ஹுவாங்</p></div>

ஆலிஸ் ஹுவாங் உடன் ஜென்சன் ஹுவாங்

படம்: எக்ஸ் பக்கத்தில் இருந்து

2024-ம் ஆண்டு நடைபெற்ற தொழில்துறை விருந்து ஒன்றில் எடுக்கப்பட்டு லிங்க்டுஇன் தளத்தில் வெளியான புகைப்படத்தில் ஜென்சனுக்கு அருகில், அமர்ந்திருப்பார். 2025-ல், தைவானின் கம்ப்யூடக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் ஒரு சீன உணவகத்தில் ஜென்சன் ஹுவாங் - ஆலிஸ் ஹுவாங் சந்தித்தனர். அப்போது, ஜென்சன் ஹுவாங், ஆலிஸ் ஹுவாங்கைச் சுற்றி கையைப் போட்டிருக்க, அவர் அவரது வலது கன்னத்தில் முத்தமிடுவது நேரடி ஒளிபரப்பில் வெளியானது.

ஒரு செய்திக் குறிப்பும் அதிர்வலைகளும்...

ஆலிஸ் ஹுவாங் இப்போது, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மெகாஸ்பீட் என்ற டேட்டா சென்டர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி. ஆனால் அவர், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் குறித்து உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்காக சீனாவால் நியமிக்கப்பட்டவர் என்றும், ஜென்சன் ஹுவாங் ஒரு உளவுச் சதித் திட்டத்தின் இலக்காக இருந்தார் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

ஏற்கெனவே, என்விடியா சிப்களை சீனாவுக்கு மடைமாற்ற உதவியதாக மெகாஸ்பீட் நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு தவறானது என நிரூபிக்கப்பட்டதாக என்விடியா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆலிஸ் ஹுவாங், அமெரிக்க குடிமகன் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்ததாகவும், ‘அன்மாஸ்கிங்’ எனப்படும் நடைமுறையின் மூலம் அடையாளம் காணப்பட்டபோது அந்த நபர் ‘என்விடியா’ தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் என்பது தெரியவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆலிஸ் ஹுவாங் என்ன மாதிரியான தகவல்களைக் கைப்பற்றி அதை சீனாவுக்கு தெரிவித்தார் என்பது பற்றி எந்த முழுமையான விவரமும் இல்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும் இது பற்றி கேட்டபோது ஆலிஸ் ஹுவாங்கும், என்விடியாவும் மவுனம் காத்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி செய்தி நிறுவனம் இதுபற்றி விசாரித்தபோது, “நாங்கள் உண்மையான அச்சுறுத்தலுக்கு இலக்காகியிருந்தால், அமெரிக்க அரசாங்கம் எங்களுக்கு தெரிவித்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று என்விடியா செய்தித் தொடர்பாளர் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதிகார யுத்தம்!

இந்த உலகின் புதிய பிரம்மாண்ட சக்தி ஏஐ தான். ஏஐ சக்தியின் ஆதிக்கம் எந்த நாட்டின் வசம் இருக்கிறதோ அந்த நாட்டின் வசம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலக அதிகாரம் இருக்கும். அந்த அதிகாரம் சீனாவின் கைகளுக்கு போய்விடக் கூடாது என்பது அமெரிக்காவின் பதற்றம். அதற்கு என்விடியா சிப்-கள் சீனாவுக்குக் கிடைக்கக் கூடாது என்பது அமெரிக்காவின் கவனம். இதனால்தான் சிப் ஏற்றுமதி விதிகளில் கடும் கெடுபிடியை அமெரிக்கா காட்டுகிறது. என்விடியா சிப் இல்லாமல் ஏஐ-யே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அபார சக்தியாக அந்த நிறுவனம் உள்ளது. இந்த சிப்களை சீனா அணுகி அதுபோல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால், சீனாவும் அமெரிக்காவுக்கு இணையாக வளரும்.

சாமானிய மக்களுக்கு ஏஐ வெறும் ஒரு டெக் அசிஸ்டென்ட், ஒரு சேட் பாட். ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசுக்கு ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பம். சைபர் தாக்குதல், மக்களை கண்காணிக்கிற அமைப்பு என எல்லாவற்றுக்கும் இதுவே அடிப்படை.

இந்த சிப் உருவாக்கத்தில் சீனா தனது தொழில்நுட்பத்தை ஈடு செய்துவிட்டால், சீன ராணுவம் பலமாகிவிடும் என்பது அமெரிக்காவின் கணிப்பு. அமெரிக்காவின் கண்டுபிடிப்பான சிப்-களில் சீனா சொந்தமாக உருவாக்கிவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அக்கறை இருக்கிறது.

அதனால் தான் அமெரிக்கா 2022-ல், ஏற்றுமதி கட்டுப்பாட்டு (Export Control) தடையை விதித்தது. அதன்படி என்விடியா சிப்களை சீனாவுக்கு நேரடியாக விற்க முடியாது. அப்படியிருக்க சிங்கப்பூர், மலேசியா மாதிரி நாடுகள் வழியாக சீனாவுக்கு போகிறதோ என்ற கண்காணிப்பை அமெரிக்கா தீவிரப்படுத்தியபோது தான் ‘கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல்’ ஜென்சன் ஹுவாங் - ஆலிஸ் ஹுவாங் பிரச்சினை வெடித்துள்ளது.

ஜென்சனுடனான நெருக்கமும், ட்ரம்ப்பின் நிலைப்பாடும்!

ஜென்சன் ஹுவாங், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு மிகவும் நெருக்கமான தொழில்நுட்ப ஆலோசகர்களில் ஒருவர். ட்ரம்ப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் அவர் உறுப்பினராக இருக்கிறார். கடந்த மே மாதம் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, கடைசி நேரத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறி அவருடன் பயணம் செய்தவர் ஜென்சன் என்பதை நினைவுகூர்வதால் அந்த நெருக்கத்தை இன்னும் ஆழமாக உணர முடியும்.

<div class="paragraphs"><p>அதிபர் ட்ரம்ப்புடன் ஜென்சன் ஹுவாங்</p></div>

அதிபர் ட்ரம்ப்புடன் ஜென்சன் ஹுவாங்

சீனாவுக்கு சிப் விற்பனை செய்வதற்கான தடையை ட்ரம்ப் தளர்த்தியதற்கு பின்னால் ஜென்சனின் நெருக்கமே காரணம் என்று கூட வாஷிங்டனில் பேச்சு உண்டு. மேலும், இவ்விவகாரம் குறித்து ட்ரம்ப்புக்கு ஓராண்டுக்கு முன்பே உளவுத்துறை தகவல் கொடுத்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியிருந்தது. என்விடியாவின் வணிகம் பாதிக்கப்படும் என்றும், சீனாவுடனான வர்த்தக உறவு சிக்கலாகும் என்றும் அவர் அமைதி காத்ததாக அந்தச் செய்தி கூறியது.

ஆனால், அதிபர் ட்ரம்ப், “நான் அவரிடம் இது பற்றி பேசவில்லை. ஜென்சன் ஒரு நல்ல மனிதர். நம் நாட்டுக்கு அவர் அற்புதமான பணியை செய்திருக்கிறார். அவர் ஒரு கவுரவமான மனிதர். அவரிடம் இதற்கு ஒரு காரணம் இருக்கும், அதை கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஜென்சன் சிஇஓவாக தொடர வேண்டுமா என்று கேட்டபோது, “ஆம், நிச்சயமாக” என்று பதிலளித்து, ஜென்சனை கைவிட மாட்டேன் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தச் சூழலில், என்விடியா வாரியம் தனது சுதந்திர விசாரணையை தொடங்கியுள்ளது. ஜென்சன் தொடர்ந்து சிஇஓவாக இருப்பார் என்று ட்ரம்ப் விரும்பினாலும் கூட, அமெரிக்க நாடாளுமன்றத்தின் விசாரணைக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

ஒரு தனிமனிதனின் தவறு, இனி ஒரு நாட்டின் பாதுகாப்பு விசாரணையாக எப்படி மாறும் என்பதைப் பற்றி உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது.

‘என்விடியா’ ஜென்சனின் ரகசிய உறவு ‘அமெரிக்க பாதுகாப்பு’ பிரச்சினையாக மாறியது ஏன்?
Jumping from High Places: பதற்றங்களைப் போக்கும் ‘பாயும் ஒளி’ சோலே | திரை தேவதைகள் 43

X