வாஷிங்டன் டி.சி.: “இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” என்று ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், “இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. இது நிகழ வேண்டும் என நான் விரும்பவில்லை. என்றாலும் அநேகமாக அதுதான் நடக்கும். எனினும், இப்போது நாம் ஒரு முழுமையான ஆட்சி மாற்றத்தை அடைந்திருப்பதால் அங்கு மாறுபட்ட, அதிக அறிவுக்கூர்மை கொண்ட, தீவிரவாத சாய்வற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன.
ஒருவேளை புரட்சிகரமான வகையில் ஏதேனும் ஒரு அற்புதம் நிகழக்கூடும். யாருக்குத் தெரியும்? உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்றிரவு, அதற்கான விடையை நாம் அறிந்து கொள்வோம்.
47 ஆண்டுகாலமாக நீடித்து வந்த மிரட்டிப் பறித்தல், ஊழல், கொலைகள் இறுதியாக ஒரு முடிவுக்கு வரும். ஈரானின் மகத்தான மக்களுக்கு இறைவன் அருள் புரிவானாக!” என்று தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப்பின் இந்த பதிவை அடுத்து இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், “இதுவரை பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்படாத சில கருவிகள் எங்கள் வசம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த ட்ரம்ப் முடிவெடுக்கலாம்.
ஈரானியர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர் நிச்சயமாக அவற்றைப் பயன்படுத்த முடிவெடுப்பார். ட்ரம்ப் ஏற்கெனவே நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்கு இணங்க இரவு 8 மணிக்குள் ஈரானிடம் இருந்து உரிய பதிலைப் பெற முடியும் என்பதில் அமெரிக்கா இப்போதும் நம்பிக்கையுடன் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “ஈரானுக்கான காலக்கெடு அமெரிக்க நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8:00 மணிக்குள் முடிவடைகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதற்குப் பிறகு, அவர்களுக்குப் பாலங்கள் ஏதும் இருக்காது. மின் நிலையங்கள் ஏதும் இருக்காது.
கற்காலம் போன்ற நிலைதான் இருக்கும். முழு நாடும் ஒரு இரவில் அழிக்கப்படக்கூடும். அந்த இரவு நாளைய இரவாகவும் இருக்கக்கூடும்” என்று எச்சரித்திருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை அடுத்து, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரானைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக இந்த கணம் வரை 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் பதிவு செய்துள்ளனர். நானும் ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய எந்தக் காலத்திலும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படை மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஈரானில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க ராணுவ தரப்பில் 13 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். சுமார் 700 அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 7,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.