சில்சார்: “அசாமில் வசித்து வரும் ஊடுருவல்கார்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டார்கள். இனி அவர்களை வெளியேற்றுவோம்” என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக அசாமை மாற்ற பாஜகவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அசாமின் சில்சாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க நீங்கள் அனைவரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்களிக்க வேண்டும். பாஜக அரசாங்கத்தை அமைக்க நீங்கள் தாமரைக்கு வாக்களிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நீங்கள் வாக்களிக்கப் போவது ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கவோ அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மாவை முதல்வராக்குவதற்கோ அல்ல. மாறாக, ஊடுருவல்காரர்களிடமிருந்து அசாமை விடுவிப்பதற்காகவே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சி அசாம் மாநிலத்தை சீரழித்தது. 1950 முதல் 2014 வரை, அவர்கள் ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து வருவதை அனுமதித்தனர். தாங்கள் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே, போடோக்களுக்கும் அசாமியர்களுக்கும் இடையிலும், அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையிலும் அவர்கள் தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தி வந்தனர்.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்த பிராந்தியம் அமைதியுடன் உள்ளது. காங்கிரஸ் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான இயக்கங்களைத் தூண்டிவிட்டு, அசாமைச் சீரழித்து வந்தது. கட்டுக்கடங்காத ஊடுருவல், குண்டுவெடிப்புகள் மற்றும் போராட்டங்கள் மூலம் அசாமின் வளர்ச்சியை முடக்கியது. போடோக்கள், வங்காளிகள் மற்றும் அசாமியர்களுக்கு இடையே மோதல்களைத் தூண்டிவிட்டு, காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொரு முறையும் அரசாங்கங்களை அமைத்தனர்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எந்தக் குண்டுவெடிப்பும், முழு அடைப்பும், ஊரடங்கும் ஏற்படவில்லை. ஏனெனில், நரேந்திர மோடி ஒன்றன்பின் ஒன்றாக 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, வடகிழக்கு முழுவதும் அமைதியைக் கொண்டுவரப் பாடுபட்டுள்ளார்.
நாங்கள் ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி வருகிறோம். இதனால், மம்தா பானர்ஜிக்கும், ராகுல் காந்திக்கும் வயிற்று வலி. அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தார்கள். வங்காள அகதி சகோதர சகோதரிகளின் வாக்குரிமையை எதிர்த்தார்கள். இப்போது ஊடுருவல்காரர்களை ஏற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் இவர்கள்தான் அவர்களின் வாக்கு வங்கி.
தாமரையை மலரை மலரச் செய்து, அசாமை மேம்படுத்துங்கள்; அசாமை ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுங்கள்; பராக் பள்ளத்தாக்கை வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதியாக மாற்றுவதற்குப் பாடுபடுங்கள்.
'துடிப்பான கிராமங்கள் திட்டம்-2' ரூ.7,000 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பில் இது ஒரு மிக முக்கியமான திட்டமாகும். குடியேற்றத்தைத் தடுக்கவும், ஊடுருவல்காரர்களை வெளியேற்றவும், மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும் நமது தலைவர் நரேந்திர மோடி இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜக அரசு அமைய உள்ளது. மேற்கு வங்கம் வழியாக அசாமுக்குள் ஊடுருவல்காரர்கள் நுழைவதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். முதல் ஐந்தாண்டுகளில், அசாமில் ஊடுருவலைத் தடுத்தோம். அடுத்த ஐந்தாண்டுகளில், அவர்களை அடையாளம் கண்டோம். அடுத்த, ஐந்தாண்டுகளில் அவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றுவோம்.
மம்தா பானர்ஜியும், ராகுல் காந்தியும் எவ்வளவுதான் கவலைப்பட்டாலும், பாஜக இந்த நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் ஒவ்வொருவராக அகற்றும்.
1991-ல் இந்த பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களில் இந்துக்களின் மக்கள் தொகை 38 லட்சமாக இருந்தது, அது இப்போது 36 லட்சமாக குறைந்துள்ளது. முஸ்லிம்களின் மக்கள் தொகை 39 லட்சமாக இருந்தது, அது இப்போது 64 லட்சமாக அதிகரித்துள்ளது, இதை ராகுல் காந்தி ஒரு வாக்கு வங்கியாகக் காண்கிறார்.
இயற்கைக்கு மாறான மக்கள்தொகை மாற்றத்தைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி, ஆகஸ்ட் 15, 2025 அன்று உயர் அதிகார மக்கள்தொகை ஆய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு, விரைவில் இதைத் தொடங்கும். பாஜக அரசாங்கம் அமைந்த பிறகு, அசாமின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை (UCC) அறிமுகப்படுத்துவோம்.
பிரதமர் மோடி முத்தலாக் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தார். எனினும் அதனை காங்கிரஸ் எதிர்த்தது. இப்போது, நாங்கள் பொது சிவில் சட்டத்தைக் (UCC) கொண்டுவருகிறோம்; இதையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். பொது சிவில் சட்டம் என்றால், யாரும் நான்கு திருமணங்கள் செய்துகொள்ள முடியாது என்பதே பொருளாகும். மே 5-ஆம் தேதி, அசாமில் பாஜக ஆட்சியை அமைத்திடுங்கள்; நாங்கள் இங்கு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்” என தெரிவித்தார்.