

துபாய்: வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என ஈரானும் அமெரிக்காவும் பரஸ்பரம் உரிமை கோரி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரானிய பசீஜ் ராணுவப் பிரிவின் புதிய தலைவர் ஹொசைன் தாயெப், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹொசைன் தாயெப் கூறும்போது, “பிராந்தியத்தில் ஈரானுக்கு இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்க அமெரிக்கா போரைத் தொடங்கியது. ஆனால், ஈரானிடம் கடற்படையோ, விமானப்படையோ இல்லை என்று கூறிய அமெரிக்கா மீண்டும் அதில் தோல்வியையே தழுவியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் முழுப் பாதுகாப்போடு தொடர்ந்து இயங்கி வருகிறது” என்றார்.
கடந்த பிப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றிலுமாக மூடியது.இதைத் தொடர்ந்து ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தொடங்கியதுடன், பிற நாடுகளின் கப்பல் போக்குவரத்து் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அறிவித்தது.
முன்னதாக, ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, வளைகுடாவில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளுக்கு மாறாக செயல்படுவதாக கூறி கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் இந்த ஒப்பந்தம் முறிந்தது.
இந்நிலையில் ஈரானிய மூத்த ராணுவ அதிகாரி ரசூல் சனாய்-ராத் பேசுகையில், “ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது. எதிர்காலத்தில் மீண்டும் போர் மூண்டால் ஈரான் இன்னும் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும்” என எச்சரித்துள்ளார்.