சிறையில் இம்ரான் கான் நிலை என்ன? - பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களால் பதற்றம்

3 சகோதரிகள், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் மீது போலீஸ் கடும் தாக்குதல்
சிறையில் இம்ரான் கான் நிலை என்ன? - பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களால் பதற்றம்
Updated on
2 min read

ராவல்பிண்டி: பாகிஸ்தான் சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டு விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ராவல்பிண்டி சிறைக்கு வெளியில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள் திரண்டு ரகளையில் ஈடுபட்டனர். இம்ரான் கானின் சகோதரிகள் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமரானார். இதையடுத்து 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் இருந்தார். கூட்டணிக் கட்சிகளே திடீரென ஆதரவை விலக்கி கொண்டதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராவல்பிண்டி நகரின் அடியாலா சிறையில் அவர் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்நிலையில், நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி சிறையில் இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் நோரின் நியாஸி, அலீமா கான், உஸ்மா கான் ஆகிய 3 பேர் வந்தனர். ஆனால், இம்ரானை சந்திக்க அவர்களுக்கு போலீஸாரும் சிறை நிர்வாகத்தினரும் அனுமதி தரவில்லை.

இதனால் அவர்களும் இம்ரானின் பிடிஐ கட்சி தொண்டர்கள் ஏராள மானோரும் சிறைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இம்ரான் கானின் தங்கை நோரின் நியாஸி கூறும்போது, “அண்ணன் இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்றுதான் சிறைக்கு சென்றோம். நாங்கள் அமைதியான முறையில்தான் சிறைக்கு வெளியில் போராடினோம். எங்கள் அண்ணன் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளது. திடீரென அங்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, பஞ்சாப் மாகாண போலீஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எனக்கு 71 வயதாகிறது, எனது தலை முடியைப் பிடித்து சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தரையில் தள்ளினர். இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அடியாலா சிறைக்குள் வைத்து, இம்ரான் கானை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துவிட்டதாகவும், அவரை போலீஸார் கடுமையாக தாக்கி இருப்பதாகவும் சமூக வலைதளப் பதிவுகள் ஏராளமாக வெளியாயின. இந்த பதிவுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவந்தன.

இதையடுத்து அடியாலா சிறை வளாகத்தில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர். இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்று அவர்கள் சிறை வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிடிஐ கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து இரவு, பகலாக சிறை வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பிடிஐ கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘சிறையில் இம்ரான் கானை ராணுவம் கொலை செய்துவிட்டது என்று பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள ‘ஆப்கன் டைம்ஸ்’ என்ற பத்திரிகைக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் சென்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இம்ரான் சிறையில் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடலை சிறையில் இருந்து அப்புறப்படுத்தி இருப்பதாகவும் அங்கிருந்து தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இம்ரானை பார்க்க அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்தில், அவரை யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஸ்டிரெச்சரில் படுத்திருக்கும் ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இம்ரான் கான் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து சில வீடியோக்கள் பரவி வருகின்றன. எனினும், இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை.

எனினும் அடியாலா சிறையில் இருந்த இம்ரான் கானை, சிறை அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றி இருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, இம்ரான் கானை யாரும் சந்திக்கவிடாமல் அதிகாரப்பூர்வமற்ற தடையை விதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் கடந்த சில வாரங்களாக அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சிறையில் இம்ரான் கான் நிலை என்ன? - பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களால் பதற்றம்
விஜய் உடன் கைகோக்கும் செங்கோட்டையன் - தவெக பலம் கூடுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in