

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி
டெஹ்ரான்: அமெரிக்காவின் 14 அம்ச அமைதி திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று ஈரான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த சூழலில் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க 14 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்து உள்ளது.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு யுரேனியத்தை செறிவூட்டக்கூடாது. தற்போது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு பதிலாக அமெரிக்காவின் பொருளாதார தடையால் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துகள், நிதி ஆதாரங்கள் விடுவிக்கப்படும் என்பன உள்ளிட்ட 14 அம்ச திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்திருக்கிறது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, “அமெரிக்காவின் அமைதி திட்டத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். எங்களது முடிவை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு தெரிவிப்போம்” என்றார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, “அமெரிக்கா உடனான ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈரானின் கை ஓங்கியிருக்கிறது. நியாயமான அமைதி ஒப்பந்தத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வோம்” என்றார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று முன்தினம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது பெசெஷ்கியன் கூறும்போது, “சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்ட அமைதி பேச்சுவார்த்தை மூலம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க ஈரான் விரும்புகிறது. அதேநேரம் ஈரான் மக்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார்.
அதிபர் ட்ரம்ப் கருத்து: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறும்போது, “ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த நாட்டுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட வாய்ப்பிருக்கிறது.
48 மணி நேரத்துக்குள் ஈரான் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை அமைதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். ஈரான் நரகமாக மாறும்” என்று தெரிவித்தார்.