

டெஹ்ரான்/டெல் அவிவ்: ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் மோதல் இன்று 6-வது நாளை எட்டியது. ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் புதிய தாக்குதலை நேற்று நடத்தியது.
ஈரான் மீதான தாக்குல் இன்று 6-வது நாளை எட்டியது. நேற்று அதிகாலையிலேயே ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தம் கேட்டது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டி உள்ளது.
அத்துடன் லெபனான் மீது புதிதாக இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. லெபனானின் ஹிஸ்புல் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்தனர். அதற்கு பதில் தாக்குதலாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில் பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரசு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. அத்துடன் இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தங்கள் வான் பாதுகாப்பு கருவிகளை ஆக்டிவேட் செய்துள்ளதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எப்பி டெப்ரின் கூறுகையில்,”ஈரானில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க மதத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஈரானின் குவாம் என்ற நகரில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கட்டிடத்தின் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோம். இதில் ஏற்பட்ட சேதம் குறித்து எங்கள் ராணுவத்தினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்” என்றார்.
இதற்கிடையில், அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணி கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெறவில்லை என்று ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை எங்களுக்கு உள்ளது. எங்களுடைய அணுசக்தி திட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான எங்கள் தாக்குதல் தீவிரமாகத் தொடரும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளது.
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 2 ட்ரோன்கள் தாக்கியதில் சேதம் அடைந்தது என்று சவுதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பார்க்கிங் பகுதியில் ஈரானின் ட்ரோன்கள் தாக்கின. இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள், குடும்பத்தினர் உடனடியாக வெளியேறும் படி அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செம்பிறை சொசைட்டி தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் ஈரான் தாக்கு தலில் அமெரிக்காவின் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு: அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட காமேனியின் (86) உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, டெஹ்ரானில் நேற்று மாலை நடைபெறவிருந்தது. இந்த நிலையில்,தேசத்தின் வழிகாட்டியான இமாமுக்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் ஊடகம் நேற்று தெரிவித்தது.
முன்னதாக, அவருக்கு 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனி பெரிய மசூதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காமேனியின் உடல், அவரது சொந்த ஊரான வடகிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஹாத் நகரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஈரான் மூத்த ஷியா மத குரு கிராண்ட் அயதுல்லா அலி சிஸ்தானி கூறும்போது, "உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சுதந்திரத்தை நேசிப்பவர்களும் இந்தப் போரை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும்; ஈரான் மக்களுடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.
ஈரான் போர் விமானத்தை வீழ்த்திய இஸ்ரேலின் எப்-35: டெஹ்ரான்: இஸ்ரேலின் எப்-35 ரக போர் விமானம் முதல் முறையாக ஈரானின் யாக்-130 ரக போர் விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானங்கள் நேற்று சென்றன.
இஸ்ரேலின் எப்-35 ரக போர் விமானம்
ஈரானின் பல இலக்குகள் மீது எப்-35 விமானங்கள் குண்டு வீசியபோது, ஈரான் விமானப் படையின் யாக்-130 ரக போர் விமானம் ஒன்று நடுவானில் இடைமறித்து தாக்க முயன்றது. அந்த விமானத்தை இஸ்ரேலின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரேல் விமானப்படையின் எப்-35 போர் விமானம், எதிரி நாட்டு விமானத்தை நடுவானில் இடைமறித்து தாக்கியது இதுவே முதல் முறை ஆகும். சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானின் யாக்-130 ரக விமானம் ரஷ்ய தயாரிப்பு விமானம் ஆகும்.