

டாக்கா: வங்கதேசத்தில் மர்ம கும்பல் தாக்கியதில் இந்து மதத்தை சேர்ந்த 3-வது நபர் நேற்று உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றது. அதன்பிறகு கடந்த மாதம் மாணவர்கள் மீண்டும் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. கடந்த மாதம் மட்டும் 2 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி, வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் வசித்த ஜவுளி ஆலை தொழிலாளி திபு சந்திர தாஸ் என்பவரை வன்முறை கும்பல் கடுமையாக தாக்கி கொன்றது. அதன்பின் அவரது உடலை மரத்தில் கட்டி எரித்தது. அதன்பின், கலிமோஹர் யூனியன் பகுதியிலில் ஹோசன்டங்கா கிராமத்தில் அம்ரித் மண்டல் என்பவரை வன்முறை கும்பல் கொன்றது.
இந்நிலையில், கோனேஷ்வர் யூனியன் டிலோய் கிராமத்தில் மருந்து கடை நடத்தி வந்த கோகன் தாஸ் என்பவரை கடந்த புதன்கிழமை இரவு மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. இதையடுத்து பயங்கர அலறலுடன் கோகன் தாஸ், அருகில் இருந்த குளத்தில் குதித்தார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தின் ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்து மர்ம கும்பல் தப்பிவிட்டது. பின்னர் கோகன் தாஸை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தாஸ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கடந்த புதன்கிழமை மருந்து கடையை மூடிவிட்டு கோகன் தாஸ் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது வழிமறித்து மர்ம கும்பல் தாக்கி உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.