

புதுடெல்லி: டெல்லியில் நேற்று புத்தர் நினைவு கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
‘ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச் சின்னங்கள்' என்ற பெயரில் புத்தருடன் தொடர்புடைய புனித நினைவுச் சின்னங்களின் பிரம்மாண்ட சர்வதேச கண்காட்சி டெல்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அடிமைத்தன காலத்தின்போது இந்தியாவில் இருந்து புத்தரின் நினைவுச் சின்னங்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஏலம் விடப்பட்டன. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தியது. சில நிறுவனங்களின் உதவியால் சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரின் நினைவுச் சின்னங்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
கடந்த சில மாதங்களில் தாய்லாந்து, வியட்நாம், மங்கோலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் புத்தரின் நினைவுச் சின்னங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பகவான் புத்தர் எல்லோருக்கும் சொந்தமானவர். அவர் ஒட்டுமொத்த உலகத்தையும் இணைக்கிறார்.
எனது வாழ்க்கைக்கும் பகவான் புத்தருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனது சொந்த ஊரான வட்நகர், புத்த மத போதனைகளின் மிக முக்கிய மையமாக விளங்கியது. தற்போது நான் வாராணசி எம்பியாக உள்ளேன். எனது தொகுதியில் உள்ள சாரநாத்தில் புத்தர் தனது முதல் போதனையை தொடங்கினார்.
பிரதமர் என்ற வகையில் சீனா, ஜப்பான், மங்கோலியா, இலங்கை, சிங்கப்பூரில் உள்ள புத்த மதத் தலங்களை பார்வையிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் சீனா, ஜப்பான், கொரியா, மங்கோலியாவுக்கு செல்லும் போதெல்லாம் போதி மரக் கன்றுகளையும் எடுத்துச் செல்கிறேன்.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள புத்த வழிபாட்டு தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீரின் பாரமுல்லாவில் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான புத்த வழிபாட்டுத் தலம் சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. அதை பாதுகாத்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புத்தர் பாலி மொழியில் போதனை செய்தார். அந்த மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. புத்தரின் போதனைகளை இந்தியா பின்பற்றுகிறது. இதன் காரணமாகவே இது போருக்கான காலம் இல்லை என்று கூறி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.