

கராகஸ்: வெனிசுலாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போதைப் பொருள் கடத்தியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படையினர் சிறைபிடித்தனர். பின்னர், அவர்களை போர்க் கப்பலில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம், அமெரிக்காவுக்குள் டன் கணக்கில் கோகைனை இறக்குமதி செய்தது மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் 61 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மதுரோ அமெரிக்காவை வம்பிழுக்கும் காட்சிகளும், மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்ய நடத்தப்பட்ட அதிரடி சோதனைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவில், வெனிசுலா மீதான தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அப்போது, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், “மதுரோ வம்பிழுத்தார், அதன் விளைவை அனுபவித்தார்” என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.பொதுச் செயலர் கண்டனம்: வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்குமாறு துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸுக்கு (56) அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புட்டபர்த்தி சாய் பாபா பக்தர்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டில் வெனிசுலாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார். அப்போது தனிப் பட்ட பயணமாக அவர் புட்டபர்த்திக்கு வருகை தந்து, சாய்பாபாவிடம் ஆசி பெற்றார்.
ட்ரம்புக்கு சவால் விட்ட மதுரோ: கடந்த ஆகஸ்ட் மாதம் நிக்கோலஸ் மதுரோ ஆவேசமாக பேசும்போது, “வா, என்னைப் பிடி. மிராபுளோரஸில் (அதிபர் மாளிகை) உனக்காக நான் காத்திருப்பேன். கோழையே, தாமதமாக வராதே” என ட்ரம்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்ததாக கூறப்படுகிறது. இது ட்ரம்பை ஆத்திரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்க ராணுவம் கடந்த சில மாதங்களாக மதுரோவை சிறைபிடிக்க திட்டமிட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
மதுரோ பிடிபட்டது எப்படி?: அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ‘டெல்டா போர்ஸ்’ உள்ளிட்ட சிறப்புப் படைகள் பங்கேற்ற, டொனால்டு ட்ரம்ப் தொடங்கிய “ஆபரேஷன் அப் சல்யூட் ரிசால்வ்” நடவடிக்கையின் மூலம் நிக்கோலஸ் மதுரோ பிடிபட்டார். வெனிசுலா அதிபரைக் கைது செய்ய இந்த குழுவினருக்கு சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே ஆனதாகக் கூறப்படுகிறது.
மதுரோ, எஃகு மூலம் பலப்படுத்தப்பட்ட தனது பாதுகாப்பான அறைக்கு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது, வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். ஆகஸ்ட் முதலே அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் ரகசியமாகக் கண்காணித்துள்ளனர்.
அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் நேற்று முன்தினம் கூறும்போது, “அவர் எப்படி நகர்ந்தார், எங்கே வசித்தார், எங்கே பயணம் செய்தார், என்ன சாப்பிட்டார், என்ன உடை அணிந்தார், அவருடைய செல்லப்பிராணிகள் என்ன என்பது வரை அனைத்தும் கண்காணிக்கப்பட்டன” என்றார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “இந்தத் திட்டம் பல மாத கால துல்லியமான திட்டமிடல் மற்றும் ஒத்திகைகளை உள்ளடக்கியிருந்தது. குறிப்பாக, மதுரோ தங்கியிருந்த இல்லத்தைப் போன்றே ஒரு மாதிரி வீட்டை அமெரிக்கப் படைகள் உருவாக்கி ஒத்திகை பார்த்தனர். மதுரோவை பிடிக்கும் நடவடிக்கையை நேரலையில் பார்த்தேன்” என்றார்.