டாலரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த... - வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் பின்புலம்

டாலரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த... - வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் பின்புலம்
Updated on
2 min read

புதுடெல்லி: உலகின் மொத்த எண்​ணெய் வளத்​தில் 18% வெனிசுலா​வில் உள்​ளது. அதற்கு அடுத்து சவுதி அரேபி​யா​வில் 15%, ஈரானில் 12%, கனடா​வில் 10%, இராக்​கில் 8.5%, குவைத்​தில் 6%, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் 5.8%, ரஷ்​யா​வில் 4.7%, லிபி​யா​வில் 2.9%, அமெரிக்​கா​வில் 2.6% சதவீத எண்​ணெய் வளம் இருக்​கிறது.

கச்சா எண்​ணெய் விற்​பனை தொடர்​பாக கடந்த 1970-ம் ஆண்​டில் சவுதி அரேபி​யா​வுடன் அமெரிக்கா முக்​கிய ஒப்​பந்​தத்தை மேற்கொண்​டது. இதன்​படி அமெரிக்க டாலரில் மட்​டுமே கச்சா எண்ணெய் வணி​கம் நடை​பெற வேண்​டும் என்று கட்​டுப்​பாடு விதிக்கப்​பட்​டது. இதனால் உலகின் எண்​ணெய் வணி​கம் 100% அளவுக்கு அமெரிக்க டாலரில் நடை​பெற்று வந்​தது.

உக்​ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா​வும் ஐரோப்​பிய நாடுகளும் பல்​வேறு பொருளா​தார தடைகளை விதித்​தன. இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்​குமதி செய்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையிலான எண்​ணெய் வணி​கத்​தில் ரஷ்​யா​வின் ரூபிள், சீனாவின் யுவான் கரன்சி பரி​மாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கிறது.

உலக எண்​ணெய் வளத்​தில் முதலிடத்​தில் இருக்​கும் வெனிசுலாவுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே கடந்த 25 ஆண்டு​களுக்​கும் மேலாக மோதல் நீடிக்​கிறது. இதன் எதிர்விளைவாக வெனிசுலா​வின் எண்​ணெய் வணி​கத்​தில் சீனா ஆழமாக கால் பதித்து உள்​ளது. அந்த நாட்​டில் இருந்து சுமார் 70 முதல் 90 சதவீத கச்சா எண்​ணெயை சீனா இறக்​குமதி செய்து வந்தது. இரு நாடு​கள் இடையே யுவான் கரன்​சி​யில் எண்​ணெய் வணி​கம் நடை​பெற்​றது.

இதன்​ காரண​மாக உலக கச்சா எண்​ணெய் வணி​கத்​தில் அமெரிக்க டாலரின் பங்கு 100-லிருந்து 80 சதவீத​மாக குறைந்து உள்​ளது. ரஷ்யா​வின் ரூபிள், சீனா​வின் யுவான், இந்​திய ரூபா​யில் சுமார் 20% எண்​ணெய் வணி​கம் நடை​பெற்று வரு​கிறது. இதே நிலை நீடித்​தால் எண்​ணெய் வணி​கத்​தில் அமெரிக்க டாலரின் ஆதிக்​கம் படிப்​படி​யாக குறைந்து இதர நாடு​களின் கரன்​சிகள் கோலோச்ச தொடங்​கும் என்று அமெரிக்கா அஞ்​சுகிறது.

இதை தடுக்க வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி உள்​ளது. இதன்​மூலம் ஒரே கல்​லில் இரண்டு மாங்​காயை அமெரிக்கா அடித்​திருக்​கிறது. வரும் காலத்​தில் வெனிசுலா​வின் ஒட்​டுமொத்த எண்​ணெய் வளமும் அமெரிக்காவின் வசமாகி டாலரின் ஆதிக்​கம் அதி​கரிக்​கும். அதோடு சீனா​வின் ஆதிக்கத்துக்கும் முற்​றுப்​ புள்ளி வைக்கப்படும்.

எண்​ணெய் விலை குறை​யும்: அமெரிக்க பொருளா​தார தடைகளால் வெனிசுலா​வில் தற்​போது 10% அளவுக்கே கச்சா எண்ணெய் உற்​பத்தி நடை​பெறுகிறது. அமெரிக்​கா​வின் கட்டுப்பாட்டின் கீழ் வெனிசுலா முழு​மை​யாக வரும் ​போது 100% எண்​ணெய் உற்​பத்தி தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதன்​காரண​மாக உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய் விலை குறைய வாய்ப்​பிருக்​கிறது என்று பொருளா​தார நிபுணர்​கள் தெரிவித்​துள்​ளனர்.

இந்திய நிறுவனத்துக்கு ரூ.9,000 கோடி கிடைக்கும்: ஒரு காலத்தில் வெனிசுலாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. தினமும் 4 லட்சம் பேரல்கள் வரை இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் அமெரிக்க அரசு விதித்த பொருளாதார தடைகளால் கடந்த 2020-ம் ஆண்டில் வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டது.

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஒஎன்ஜிசி விதேஷ் லிமிடெட், வெனிசுலாவின் சான் கிறிஸ்டோபல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதற்காக வெனிசுலா அரசு நிறுவனமான பிடிவிஎஸ்ஏ, ஒஎன்ஜிசி-க்கு ரூ.9,000 கோடியை வழங்க வேண்டும். வெனிசுலாவின் பொருளாதார நெருக்கடியால் இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வெனிசுலா கொண்டு வரப்படுவதால் அந்த நாட்டில் கச்சா எண்ணெய் வணிகம் மீண்டும் எழுச்சி பெறும். இந்தியாவின் ஒஎன்ஜிசி-க்கு கிடைக்க வேண்டிய ரூ.9,000 கோடி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் இந்​தி​யா​வின் பொதுத்​துறை நிறு​வன​மான ஒஎன்​ஜிசி விதேஷ் மற்​றும்​ ரிலை​யன்​ஸ்​ குழு​மம்​ ஆகியவை வெனிசுலா​வில்​ மீண்​டும்​ ​கால்​ பதிக்​கக்​கூடும்​ என்​று எதிர்​​பார்​க்​கப்​படுகிறது.

டாலரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த... - வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் பின்புலம்
நியூயார்க் சிறையில் வெனிசுலா​ அதிபர்: போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in