

வாஷிங்டன்: வெளிநாடுகளில் ஈரான் நடத்தும் தாக்குதல்கள், சதித்திட்டங்கள், மற்றும் இணையவழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 29 நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் ரகசிய வலையமைப்புகள் மீது சர்வதேச அளவில் விசாரணையும் நடவடிக்கைகளும் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள ராயல் ஏர் போர்ஸ் ஃபேர்போர்ட் விமானப்படைத் தளத்தில் கடந்த செப். 27 அன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் ஐரோப்பா முழுவதும் சமீபத்தில் பதிவான பல தாக்குதல்களின் பின்னணியில் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களை அடைவதற்காக வெளிநாடுகளில் வன்முறையைப் பயன்படுத்துவது, படுகொலை சதிகளில் ஈடுபடுவது மற்றும் அரசு நிறுவனங்களை குறிவைத்து இணையவழித் தாக்குதல்களைத் தொடுப்பது போன்றவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாடுகளின் இறையாண்மைக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் சவாலாக விளங்கும் ஈரான் ஆதரவு முகவர்கள் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் இணையவழித் தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதில் மேற்கத்திய நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 29 நாடுகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட தடைகள், நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை.